உலகிலேயே விலை உயர்ந்த மாணிக்க கல்லை விற்பனை செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.
உலகிலேயே மிகவும் பெறுமதியானது என கூறப்பட்ட 510 கிலோகிராம் எடையுடைய மணிக்கக்கல் கொத்தணியை விற்பனை செய்ய முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது.
இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக சுவிஸர்லாந்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அந்த கல்லை விற்பனை செய்ய முடியாது மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவாளர்கள் இல்லாமையே, இதற்கான காரணம் என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் பெறுமதியாக இரண்டு மாணிக்கக்கற்கள், 2021ம் ஆண்டு இருவேறு சந்தர்ப்பங்களில் கண்டெடுக்கப்பட்டன..
இரத்தினபுரி பகுதியில் இந்த இரு கற்களும் கண்டெடுக்கப்பட்டன.
பெறுமதி கூற முடியாதளவிற்கு, இந்த கற்கள் பெறுமதியானவை என அந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இரத்தினபுரி - பலாங்கொடை பகுதியிலுள்ள மாணிக்கக்கல் அகழ்வு 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 310 கிலோகிராம் எடையுடைய மாணிக்கக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது ஆசியாவின் ராணி என வர்ணிக்கப்பட்டது.
இந்த மாணிக்கக்கல் 15 லட்சத்து 50 ஆயிரம் கரட் எடையுடையது என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை கூறுகின்றது.
அதேபோன்று, இரத்தினபுரி - கஹவத்தை பகுதியிலுள்ள மற்றுமொரு பெறுமதியான மாணிக்கக்கல் கண்டெடுக்கப்பட்டது.
2021ம் ஆண்டு ஜுலை மாதம் இந்த மாணிக்கக்கல் கண்டெடுக்கப்பட்டது.
இது உலகத்திலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக்கல் கொத்தணி என கூறப்பட்டது.
இவ்வாறு எடுக்கப்பட்ட மாணிக்கக்கல் கொத்தணி, துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும், இந்த கல்லை விற்பனை செய்துக்கொள்ள முடியாது நிலைமை காரணமாக, குறித்த மாணிக்கக்கல் கொத்தணி மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல் கொத்தணி, மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
''இந்த கல் சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாணிக்கக்கல் கொத்தணி, உலகிலேயே மிகப் பெரிய மாணிக்கக்கல் கொத்தணி என கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், துரதிஷ்டவசமாக இந்த கல்லை கொள்வனவு செய்யும் வகையில் ஒருவரை தேடிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கல்லை விற்பனை செய்துக்கொள்ள முடியாது, மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கல்லின் உரிமையாளர்களுடன் நாம் கலந்துரையாடினோம். இந்த கல்லை கொள்வனவு செய்யும் வகையில் ஒருவர் கிடைக்கப் பெறும் பட்சத்தில், இந்த கல்லை ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளோம்" என அவர் கூறுகின்றார்.
ஏல விற்பனையின் போது, இந்த கல் விற்பனைக்காக வைக்கப்பட்டதா என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வாவிடம் கேள்வி எழுப்பினோம்.
''ஆம், ஏல விற்பனைக்கு விடப்பட்டது. அதேபோன்று தனிப்பட்ட ரீதியில் கொள்வனவாளர்களை தேடியுள்ளார்கள். எனினும், சரியான கொள்வனவாளர் ஒருவரை தேடிக் கொள்ள முடியவில்லை என்றே கூறுகின்றார்கள். இது அருங்காட்சிய பெறுமதியை கொண்ட மாணிக்கக்கல் என அவதானிக்க முடிகின்றது" என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இவ்வாறான பாரிய மாணிக்கக்கற்கள் தொடர்பில் தனக்கு அறிய கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறு கொத்தணிகளாக கிடைக்கும் மாணிக்கக்கற்களுக்கு புதிய சந்தை வாய்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவிக்கின்றார்.