Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுபஸ்ரீ மரணம்: பேனர் விபத்தில் பறிபோன உயிர், நொறுங்கிப் போன குடும்பம்

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (21:37 IST)
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 
பேனர் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, பெற்றோருக்கு ஒரே பெண். மேல் படிப்பிற்காக கனடா செல்லத் திட்டமிட்டிருந்தவர். அவரது மரணம், அவரது குடும்பத்தை நொறுக்கியிருக்கிறது.
சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள நெமிலிச்சேரி பவானி நகரில், உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கிறது சுபஸ்ரீயின் வீடு. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சுபஸ்ரீயின் சடலம் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது, அவரது தாயின் கதறல் அந்தப் பகுதியையே உலுக்கியது.
 
ரவி - கீதா தம்பதியின் ஒரே மகள் சுபஸ்ரீ. சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் படிப்பை முடித்தவர். அதற்குப் பிறகு, கந்தன் சாவடியில் உள்ள ஏஎஸ்வி டைட்டானியம் இன்ஃபர்மேஷன் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்தாளராகப் பணியாற்றிவந்தார் அவர்.
 
சுபஸ்ரீயின் வீடு இருந்த அந்தப் பகுதி, கடந்த இருபது ஆண்டுகளில் உருவான குடியிருப்புப் பகுதி. அப்பகுதியில் வசிக்கும் பலரும் சுபஸ்ரீயை அவரது துறுதுறுப்பான குழந்தைப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறார்கள்.
 
துக்கம் கேட்க வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த அப்பகுதி முதியவரால், சுபஸ்ரீ மரணத்தை நம்பமுடியவில்லை. "அந்தக் குழந்தை நம்மைக் கடந்துசெல்லும்போது ஒரு நட்சத்திரம் கடந்து செல்வதைப் போல பிரகாசிப்பாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை," என்கிறார் அவர்.
 
பொதுவாக சுபஸ்ரீ முதல் ஷிப்டில் பணியாற்றுவது வழக்கம். அதேபோலத்தான் செப்டம்பர் 12ஆம் தேதியன்று முதல் ஷிப்டில் தனது வேலையை முடித்துவிட்டு கந்தன்சாவடியிலிருந்து தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அவர்.
 
பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சி. ஜெயகோபால் என்பவர் துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை நெடுக தன் மகனின் திருமணத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று பதாகைகளை வைத்திருந்தார்.
 
அதில் சரியாக கட்டப்படாத ஒரு பதாகை, பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே சுபஸ்ரீ வந்து கொண்டிருந்தபோது அறுந்து சுபஸ்ரீ மீது விழந்தது. நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் நெருக்கமாக வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது.
 
அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதும், உயிரிழந்தார் சுபஸ்ரீ.
 
"சுபஸ்ரீயைப் போல புத்திசாலித்தனம் கொண்ட பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவள் காலை நேரத்தில் வேலைக்கு வருவதற்குக் காரணமே, மதிய நேரத்தில் வேறு பல வேலைகளைச் செய்யலாம் என்பதால்தான். மதியத்திற்கு மேல் அவர் இங்கிருப்பவர்களுக்கு ஜூம்பா நடனத்தைக் கற்றுக் கொடுப்பார். அவரைப் போல பரபரப்பாக வேலைகளைக் கவனிப்பவர்கள் அரிது" என்கிறார் அலுவலகத்தில் அவரது டீமைச் சேர்ந்த நாகூர் கனி.
 
மெக்கட்ரானிக்ஸில் பி.டெக். முடித்திருந்த சுபஸ்ரீ தனது மேற்படிப்பை கனடாவில் தொடர நினைத்திருந்தார். இதற்காக ஐஇஎல்டிஎஸ் தேர்வுகளை முடித்திருந்த அவர், புதன்கிழமையன்று இதற்கான நேர்காணல்களையும் நிறைவுசெய்திருந்தார். "அவர் தொடர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியங்களைக் கொண்டிருந்தவர். கனடாவில் தனது மேற்படிப்பைத் தொடர வேண்டுமென்பது அவரது ஒரே கனவாக இருந்தது" என்கிறார் நாகூர் கனி.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுபஸ்ரீ பணியில் சேர்ந்த அடுத்த நாள் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆட்களைத் தேடியபோது, தானாக முன்வந்து அதனைச் சிறப்பாக செய்தார் சுபஸ்ரீ என்பதை இப்போதும் அவரது அலுவலக நண்பர்கள் நினைவுகூர்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை பிற்பகல். பெரிய சடங்குகள் இன்றி சுபஸ்ரீயின் சடலம் சிவப்பு நிறத் துணி போர்த்தப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படுகிறது. கண்ணீர் வற்றி, இருகிப்போன முகத்துடன் அந்த வாகனத்தில் ஏறி அமர்கிறார் ரவி. தன் மகளுக்கு கதறியபடி கடைசியாக பிரியாவிடை அளிக்கிறார் கீதா.
 
இப்போது பேனர் அடித்துக்கொடுத்த அச்சகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்குகள் மட்டும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
 
அரசியல் கட்சியின் வைக்கும் அலங்கார வளைவுகளாலும் ஃப்ளக்ஸ் போர்டுகளாலும் பல மரணங்கள் நிகழ்ந்த பிறகும், இந்த வழக்கம் தமிழகத்தைவிட்டு நீங்குவதாக இல்லை. இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மரணம் நிகழ்ந்த பிறகும், வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று கடற்கரைச் சாலையில் ஃப்ளெக்ஸ் போர்டுகளும், சாலையில் மத்தியில் கொடிகளும் நடப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments