Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மலேசிய இளைஞருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம் - முழு விவரம்

மலேசிய இளைஞருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம் - முழு விவரம்
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (00:50 IST)
சிங்கப்பூரில் மலேசிய தமிழர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு நவம்பர் 10ம் தேதி நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
போதைப்பொருள் வழக்கில் நாகேந்திரனுக்கு நவம்பர் 10ஆம் தேதியன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
 
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
 
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் அனுப்பினார்.
 
அதில், நாகேந்திரனுக்குக் கருணை காட்டுமாறும், சிங்கப்பூர் அதிபரிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நாகேந்திரனின் வழக்கறிஞர் எம்.ரவி தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
"நாகேந்திரனுக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதை அடுத்து அவருக்கான தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி் வைக்கப்பட்டுள்ளது," என வழக்கறிஞர் ரவி தெரிவித்துள்ளார்.
 
அடுத்த இரு தினங்களில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தற்காலிக நிம்மதியை அளித்து இருப்பதாக நாகேந்திரனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
 
சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பம்
முன்னதாக, "உங்கள் மகன் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நவம்பர் 10, 2021 அன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்." - சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள இந்தக் கடிதம் மலேசியாவில் உள்ள குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியது.
 
சிங்கப்பூர் அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த நாகேந்திரன் 33 வயது இளைஞர் ஆவார்.
 
2009ஆம் ஆண்டு 42.72 கிராம் 'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்க முடியும்) என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.
 
'டயாமார்ஃபைன்' புற்றுநோயால் ஏற்படும் அதிதீவிர வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் போதைக்காக இதை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தொடைப்பகுதியில் கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த உறையில் 'டயாமார் ஃபைன்' கடத்தி வந்த குற்றச்சாட்டுக்காக சிங்கப்பூர் காவல்துறையினர் நாகேந்திரனைக் கைது செய்தனர். அந்த உறையில் என்ன இருக்கிறது என்பது தமக்குத் தெரியாது என்றார் அவர். பின்னர் கைதான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தல் வழக்கை எதிர்கொண்டார்.
 
ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில், 2019ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அவருக்கு லேசான அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability) இருப்பதும், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளது என்பதும் தெரியவந்தது.
 
'ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட என் மகனுக்கு குரல் கொடுக்க விரும்புகிறேன்'
மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
இதனால் அவர் நுண்ணறிவு குறைபாடு உள்ளவர் என்பதும், இதுவும் ஒரு வகையான ஊனம் என்றும் நாகேந்திரன் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்றும் வலிறுத்தப்பட்டது. எனினும், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
 
அதன் பின்னர், மேல் முறையீடு உள்ளிட்ட சட்டபூர்வமான நடைமுறைகளுக்குப் பின்னர், சிங்கப்பூர் அதிபரிடம் நாகேந்திரன் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் தொடர்பான தகவல் சிங்கப்பூர் சிறைத்துறை விதிகளின்படி அவரது குடும்பத்தாருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
 
அவரைக் காண குடும்பத்தார் வரக்கூடும் என்பதால் சிங்கப்பூரில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், பெருந்தொற்று வேளையில் அந்நாட்டுக்குள் நுழைவதற்கு உள்ள பயண கட்டுப்பாடுகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூர் சிறைத்துறை கடிதத்தால் துயரத்தில் மூழ்கிய மலேசிய குடும்பம்
 
 
இந்நிலையில், மரணத்தில் விளிம்பில் இருக்கும் நாகேந்திரனைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தொடங்கின. அதற்கு தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் உள்ளூர் செயல்பாட்டாளரான கிர்ஸ்டன் ஹன்.
 
கடந்த பத்து ஆண்டுகளாக இவர் சிங்கப்பூரில் தூக்குத்தண்டனையை அகற்றக் கோரி போராடி வருகிறார்.
 
பிபிசி தமிழ் அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, "தங்களது அன்புக்குரிய ஒருவர் தூக்கிலிடப்படுவதை அடுத்து, இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யும்படி குறிப்பிட்டு, அதே கடிதத்தில் கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிட்டிருப்பது மோசமான ஒரு நடைமுறை," என்றார் கிர்ஸ்டன் ஹன்.
 
இந்த நிலையில், மலேசியாவின் ஈப்போ பகுதியில் வசித்து வரும் நாகேந்திரனின் குடும்பத்தார் துயரத்தில் மூழ்கினர்.
 
இந்த ஆண்டு மட்டுமல்லாமல், வரப்போகும் ஆண்டுகளிலும்கூட, தங்கள் குடும்பத்தில் இருள் படர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகச் சொல்கிறார் நாகேந்திரனின் மூத்த சகோதரி ஷர்மிளா.
 
