தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 12 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.கவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் தினகரனால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலாவின் மனநிலை என்ன?
சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 126 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருப்பதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதுபோக, உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிய ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, ஐ.யூ.எம்.எல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் வெற்றிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தி.மு.கவின் பலம் 134 ஆக உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க 37.70 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேநேரம், அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், அ.தி.மு.க 65 தொகுதிகளிலும் பா.ம.க 5 தொகுதிகளிலும் பா.ஜ.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும், முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கிய எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு 33.29 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் தென்மண்டலத்தில் அ.தி.மு.க குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறாவிட்டாலும், தினகரனின் அ.ம.மு.கவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. போடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் 11,029 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பி.எஸ் போராடி வெற்றி பெற்றார். ஆனால், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அ.தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றியும் அதன் வாக்கு சதவிகிதங்களும் அ.ம.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர் பேசும்போது, `சட்டமன்றத் தேர்தலில் 120 தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோம். 40 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இழுபறி ஏற்பட்டால் ஆட்சியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அ.ம.மு.க இருக்கும்' என தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு பேசி வந்தனர். ஏறக்குறைய தினகரனும் இதே மனநிலையில்தான் இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, மன்னார்குடி, காரைக்குடி, மானாமதுரை, திருவாடானை, முதுகுளத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய 12 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க வேட்பாளர்களால் அ.தி.மு.க அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளை மட்டுமே அ.ம.மு.க பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவிகித வாக்குகளோடு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தினகரனால் இந்தமுறை எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்தத் தேர்தலை சசிகலாவும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்ட பின்னர், ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின்போது அ.ம.மு.க வேட்பாளர்கள் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றனர். `ஆன்மிக சுற்றுப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார்' என்ற விமர்சனங்களும் கிளம்பின. `தேர்தல் முடிவில் அ.தி.மு.க தோல்வியடைந்தால், தன்னுடைய தலைமையை எதிர்பார்ப்பார்கள்' என சசிகலா நம்பினார். ஆனால், தேர்தல் முடிவுகள் எதுவும் மன்னார்குடி உறவுகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
சசிகலாவின் தற்போதைய மனநிலை என்ன?
`` நேற்று சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, சரியாக 7 மணிக்கெல்லாம் தொலைக்காட்சியின் முன்பு அவர் அமர்ந்துவிட்டார். ஒவ்வொரு தொகுதி நிலவரத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அதிகப்படியான இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியதில் அவருக்கு சந்தோஷம்தான். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஓரளவுக்கு முழுமையாக வரத் தொடங்கியதும், `கைக்கு வந்ததை விட்டுவிட்டார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் இன்னும் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும்' என உறவினர்களிடம் அவர் கூறியதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், அ.தி.மு.கவில் அவருக்கான இடம் என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது" என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவின் உறவினர் ஒருவர்.
அதிமுகவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி
தேர்தலில் நூலிழையில் தப்பியவர்கள், தவறவிட்டவர்கள் யார் யார்? சுவாரசிய தகவல்கள்
`` இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் முதல்வராக ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார். அ.தி.மு.கவில் ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிட்டார். சொல்லப் போனால், அ.தி.மு.கவில் அசைக்க முடியாத தலைமையாக எடப்பாடி மாறிவிட்டார். இதன்பிறகு மீண்டும் சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால், தென்மண்டலத்தில் அ.ம.மு.கவால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான வாய்ப்புகள் வந்திருக்கும். தினகரனை ஆதரித்து சசிகலா பிரசாரம் செய்திருந்தால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சிட்டி நகர நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு எதிராக சென்றிருக்கும். அவர் ஒதுங்கியதும் நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டது. கொங்கு மண்டலத்தைத் தவிர மற்ற மண்டலங்களில் பெரிய அளவுக்கு அ.தி.மு.க வெற்றி பெறவில்லை. இதையே காரணமாக வைத்து நம்மை அழைப்பார்கள் என சசிகலா தரப்பினர் நம்புகிறார்கள்" என்கிறார்.
மேலும், `` இந்தத் தேர்தலில் செலவுக்கு பணமில்லாமல் அ.ம.மு.க வேட்பாளர்கள் அடைந்த துயரங்களுக்கும் அளவில்லை. கடைசி நிமிடம் வரையில் பணம் வரும் என எதிர்பார்த்தே ஏமாந்தனர். ` 3 இடங்களில் பணம் சிக்கிக் கொண்டது. எதையாவது செய்து சமாளித்துக் கொள்ளுங்கள்' என அ.ம.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் மயிலாடுதுறை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் கோமல் அன்பரசன் உள்பட பலரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். சசிகலா தரப்பில் இருந்தும் போதிய உதவிகள் வந்து சேரவில்லை. இதனால் தேர்தலையும் வலுவில்லாமல்தான் தினகரன் எதிர்கொண்டார்.
கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள்
புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி?
மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?
கோவில்பட்டியிலும் தினகரன் தோல்வியை தழுவினார். வாக்கு எண்ணிக்கையிலும் அ.ம.மு.க முன்னிலை என்ற வார்த்தைகளையே பார்க்க முடியவில்லை. சில தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் விலைபோனதாகவும் தகவல் வந்தது. இனி வரும் நாள்களில் தோல்விக்கான காரணங்களை தினகரன் ஆராய இருக்கிறார். அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் சசிகலா நுழைவதற்கான வாய்ப்புகள் என்பது குறைவுதான். சசிகலாவுக்கு அடுத்தபடியாக நம்பர் டூ என்ற இடத்தை நோக்கி எடப்பாடி நகர்வதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் விரிவாக.
