Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை பொருளாதார நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம் - காரணம் என்ன?

Sri Lanka
, வியாழன், 23 ஜூன் 2022 (10:15 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் நேற்றோடு 75 வது நாளை எட்டியது.

சுமார் ஒரு மாத காலம் போராட்டம் வலுப் பெற்ற நிலையில், மே மாதம் 9 ஆம் தேதி போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றது.

அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடலை நோக்கி வருகைத் தந்து, அரசாங்கத்திற்கு எதிராக தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து, காலி முகத்திடலில் மாத்திரமன்றி, நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பெரும்பாலானோரின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், 10ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். அத்துடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்த போராட்டம் மீண்டும் வலுவிழக்க ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து நடத்தப்படும் போராட்டம் நேற்றோடு 75வது நாளாக தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 20ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மறித்த போராட்டக்காரர்கள், நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து பேராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அன்று காலை வருகைத் தந்த போலீஸார், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன்போது, போலீஸாரினால் 21 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக போராட்டக்காரர்கள் கடந்த 20ம் தேதி அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் கொழும்பில் பெண்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள பிரத்யேக வீட்டு வளாகத்தில் ஒன்று கூடிய பெண்கள், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, மகஜரொன்றை கையளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இந்த பெண்களின் கோரிக்கைக்கு, போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து, அந்த பகுதியில் அமைதியின்மை நிலவியது.

போலீஸாரினால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளுக்கு மேல் ஏறி, பிரதமரின் வீட்டு வளாகத்திற்குள் செல்ல ஹிருணிகா பிரேமசந்திர தலைமையிலான பெண்கள் முயற்சித்திருந்தனர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் கோரிக்கை இறுதி வரை நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த சுமதி, பிபிசி தமிழிடம் பேசினார்.

''10 நாட்களாக நாங்கள் மண்ணெண்ணை வரிசையில் காத்திருக்கின்றோம். பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டே காத்திருக்கின்றோம். 17, 18 வயது பிள்ளைகள் எங்களுக்கு. அவர்களையும் நாங்கள் வீதிக்கு இறக்கியுள்ளோம். பள்ளி கூடம் போக முடியாது. காலையில சாப்பிட சாப்பாடு இல்ல. நான் புட்டு அவித்து விற்று தான் பிள்ளைகளை வளர்க்கின்றேன். எனக்கு அதையும் செய்ய முடியவில்லை. கேஸ் இல்லை. இரவு இரவாக வரிசையில் என்னோட கணவர் காத்திருக்கின்றார். உதவி செய்ய யாரும் இல்ல. அரசாங்கத்திடம் நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. கேஸ், மண்ணெண்ணை மாத்திரம் தந்தால் மட்டும் போதும், நாங்கள் உழைத்து வாழ்கின்றோம்." என சுமதி கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.

பிரதமர் ரணில் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற நினைப்பதாகவும் எனவே அவர் பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.

"அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது. நாளுக்கு நாள் இந்த கள்ள சந்தையிலே வெவ்வேறு விலைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பால்மா இல்லை. கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், பெண்களுக்கான உணவுகள் இல்லை. ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் வரிசையில் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால், அழுத்தங்கள் ஏற்பட்டு, மரணங்கள் கூட ஏற்படுகின்றன. பிரதமர், ஒவ்வொரு நாளும் ஜோதிடரை போல தகவல் சொல்கின்றார். இன்னும் இரண்டு வாரங்கள் பொருத்துக்கொள்ளுங்கள், கேஸ் கப்பல் வந்திருக்கின்றது. எரிபொருள் கப்பல் வந்திருக்கின்றது என்று.

யார் என்றாலும், மக்களுக்கு நிலையாக ஆட்சியை கொடுக்க வேண்டும். இவ்வளவு வரிசையில் மக்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது, பெண்கள் நாங்கள் ஒரு விண்ணப்பத்தை கொடுக்க வந்திருக்கின்றோம். இதற்கு பொது போக்குவரத்தை நிறுத்தி, இவ்வளவு பாதுகாப்பை கொடுத்து, கண்ணீர் புகை வாகனங்களை கொண்டு வந்து குவித்திருக்கின்றார்கள். சமையலறையில் இருக்கின்ற பிரச்னைகளை சொல்வதற்கு தான் நாங்கள் வந்திருக்கின்றோம். முக்கியமாக பிரதமர் பதவி விலக வேண்டும். ராஜபக்ஷவை காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும்" என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

அப்போது, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கான சில யோசனைகளையும் அவர் முன் வைத்தார்.

''இலங்கையின் புதிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உருவாக்கவும் நாம் எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முன்னோக்கி செல்லும் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்க, ஆகஸ்ட் மாதம் 2022இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்போம். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். இது தவிர, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான பல புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் இவை தொடர்பில் நாம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்" எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?