இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம் ஆண்டு முதல் முதலாக தேயிலை செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னரான காலத்தில் தேயிலை, ரப்பர் போன்ற செய்கைகளை செய்யும் வகையில், இந்தியாவிலிருந்து தமிழர்கள் அழைத்து வரப்பட்டு, மலையக பகுதிகளில் அமைக்கப்பட்ட 'லயின்' அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
நாடு கடந்து சுமார் 200 வருடத்திற்கு முன்னர், இலங்கைக்கு வருகை தந்த மலையக தமிழர்கள், இன்றும் அதே லயின் அறைகளில் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தி வருகின்றனர்.
இந்திய வம்சாவளி தமிழர்கள்
தேயிலை, ரப்பர் போன்ற செய்கைகளை முன்னெடுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள லயின் அறைகளிலேயே இந்த மக்கள் இன்றும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் உடைந்த சுவர்கள், துவாரங்களுடனான கூரைகள், உடைந்த மற்றும் சுகாதார தரமற்ற கழிப்பறைகள், குளியலறைகள் என சுகாதாரமற்ற வாழ்க்கையை பெரும்பாலான இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் வாழ்ந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இவர்களுக்கு இன்று வரை போதியளவான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை சம்பளத்தை கோரிய பல வருடங்களாக போராட்டங்களை நடத்திய மக்களுக்கு, இன்று வரை அந்த சம்பளம் உரியவாறு கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
தமது வாழ்விடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. மருத்துவ வசதிகள் இன்றும் இல்லாத பெரும்பாலான பெருந்தோட்டங்கள் இலங்கையில் இருக்கின்றன. பாடசாலை வசதிகள் இல்லாத பெருந்தோட்ட பகுதிகளும் நாட்டில் இன்று காணப்படுகின்றன.
மலையக பகுதிகளுக்கு சென்ற எமக்கு, மலையக மக்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்னைகளை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.
பொருளாதார நெருக்கடி, சுகாதார பிரச்னைகள், போதியளவு கல்வி கற்கும் வசதிகள் இல்லாமை, போக்குவரத்து பிரச்னைகள் என பல்வேறு சிரமங்களை கடந்த 200 வருடங்களாக அனுபவித்து வரும் மலையக தமிழர்கள், இன்றும் தமக்கென்று ஒரு முகவரி இன்றி வாழ்கின்றனர்.
தமது அயராத உழைப்பின் மூலம் தேயிலை செய்கையை உலகறிய செய்து, இலங்கைக்கே உரித்தான சிலோன் டீ என்ற நாமத்துடனான முகவரியை பெற்றுக்கொடுத்த மலையக மக்கள், இன்றும் முகவரி இன்றி வாழ்ந்து வருகின்றமை வருத்தமளிக்கும் விடயமாகும்.
மலையகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முகவரி இல்லாமையினால், பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதிலிருந்து, இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வது வரை பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுமதிக்க சிரமப்படுகின்றமை, புலமை பரிசில்களை பெற்றுக்கொள்ள முடியாமை, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியாமை, அடையாளஅட்டையை பெற்றுக்கொள்ள முடியாமை, திருமண பதிவுகளை செய்ய முடியாமை என நாளாந்தம் பல சவால்களை இந்த மக்கள் சந்தித்து வருகின்றனர்;.
அத்துடன், தமது தங்காபரணங்களை வங்கிகளில் அடகு வைத்து, அதனை மீள திருப்பிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு முகவரி இல்லாமையே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
பெரும்பாலான மலையக தமிழர்கள், பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணிகளிலுள்ள லயின் அறைகளில் வசித்து வருகின்றமையினால், அவர்களுக்கென முகவரியொன்று இதுவரை வழங்கப்படவில்லை.
குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் ஒருவருக்கு கடிதமொன்றை அனுப்ப வேண்டும் என்றால், அந்த கடிதம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்கே முதலில் செல்லும்.
அதன்பின்னர், அங்கிருந்து பெருந்தோட்ட மக்களுக்கு, தோட்ட நிர்வாகம் பகிர்ந்தளிக்கும் வகையிலேயே இந்த நடைமுறை அமைந்துள்ளது.