சமரசம் ஆன அ.ம.மு.க வேட்பாளர்கள்?
`அ.ம.மு.கவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கடுமையான தோல்வியை சந்திக்கவேண்டும் என்பதுதான் சசிகலா தரப்பினரின் விருப்பமாக இருந்தது. அப்போதுதான் அ.தி.மு.கவை அவர்களால் எளிதாகக் கைப்பற்ற முடிந்திருக்கும். ஆனால் எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டுத் தலைமையில் இயங்கிய அ.தி.மு.க கணிசமான இடங்களில் வென்றதன் மூலம் சசிகலா தரப்புக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் முன்னெடுத்த அ.ம.மு.கவும் இத்தேர்தலில் பெரிதாக எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. தினகரன் தோற்றுப் போனதுடன் பல இடங்களில் அவரது வேட்பாளர்கள் அ.தி.மு.க வேட்பாளர்களுடன் சமரசமாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. அத்துடன் பெரும்பாலான அ.தி.மு.க வாக்காளர்கள் அ.ம.மு.கவின் இருப்பை விரும்பாமல் இரட்டைஇலைக்கே வாக்களித்துள்ளனர்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` அரசியல் என்பது நீண்ட பயணம். காத்திருப்பும் உழைப்பும் முக்கியமான பண்புகள் ஆகும். தினகரன் இதை உணர்ந்திருப்பார். அ.தி.மு.கவைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஒன்றுதான் அ.ம.மு.க மூலம் அக்கட்சியின் வாக்குகளைப் பிரித்து அதைப் பலவீனப்படுத்துவதும். அது இப்போது நடக்கவில்லை. இதில் இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. அ.தி.மு.க பலவீனப்பட்டிருந்தால் அதன் தரப்பில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளும் அரங்கேறியிருக்கும். அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கலாம். ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் கட்சியை எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் எப்படி வழிநடத்துவார்கள் என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் உள்ளது. சசிகலா மீண்டும் அ.தி.மு.கவின் லகானைக் கைப்பற்றுவது என்பது ஓர் அரசியல் அற்புதம் நடந்தால் ஒழிய நடப்பதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.
கொங்கு மண்டலம் சொல்லலாமா?
``எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. அதனால்தான் மக்கள் தி.மு.கவுக்கு வாக்களித்துவிட்டனர். கொங்கு மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் அ.தி.மு.கவுக்கு பாதகமான முடிவுகள் வந்துள்ளன. நாங்கள் வாங்கிய பத்து லட்சம் வாக்குகளையும் அ.தி.மு.கவுக்கு வராமல்போன பத்து லட்சம் வாக்குகளையும் ஒன்று சேர்த்துப் பாருங்கள். அவர்கள் ஆட்சியமைப்பதற்கான சூழல் உருவாகாமல் போனதற்கு நாங்கள் வாங்கிய வாக்குகள்தான் காரணம்" என்கிறார் ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வைத்தியநாதன்.
சசிகலா
பட மூலாதாரம்,GETTY IMAGES
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார். `` மீண்டும் அ.தி.மு.கவுக்குள் சசிகலா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கொங்கு மண்டலம் தவிர, தென்மண்டலம், மத்திய மண்டலம் ஆகியவற்றில் அ.தி.மு.க கடும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் அ.தி.மு.கவுக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு சரியில்லாததால் இந்தத் தோல்வி கிடைத்துள்ளது. இதைத்தான் தினகரன் முன்பே தெரிவித்தார். `சசிகலா தேவையில்லை' என கொங்கு மண்டலம் சொல்லக் கூடாது. ஓ.பி.எஸ், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் சசிகலா வேண்டாம் என்று சொல்வார்களா? வடக்கில் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் வெற்றி பெறலாம் என சி.வி.சண்முகம் நினைத்தார். ஆனால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.
சசிகலா மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறார். சேலம் உள்பட சில தொகுதிகளில்தான் எடப்பாடிக்கு செல்வாக்கு உள்ளது. கோவை மாவட்டத்தில் அ.தி.மு.கவுக்கு வெற்றி கிடைத்ததற்கு வேலுமணிதான் காரணம். எனவே, சில தொகுதிகளை கணக்கில் வைத்துக் கொண்டு சசிகலா வருகைக்கு எதிர்ப்பு உள்ளதாகக் கூறுவது சரியல்ல" என்கிறார்.
சசிகலா தயவு தேவையா?
`சசிகலா முன் உள்ள வாய்ப்புகள் என்ன?' என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அரசியலில் சசிகலாவுக்கு இனி எந்தவித வாய்ப்பும் இல்லையென்றே கருதுகிறேன். தேர்தல் வரும்போது ஒதுங்கிவிடுகிறேன் எனக் கூறுவது, போர் வரும்போது போரில் இருந்து விலகிக் கொள்கிறேன் என போர்த் தளபதி கூறுவதற்கு சமம். அவர் இனி தேர்தல் களத்தைச் சந்திப்பது என்பது அபூர்வம். அவருக்கு இந்தத் தேர்தலில் கிடைத்த ஒரே வாய்ப்பு, தனது சகோதரி வனிதா மணியின் மகனான தினகரனை பலப்படுத்துவதுதான். ஆனால், அதனைச் செய்யாமல் தினகரனை பலவீனமாக்கிவிட்டார்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தபோது எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அவரை ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை சற்றும்கூட சசிகலா உணராததுதான் ஆச்சரியம். அ.தி.மு.க அணியில் 40 சதவிகித வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெற்றுவிட்ட பிறகு, இனி சசிகலாவை அவர் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. இரட்டை இலைக்கான உரிமையை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சசிகலாவின் தேவையும் அ.தி.மு.கவுக்கு அவசியமில்லை" என்கிறார்.