பிபிசி தமிழிடம் பேசிய அவர், இன்னும்கூட தனது சகோதரர் வீடு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
 
சிங்கப்பூர் அரசு தன் சகோதரரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் தண்டித்துவிட்டதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
 
மகிழ்ச்சியாக இருக்க பயிற்சி: எந்த அளவுக்கு கைக்கொடுக்கும்?
பதின்ம வயதினரை துயரத்தில் தள்ளும் இன்ஸ்டாகிராம்: அம்பலமாகும் ரகசிய ஆய்வு
"தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு சகோதரனை இழக்கப் போகிறேன் என்று தெரிந்த பிறகு எப்படி பண்டிகையைக் கொண்டாட முடியும்? மலேசியாவும் சிங்கப்பூரும் தத்தம் எல்லைகளை திறக்கும் முன்பே எனது சகோதரனை தூக்கிலிடப் போகிறார்கள்.
 
"பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில், நாங்கள் எவ்வாறு பயண ஏற்பாடுகளைச் செய்ய முடியும். கொரோனா பரிசோதனை செய்துகொள்வது ஒருபுறம் இருக்க, தனிமைப்படுத்தும் காலத்துக்கு உரிய செலவுகளை எங்களால் ஏற்க இயலாது. எனினும் அதற்கு வழி கிடைத்துள்ளது.
 
"எனது தாயாருக்கு 59 வயது ஆகிறது. அவரால் இந்த வேதனையை எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? அதை நினைத்து மனக்கலக்கத்தில் இருந்தோம். எனினனும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கடந்த 2ஆம் தேதிதான் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன்," என்றார் ஷர்மிளா.
 
மொத்த குடும்பத்தையும் தண்டித்துவிட்டதாகவே கருதுகிறேன்: ஷர்மிளா
தாங்கள் வசதியானவர்கள் அல்ல என்றும், சிறு வயது முதல், தனது நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க தன் தாயார் மிகவும் பாடுபட்டுள்ளார் என்றும் ஷர்மிளா சொல்கிறார்.
 
"துப்புரவு தொழிலாளியான என் தாயாருக்கு 59 வயதாகிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மகனை நினைத்து தவிப்பில் உள்ளார்.
 
"என் சதோரர் நாகேந்திரன் மலேசியாவில் 'வெல்டிங்' பணியில் இருந்தவர். சிங்கப்பூரில் பாதுகாவலர் பணிக்காகச் சென்றார். அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தால் நிறைய சம்பாதித்திருக்கக் கூடும். நாங்கள் இன்றளவும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம். அவரைச் சந்திக்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றாலும், பணம் திரட்ட சிரமப்படுவோம். இதுதான் எங்கள் குடும்பத்து நிலை.
 
"மற்ற இளையர்களைப் போலவே நாகேந்திரனும் தன் வயதுக்கேற்றவாறுதான் இருந்தார். போதைப்பொருள் குறித்தெல்லாம் அவருக்கு அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது. அவர் கடத்தலில் ஈடுபடவில்லை என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
 
"சிங்கப்பூர் அரசாங்கம், அவர் தவறு செய்ததாகக் கருதினால் தண்டனை கொடுக்கலாம். இப்படி மொத்த குடும்பத்தையும் தண்டிக்கக்கூடாது. 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு அவர் விடுதலை செய்யப்படுவார் என்றுதான் நம்பியிருந்தோம். அவரைத் தண்டித்த பிறகு எங்கள் குடும்பத்து நிலையை யோசித்துப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது. அவரது மரணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், எத்தனை பேர் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் ஓர் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்," என்கிறார் ஷர்மிளா.
 
ஆதரவுக்கரம் நீட்டியுள்ள சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூர் செயல்பாட்டாளர் கிர்ஸ்டன் ஹன் தங்களுக்குப் பல வகையிலும் உதவிகரமாக இருந்து வருவதாக அவர் கூறுகிறார் ஷர்மிளா.
 
நாகேந்திரன் குடும்பத்தார் சிங்கப்பூர் சென்று திரும்ப இணையம் வழி பணம் (Crowd Funding) திரட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது கிர்ஸ்டன் ஹேன்தான்.
 
பிபிசி தமிழிடம் பேசிய கிர்ஸ்டன் ஹேன், இதுவரை சிங்கப்பூரர்களிடம் இருந்து தாம் எதிர்பார்த்ததைவிட அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.
 
சிங்கப்பூரின் லீ குவான் யூ: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவை பணக்கார நாடாக மாற்றியவர்
சிங்கப்பூரில் கடலில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை: 7 கால்பந்து திடல் அளவு பெரியது
"இதுவரை 19,000 சிங்கப்பூர் டாலர்கள் பயண ஏற்பாடுகளுக்காக திரட்டப்பட்டுள்ளது. அதில், 17,000 டாலர் செலவாகி உள்ளது," என்றார் கிர்ஸ்டன்.
 