இந்திய வம்சாவளி தமிழர்கள்
இலங்கையிலுள்ள ஏனைய மக்களுக்கு தபால் திணைக்களத்தினால் தமது வீடுகளுக்கே நேரடியாக கடிதங்கள் விநியோகிக்கப்படுகின்றமை வழக்கமான விடயமாகும். ஆனால், இந்த மலையக மக்களுக்கு மாத்திரம் இன்று வரை தமது வீடுகளுக்கு கடிதங்கள் நேரடியாக சென்று கிடைப்பதில்லை.
ஒரே பெயரை கொண்ட ஒருவருக்கு மேற்பட்டோர் பெருந்தோட்ட பகுதியொன்றில் இருப்பார்களாயின், முகவரி இல்லாமையினால், குறித்த கடிதம் அதே பெயரிலுள்ள வேறு நபர்களுக்கு கிடைத்த சம்பவங்களும் மலையக பகுதிகளில் பதிவாகியுள்ளன.
அத்துடன், பெருந்தோட்ட நிறுவனங்களினால், கடிதங்கள் உரிய நேரத்தில் கையளிக்கப்படாமையினால், தமது வாழ்க்கையை தொலைத்த பலர் இன்றும் மலையக பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தொழில் வாய்ப்புக்கள், பல்கலைக்கழக வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்ட சம்பவங்களும் முகவரி இல்லாத பிரச்னையினால் மலையக மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
தமக்கென முகவரி இல்லாமையினால், நாளாந்தம் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாக மாவத்தகம - முவன்கந்த பகுதியைச் சேர்ந்த ஹரிசந்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''எங்களுக்கு வருகின்ற கடிதங்கள் எல்லாம், தோட்டத்திற்கு தான் வரும். அப்படி வரும் கடிதங்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தாமதமாகவே கிடைக்கும். பல பரீட்சைகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
கடிதங்கள் கிடைக்காமையினால் தொழில்கள் கிடைக்காது போயுள்ளன. எனது மனைவி பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான கடிதம் தாமதமாக கிடைத்தமையினால், எமது மனைவிக்கான பல்கலைக்கழக சந்தர்ப்பமும் இல்லாது போயுள்ளது.
கடிதம் தாமதித்து கிடைத்தமையினால், அவரின் கல்வியும் பாதிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு கூட, எனது மனைவியின் தங்க நகையொன்றை அடகு வைத்திருந்தேன்.
அதற்கு வங்கியிலிருந்து அனுப்பும் கடிதம் கிடைக்காமையினால், அந்த சபை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முன்னர் யாராலது மரணித்தால், தந்தி மூலமே அறிவிக்கப்படும். ஆனால், எமக்கு கடிதம் கிடைக்காமையினால், தந்திகள் கிடைப்பதில்லை.
அவ்வாறு கிடைத்தாலும் தாமதித்து கிடைக்கின்றமையினால் இறுதி சடங்குகளில் கூட பங்கு கொள்ள முடியாது. இப்படியான பல பிரச்னைகள் காணப்படுகின்றன. இன்று வரை எல்;லாரும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்" என ஹரிசந்திரன் குறிப்பிடுகின்றார்.
தமக்கு 200 வருட காலமாக சரியான முகவரியொன்று இல்லாது இன்றும் வாழ்ந்து வருவதாக யட்டியாந்தோட்டை - பனாவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.பரமேஸ்வரி தெரிவிக்கின்றார்.
