Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை

தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை
, ஞாயிறு, 3 மார்ச் 2019 (15:51 IST)
மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் முன்னரே, தன் பட்டியலில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் தூக்கில் போடுவதற்குள், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் களைப்படைந்து விட்டார்.
 
அதனால் அவர் உயிர் பிழைத்தார். ஒட்டுமொத்தமாக மக்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அந்த நாடு நிறுத்திக் கொள்ளும் வரை அவர் தப்பினார்.
 
அருகில் வசிக்கும் பொறாமை எண்ணம் கொண்டவர்களால் கொலைக் குற்றச்சாட்டில் தாம் கைது செய்யப்பட்டதாக பைசன் காவ்லா கூறுகிறார்.
 
அது 1992ஆம் ஆண்டு. அப்போதெல்லாம் கொலைக் குற்றத்துக்கு நிச்சயமாக மரண தண்டனைதான் விதிக்கப்படும்.
 
தெற்கு மலாவியில், ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த பைசன், தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் காஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து, கைநிறைய சம்பாதித்தார்.
 
ஊர் திரும்பி ஒரு நிலத்தை வாங்கினார். ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, பழங்கள், கோதுமை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்தார்.'அப்போதுதான் எனக்கு கெட்ட காலம் தொடங்கியது,'' என்றார் காவ்லா.
 
அவருடைய வேலையாள்களில் ஒருவரை, அருகில் வசித்தவர்கள் தாக்கியுள்ளனர். அதில் தொழிலாளி மிக மோசமாகக் காயம் அடைந்தார் என்று பைசன் தெரிவித்தார்.
 
உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரை கழிவறைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த பைசன், கன மழையால் வழுக்கலாக இருந்த படிகளில் சென்றபோது, கீழே விழுந்து வேலையாளை விட்டுவிட்டார். பிறகு மருத்துவமனையில் அந்தத் தொழிலாளி இறந்துவிட்டார். அப்போது 40 வயதுகளில் இருந்த பைசன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவானது.
 
அருகில் வசித்தவர்கள் பைசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
நீதிமன்ற அறையில் பின்வரிசையில் அமர்ந்திருந்த பைசனின் தாயார் லூசியால், நீதிபதி வாசித்த தீர்ப்பை கேட்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்று அவர் கேட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவருக்குச் சொன்னார்கள். ''என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து மார்பை நனைத்துவிட்டன,'' என்று அவர் கூறினார்.
 
அது 1964ல் இருந்து நாட்டை கட்டுக்குள் வைத்திருந்த ஹஸ்டிங்ஸ் பாண்டாவின் சர்வாதிகார ஆட்சியின் இறுதிக்கட்டம். ''உயிரை எடுக்கும் மெசின்'' என்று பைசன் குறிப்பிடும் அந்த இடத்தில் காத்திருந்த கொடுமைகளை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார்.
 
''தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பகுதிக்கு நீங்கள் போகலாம், உங்கலை தூக்கில் போடுவதற்கான நேரம் வகையில் காத்திருக்க வேண்டும்,'' என்று எனக்கு சொல்லும்போது, ஏற்கெனவே மரணித்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.
 
''அந்த சமயத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒருவர் மட்டுமே இருந்தார். தென்னாப்பிரிக்கரான அவர் அந்தப் பகுதியில் பல நாடுகளுக்குச் சென்று தூக்கு தண்டனையை நிறைவேற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் மலாவிக்கு வருவார். அந்த நேரத்தை அறிந்து கொள்ளும் கைதிகளில் சிலர் தப்பி ஓடிவிடுவார்கள்.''
 
''இன்னும் சில மணி நேரங்களில் தூக்கில் போடப்படும் 21 பேரின் பட்டியலில் உங்களின் பெயரும் உள்ளது என்று சொல்லப்பட்ட ஒரு தருணத்தை பைசன் நினைவில் வைத்திருக்கிறார்.''
 