Lawyers for Liberty (எல்.எஃப்.எல்) என்ற அமைப்பும் நாகேந்திரன் குடும்பத்தாருக்கு உதவி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள தகுதி பெற்ற மனோத்துவ நிபுணர்கள் நாகேந்திரனை பரிசோதித்து அதன் பின்னர் அவருக்குள்ள மனநல குறைபாட்டை உறுதி செய்துள்ளதாகவும், அவரது நுண்ணறிவுத் திறன் அளவானது, சராசரி மனிதர்களுக்கு இருப்பதைவிட குறைவாக (69ஆக) உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
 
கடைசி முயற்சியாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்: வழக்கறிஞர்
பிபிசி தமிழ் அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான சுரேந்திரனைத் தொடர்புகொண்டு பேசியபோது, நாகேந்திரனைத் தூக்கிலிடாமல் காப்பாற்ற, சிங்கப்பூர் அதிகாரிகளிடம் தேவையான கோரிக்கைகளை முன்வைக்க மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
 
 
 
மேலும், இவ்வாறு தூக்கிலிடுவது சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டார்.
 
"நாகேந்திரன் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் அவரது மனநிலை குறித்த கேள்வி எழுந்தது. இதையடுத்து, அரசு தரப்பும் நாகேந்திரன் தரப்பும் இணைந்தே மனநலப் பரிசோதனை நடத்த முன்வந்தன.
 
"நாகேந்திரனுக்கு உள்ள மனநல குறைபாடுகள் குறித்து நீதிமன்றத்துக்கும் தெரியும். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இத்தகைய நிலையிலும் அவரைத் தூக்கிலிட முடியும் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது. அவரிடம் உள்ள இந்த குறைபாடு மட்டுமே அவருக்கான தண்டனையைக் குறைக்க போதுமானதல்ல என்று சீங்கப்பூர் நீதிமன்றம் கருதுகிறது.
 
"இந்நிலையில், கடைசி முயற்சியாக நாகேந்திரன் தூக்கிலிடுவதை நிறுத்தக் கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை திங்கள்கிழமை 8ஆம் தேதி நடைபெற உள்ளது. நல்ல முடிவு வரும் எனக் காத்திருக்கிறோம்," என்று சுரேந்திரன் மேலும் தெரிவித்தார்.
 
நாகேந்திரனின் மனநலக் குறைபாட்டையும் அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதையும் அறிந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
 
மரண தண்டனைக்கு எதிரான ஆசிய வலைதளமான (The Anti-Death Penalty Asia Network) (அட்பன்) நாகேந்திரனைத் தூக்கிலிடுவதன் மூலம், சிங்கப்பூர் அனைத்துலக மரபுகளை மீறுவதாகக் கூறியுள்ளது என்று மலேசிய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
 
நாகேந்திரனுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, சிங்கப்பூர் அதிபருக்கு இணையம் வழி அளிக்கப்பட உள்ள மனுவில் தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை நிலவரப்படி, சுமார் 32,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
 
மகனை காண சிங்கப்பூர் சென்றார் தாயார் பாஞ்சாலை
தற்போது நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை மகனைக் காண சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது பாஞ்சாலை தன் மகனை சிங்கப்பூர் சிறையில் சந்தித்திருக்கக் கூடும்.
 
பாஞ்சாலையைப் பொருத்தவரையில் மற்ற அனைவரையும்விட மகனைக் காணும் பரிதவிப்பில் உள்ளார். காரணம், 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது முதல் தன் குடும்பத்தாரை சந்திப்பதையும் அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார் நாகேந்திரன்.
 
சகோதரி ஷர்மிளா, தாயார் என்று யார் தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், பேச இயலாது என்று மறுத்து வந்துள்ளார். கொரோனா நெருக்கடிக்கு முன்பு இரண்டு முறை மகனைக் காண பாஞ்சாலை சிறைக்குச் சென்றபோதும் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார் நாகேந்திரன்.
 
"சிங்கப்பூர் அரசாங்கம் சட்டப்படி செயல்படும் என்பது உலகறிந்த ஒன்று. தங்கள் நாட்டில் உள்ள மருத்துவர்களைக் கொண்டுதான் நாகேந்திரனைப் பரிசோதித்து அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. எனவே, இதில் அந்நாட்டு அரசை குற்றம்சொல்ல ஒன்றுமில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அந்நாடு கடுமையான தண்டனை அளிக்கப்படுவது அவர்களின் உரிமை," என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
 
சட்டங்கள் குற்றங்களைக் குறைக்க வேண்டும். மாறாக, உயிர்களைப் பறிக்கக் கூடாது என்பதே நாகேந்திரன் குடும்பத்தாரின் வாதம்.
 
இந்த நிலையில்தான் கடைசி நேர அதிசயமாக நாகேந்திரனின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் உத்தரவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்து.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பாடகி விபத்தில் பலி