''200 வருட காலமாக சரியான முகவரியொன்று இல்லை. முகவரி இல்லாதமையினால் கடிதமொன்று கிடைப்பதும் மிகவும் கஷ்டமாக தான் இருக்கின்றது. பனாவத்தை என்று சொன்னால், 7 குரூப் (பிரிவுகள்) இருக்கின்றன. 7 பிரிவுகளிலும் ஒரே பெயர் உள்ள இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது, கடிதங்கள் மாறுப்பட்டு செல்கின்றன. வங்கியிலிருந்து கடிதம் வந்தாலும் சரியாக அது கிடைப்பதில்லை. தோட்டத்தில் வேலை செய்யும் நாம், நிறைய இழக்கின்றோம். வறுமை கோட்டில் தான் வாழ்கின்றோம். வீட்டிற்கு சரியாக இலக்கமொன்று கிடையாது. இந்த 200 வருட காலமாக தோட்டத் தொழிலாளி;கள் இப்படி தான் வாழ்ந்து வருகின்றோம்." என எஸ்.பரமேஸ்வரி குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கு நிரந்தர முகவரியொன்றை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர். ஒருவரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை பெற்றுக்கொடுக்க பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டம் மாவத்தகம பிரதேசத்தின் முவன்கந்த பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த ஜீவரட்ணம் சுரேஷ்குமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன, அந்த அமைச்சின் செயலாளர், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, அந்த அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஜீவன் தொண்டமான், அரச பெருந்தோட்ட திணைக்களம், பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அமைச்சர் பந்துல குணவர்தன, சட்டமா அதிபர் உள்ளிட்ட 18 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மலையக மக்களுக்கு முகவரியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த ஜீவரட்ணம் சுரேஷ்குமாரையும், பிபிசி தமிழ் சந்தித்து வினவியது.
''குறிப்பாக 200 வருட காலமாக இந்த அரச சேவை எங்களுக்கு கிடைக்கப் பெறாமையானது, அடிப்படை உரிமை மீறலாகவே நான் பார்க்கின்றேன். குறிப்பாக ஒருவரின் முகவரி என்பது அவனை அடையாளப்படுத்தும் அடையாள பொருளாகும். நாங்கள் இன்றும் முழுமையான பிரஜைகளுக்கு கிடைக்க வேண்டிய சக வாய்ப்புக்களை, சக உரிமைகளை அனுபவிக்காத சமூகமாகவே வாழ்ந்து வருகின்றோம்.
நாங்கள் 200 வருட காலம் வாழும் இந்த இலங்கை நாட்டில், நாங்கள் அபிமானம் மிக்க பிரஜைகளாக இருக்கின்றோம். எவருக்கும் நாங்கள் தாழ்ந்திருக்க வேண்;டிய அவசியம் கிடையாது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒரு சமூகம். ஆனாலும், இந்;த அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய பல சேவைகள் இன்றும் கிடைக்காமை என்பது மிகவும் மன வருத்தத்திற்கு ஒன்றாகும்.
நாங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த காலம் தொட்டு, இன்று வரை இலங்கையின் பொருளாதாரத்திற்கு காத்திரமான சேவையை ஆற்றி வருகின்றோம். தேயிலை, ரப்பர், மிளகு, தென்னை இவ்வாறான துறைகளில் எங்களது முன்னோர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.
இந்திய வம்சாவளி தமிழர்கள்
நாங்கள் இன்று நான்காவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால், எதிர்வரும் சமூகத்திற்கு இந்த முகவரி பிரச்னை இருக்கக்கூடாது.
முகவரி இல்லாமையினால், பல்வேறு அரச தொழில்வாய்ப்புக்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், புலமை பரிசில்கள், பல்;வேறு வகையான அடிப்படை வசதிகள் கூட இழந்த சமூகமாக நாங்கள் இருக்கின்றோம். இடைதரகர்களாக இருக்கின்றவர்களே இந்த கடிதங்களை வழங்குகின்றனர்.
எங்களது ஊரில் ஒரு உப தபால் அலுவலகம் இருக்கின்றது. ஆனால், அதற்கு அருகில் இருக்கும் எங்களது வீடுகளுக்கு அவர்கள் கடிதங்களை வழங்க மாட்டார்கள். தோட்ட முகாமைத்துவத்திற்கே கடிதங்களை வழங்குவார்கள். தோட்ட முகாமையாளர் அந்த கடிதங்களை எமக்கு பகிர்ந்தளிக்கின்றார்.
எதிர்வரும் காலத்திலும் முகவரி இல்லாத சமூகமாக எங்களுக்கு வாழ முடியாது. அது எங்களின் அடிப்படை உரிமை. நாங்களும் ஏனைய மக்கள் போன்று வாழ வேண்டியவர்கள்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்தோம். ஆனால் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை" என ஜீவரட்ணம் சுரேஷ்குமார் தெரிவிக்கின்றார்.