பிற்பகல் ஒரு மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் தொடங்கும் என்றும், நீங்கள் ''பிரார்த்தனை செய்யத் தொடங்கலாம்'' என்றும் பாதுகாவலர் ஒருவர் கூறியுள்ளார்.
மாலை நான்கு மணிக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் தன் வேலையை நிறுத்தும் வரையில் அவர்கள் தொடர்ந்தனர். ஆனால் பட்டியலின் கடைசி வரை அவரால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. பைசன் உள்ளிட்ட மூன்று பேர், அவர் திரும்பி வரும் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
 
''அந்த இயந்திரத்தை இயக்கக் கூடியவர் அவர் ஒருவர் மட்டும்தான். அன்றைய நாள் சோர்ந்து போனதால் அடுத்த மாதம் வருகிறேன் என்று அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது,'' என்கிறார் பைசன்.
 
அடுத்த இரண்டு முறைகளும் அதைப் போலவே நடந்தது என்றார் பைசன். பட்டியல் தயாராகும், தற்செயலாக, தூக்கில் போடுபவரால் அதை முழுமையாக முடிக்க முடியாது. அன்றைய நாளின் இறுதியில் உயிருடன் விடப்படுபவர்களில் ஒருவராக பைசன் இருந்தார். மூன்றாவது சமயத்தின் போது, அவரைத் தவிர மற்ற அனைவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என்கிறார் பைசன்.
 
ஒரு வகையில் அவர் அதிர்ஷ்டசாலி. ஆனால் அந்த அனுபவம் அவருக்கு கொடுமையானதாக அமைந்துவிட்டது. இரண்டு முறை அவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்போதும் அவர் உயிர் பிழைத்துவிட்டார்.
 
1994ல் மலாவியில் பல கட்சிகள் இணைந்த ஜனநாயக ஆட்சி உருவான பிறகு, மரண தண்டனை நிறைவேற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போதும் மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தண்டனையை நிறைவேற்ற எந்த அதிபரும் உத்தரவிடவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட சோகத்தில் கைதிகள் காலத்தைக் கழிக்கிறார்கள் அல்லது ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் வாய்ப்பு கிடைக்கிறது.
 
அந்த சமயத்தில் மரண தண்டனை கைதியான பைசன், ஜோம்பா மத்திய சிறையின் பிரதான பகுதிக்கு மாற்றப்பட்டார். தன் ஆயுள் மீதி காலத்தை அங்கேயே கழிக்க வேண்டும் என்பது போல இருந்தது. சிறை கல்வித் திட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டினார். கற்பதுடன், கற்பிக்கவும் செய்தார். ஆனால், விடுதலை கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையும் அவருக்கு இல்லை.
 
பிறகு 2007ல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
 
போதை மருந்து பயன்படுத்தும் ஒருவர், தனது வளர்ப்பு மகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் சிறிது காலமாக அவர் மனநலம் குன்றி இருந்ததாக வாதிட்டார். கொலைக்கான மரண தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றார்.
 
நியாயமான விசாரணை விதிகளை மீறுவதாக இது இருக்கிறது, மலாவி அரசியல்சாசனம் உத்தரவாதம் செய்யும் "மனிதாபிமானமற்ற மற்றும் தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்படுவதில் இருந்து'' பாதுகாப்பு அளிக்கும் உரிமையை மீறும் செயல் என்று வாதிட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சில நேர்வுகளில் உடந்தையாக இருப்பவர்களைவிட, குற்றம் புரிபவர் அதிக குற்றச்சாட்டுக்கு உரியவராக இருக்கிறார் என்று நீதிமன்றம் கூறியது. எனவே தண்டனைகள் வெவ்வேறு அளவில் இருக்க வேண்டும் என்று கூறியது.
 
அதாவது சட்டப்படி கட்டயமாக அளிக்கப்பட்ட மரண தண்டனைகள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.
 
தண்டனை காலத்தை மாற்றுவதற்கான தகுதி உடைய 170 கைதிகளில், இதுவரை 139 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். பலரும் மன நல பிரச்சனை உள்ளவர்கள் என்று ரிப்ரீவ் எனும் அமைப்பு கூறுகிறது. புதிதாக விசாரணையை எதிர்கொள்ளும் தகுதி உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிரான நீதிமன்ற ஆவணங்களே இல்லை. அவர்கள் எதற்காக இன்னும் சிறையில் இருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரியவில்லை.
நான் கனவு காண்பதைப் போல இருந்தது - நீதிபதி என்ன சொன்னார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை
webdunia
பைசன் காவ்லா, 
 
