இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. 10 சிங்களவர்களும், நான்கு முஸ்லிம்களும் இந்த செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ள பின்னணியில், ஒரு தமிழ் பிரதிநிதி கூட இதில் இல்லை.
ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம் அளிக்கப்படாதது மற்றும் அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி பதில் அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன், ''ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான வர்த்தமானி'' வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
''ஒரே நாடு ஒரே சட்டம்'' என்ற விடயதானத்தை ஆராய்ந்து, அதற்கான சட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
இலங்கையில் பல்வேறு வகையிலும் சர்ச்சைக்குள்ளான பௌத்த தேரராக விளங்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை, சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஜனாதிபதி செயலணியில் 13 அங்கத்தவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம்:
1. கலகொடஅத்தே ஞானசார தேரர் (தலைவர்)
2. பேராசிரியர் தயானந்த பண்டார
3. பேராசிரியர் ஷாந்தினந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன
5. என்.ஜி.சுஜீவ பண்டித்தரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் சேனெவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்ஜய மாரபே
8. எரந்த நவரத்ன
9. பானி வெவல
10. மௌலவி மொஹமட் (காலி உலமா சபை)
11. மொஹமட் இன்திகாப்
12. கலீல் ரஹ{மான்
13. அயிஸ் நிஷார்தீன்
யார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர்?
கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளராக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடமையாற்றி வருகின்றார்;.
இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஓர் இனவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர் என்பதே இலங்கையிலுள்ள பெரும்பாலானோரது கருத்தாக காணப்படுகின்றது.
இலங்கையில் இனம் சார்ந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் பிரச்னைகளில் கலகொடஅத்தே ஞானசார தேரரும் முன்னின்று செயற்பட்டவராக கருதப்படுகின்றார்.
அத்துடன், நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு தேரராக அவர் காணப்படுகின்றார்.
2017ம் ஆண்டு போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆறு வருட சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்திருந்தது.
ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், 2019ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தவைராக நியமிக்கப்பட்டுள்ளமை, பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாவிட்டால், ஒரு குழுவை அமைப்பதற்கான நோக்கம் என்ன? இந்த குழுவை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமித்தது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டமற்ற ஒருவரை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான ஒருவரை இந்த குழுவிற்கு இணைக்க வேண்டாம் என சட்டத்தரணி ஹரித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம் அளிக்கப்படாதது மற்றும் அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ், ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்கவிடம் வினவியது.
எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில், கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்டவர்களின் பங்குப்பற்றுதலுடன் நடைபெறும் ஊடக சந்திப்பில் இதற்கான பதில் வழங்கப்படும் என அவர் கூறினார்.