பைசனை நீதிமன்றத்துக்கு திரும்பவும் அழைத்து வர வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியபோது, முதல் அனுபவத்தால் பயந்து போயிருந்த அவர், ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு காட்டியிருக்கிறார். ஆனால், பிறகு அவர் பிடிவாதத்தை விட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார். அவரை விடுதலை செய்வதாகவும், உடனடியாக அவர் வெளியே போகலாம் என்றும் நீதிபதி கூறியபோது அவர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
 
``சிறை வார்டன்கள் என்னிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் கூண்டில் இருந்து வெளியே வர முடியுமா என கேட்டார்கள். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. என் உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது, நடுக்கமாக இருந்தது. ஏதோ கனவு காண்பதைப் போல இருந்தது. நீதிபதி என்ன சொன்னார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.''
 
இந்தத் தீர்ப்பால் வாழ்க்கை மாறியது பைசன் ஒருவருக்கு மட்டுமல்ல.
 
சிறையில் இருந்தபோது ஒவ்வோர் ஆண்டும் அவருடைய தாயார் லூசி வந்து பார்த்துச் செல்வார். ஆண்டு முழுக்க பருத்தி சாகுபடி செய்து, பணம் சேமித்து ஜோம்பா சிறைக்கு வருவார். முடிந்த வரையில் தூக்கி வரும் அளவுக்கு பொருட்களை அவர் வாங்கிச் செல்வார்.
 
2015ல் பைசனுக்கு மறு தீர்ப்பு கூறியபோது, அவர் அங்கு இல்லை. ஆனால் லூசியின் இளைய சகோதரர் இருந்தார். இந்தச் செய்தியை தொலைபேசி மூலம் லூசியிடம் சொன்னபோது, அவர் என்ன சொல்கிறார் என்பதை சிறிது நேரம் லூசியால் நம்ப முடியவில்லை. பிறகு ``ஆட்டுக் குட்டியைப் போல துள்ளிக் குதித்தேன். என் மனம் மகிழ்ச்சியால் நிரம்பிவிட்டது'' என்று லூசி கூறினார்.
 
குறைந்த பாதுகாப்பு உள்ள ஓர் இல்லத்துக்கு பைசன் அழைத்துச் செல்லப்பட்டார். 23 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, இயல்பான வாழ்வுக்கு ஏற்றவாறு அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு, புதிய தொழில் திறன்கள் கற்பிக்கப்பட்டன. ஏற்கெனவே 60 வயதை அவர் கடந்துவிட்டார். அந்த இல்லத்தில் இருந்தவர்களில் அதிக வயதானவர் இவராகத்தான் இருந்தார்.
 
இதே அனுபவத்தில் உள்ள மற்ற முன்னாள் கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக, வார இறுதி நாட்களில் தன்னார்வலராக இப்போது அவர் சென்று வருகிறார்.
 
பைசன் விவசாயம் செய்து வந்த நிலத்தில் பயிர்கள் அதிகம் வளர்ந்துள்ளன. அவர் நீண்டகாலம் சிறையில் இருந்தபோதே, அவருடைய மனைவி மரணம் அடைந்துவிட்டார். அவருடைய ஆறு பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர், வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.
அவர் தனியாக வாழ்கிறார். ஆனால் தாயாரை நன்கு கவனித்துக் கொள்கிறார். அவருக்கு வயது 80-ஐ தாண்டிவிட்டது.
webdunia
``நான் சிறையில் இருந்தபோது, என் கவலையெல்லாம் என் தாயாரைப் பற்றியதாகத்தான் இருந்தது. அவருக்கு முதலாவது பிள்ளை என்பதால், என்னால் ஆன அனைத்தையும் அவருக்கு நான் செய்வேன். இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன். பண்ணை வேலை செய்யவோ அல்லது கடினமான வேலை செய்யவோ அவரை நான் அனுமதிப்பதில்லை. அவருக்கான வேலைகளை செய்வதற்கு வேலையாட்கள் வைத்திருக்கிறேன். அவர் வயலுக்குச் செல்ல வேண்டியதில்லை. நானே செய்து கொள்கிறேன்,'' என்றார் பைசன்.
 
தாயாருக்கு செங்கற்களால் ஆன புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்பதுதான் பைசனின் அடுத்த திட்டம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மார்ட் ரேசன் கார்டில் உள்ள 5 வகை குறியீடுகளுக்கான அர்த்தம்