Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தில் திருப்பத்திற்கு மேல் திருப்பம்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:58 IST)
தென்காசி இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகா, தனக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமாகிவிட்டதாகக் கூறி அதிரவைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது?
 
தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத். இவர் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த இலஞ்சியில் மர அறுவை ஆலை நடத்திவந்தவர் நவீன் படேல். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத்திலிருந்து தென்காசி பகுதியில் குடியேறியவர்கள். இந்த நவீன் படேலின் மகள் கிருத்திகா படேல் டிப்ளமோ படிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது, வினீத்திற்கும் கிருத்திகாவிற்கும் காதல் ஏற்பட்டது.
 
இருவரும் ஆறு ஆண்டுகளாகக் காதலித்ததாகவும் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நாகர் கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் வினீத் தரப்பு கூறுகிறது.
இதையடுத்து நவீன் படேல் தனது மகள் காணாமல் போய்விட்டதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 4ஆம் தேதி குற்றாலம் காவல் நிலையத்தில் கிருத்திகாவும் வினீத்தும் நேரில் ஆஜராயினர். அப்போது கிருத்திகா வினீத்துடம் செல்ல விரும்பியதால், அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், ஜனவரி14ஆம் தேதி வினீத்தும் கிருத்திகாவும் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த நவீன் படேலும் அவருடைய மனைவி தர்மிஷ்டா படேலும் வினீத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பினார் வினீத். இதற்குப் பிறகு ஜனவரி 25ஆம் தேதி வினீத் தனது மனைவி கிருத்திகா, தனது தந்தை, சகோதரர் விஷால் ஆகியோருடன் சென்று குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க நவீனைக் காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவர் மாலையில் வருவதாகத் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், வினீத்தின் உறவினர் வீட்டிலிருந்து கிருத்திகா சிலரால் கடத்திச்செல்லப்பட்டார். இந்த கடத்தல் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபுவே இது குறித்து பேசும் அளவுக்கு விவகாரம் மிகப் பெரியதாக உருவெடுத்தது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவுசெய்ய காவல்துறை கண்காணிப்பாளரிடம் தான் மூன்று முறை அனுமதி கேட்டதாகவும் அவர் அனுமதிக்கவில்லையென்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து அசட்டையாக இருந்ததாகக் கூறி, சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இது போன்ற கடத்தல் விவகாரத்தில் வழக்குப் பதிவுசெய்ய காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதி தேவையில்லை என்றும் டிஜிபி உத்தரவிட்டார்.
 
இதற்குப் பிறகு தனது மனைவியை மீட்டுத்தர வேண்டுமென ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார் வினீத். இந்த நிலையில்தான் எதிர்பாராத முதல் திருப்பம் ஏற்பட்டது.
 
கிருத்திகா வெளியிட்ட வீடியோக்கள்
கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட கிருத்திகா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தனக்கும் தனது உறவினரான மைத்ரிக் படேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்யாணம் முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் தான் கணவர், குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தன்னுடைய பெற்றோர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமெனவும் வினீத்திடம் கோரிக்கை வைத்தார்.
 
பிறகு இரண்டாவதாக ஒரு வீடியோவை கிருத்திகா வெளியிட்டார். அதில், "என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நான் விரும்பியே என்னுடைய பெற்றோருடன் சென்றேன். நான் வினித் வீட்டில் இருந்தபோது, என்னுடைய பெற்றோரிடமிருந்து பணம் வாங்கிவருமாறு வற்புறுத்தினார்கள். இதனால்தான் நான் மைத்ரிக்கிடம் இந்த விவரத்தைச் சொல்லி என் அப்பாவை கூட்டிவரச் சொன்னேன். தற்போது தொந்தரவு இல்லாமல் இருக்கிறேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாதவர்களையெல்லாம் இழுக்க வேண்டாம். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இதோடு இந்த விவகாரம் முடிந்தால்தான் எல்லோருக்கும் நல்லது" என கிருத்திகா கூறியிருந்தார்.
 
இதற்கு நடுவில் கிருத்திகாவும் வினீத்தும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில் கிருத்திகா, "நீ கொடுத்திருக்கும் கேஸை வாபஸ் வாங்கிவிடு. நான் எங்க அப்பா அம்மாவோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்" என்கிறார். அதற்கு வினீத், "அப்ப, என்னோடு இருக்க உனக்கு இஷ்டமில்லையா?" எனக் கேட்க, "இனிமேல் அப்படி ஏதும் வேண்டாம். நீயும் உன் வாழ்க்கையில் இதைக் கடந்து செல். நானும் கடந்து செல்கிறேன். நீ கேஸை திருப்பி வாங்கிவிடு. இல்லாவிட்டால், இந்தப் பிரச்னை இழுத்துக் கொண்டே போகும். உங்க அம்மா, அப்பா மீது கேஸ் வரும். அது வேண்டாம்," என்கிறார் கிருத்திகா.
 
"உன்னை யாரும் பயமுறுத்துகிறார்களா?" எனக் வினீத் கேட்க, "அப்படியெல்லாம் இல்லை, நான் யாருக்காகவும் பேசவில்லை" என்று சொல்லும் கிருத்திகா, "நான் சொல்வதைக் கேள். நான் நம் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன், நீயும் நன்றாக இருப்பாய், நானும் நன்றாக இருப்பேன், இரண்டு பேர் குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி, நாம் வாழ வேண்டாம். நீ கேஸை வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்கிறார். "இதை நீ நேரில் வந்து சொன்னால் வாபஸ் வாங்கிவிடுகிறேன்," என்கிறார் வினீத்.
 
இதற்கிடையில், மாரியப்பன் வினீத் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் காவல் நிலையத்தில் கிருத்திகாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் என 12 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திர மேஷிஹா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஷ்டா பட்டேல், விஷால், கீர்த்தி பட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி கிருத்திகா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரானார். இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கிருத்திகாவிடம் விசாரித்தனர். தனக்கு மைத்ரிக் என்பவருடன் 2022 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடந்திருப்பதால் தாமாக விரும்பியே குஜராத் சென்றதாக தெரிவித்தார்.
 
"குஜராத்தில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா?" எனக் கேட்டனர். தற்போது அப்படி ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றார் கிருத்திகா.
 
அப்போது வினீத்துடன் திருமணம் செய்த புகைப்படங்களைக் காட்டிய நீதிபதிகள், "ஏற்கனவே மைத்ரிக்குடன் திருமணம் நடந்துவிட்டது என்றால் ஏன் வினீத்தை திருமணம் செய்ய வேண்டும்? இதன் பிறகு ஏன் குஜராத் செல்ல வேண்டும்? கிருத்திகாவின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது" என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 
இதையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தாமாக விரும்பியே பெற்றோருடன் சென்றதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
கிருத்திகாவின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவரை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெறவேண்டும் என்றும் இருதரப்பும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் அதற்குப் பிறகு பிறகு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
காவல்துறையிடம் கிருத்திகா கொடுத்த வாக்குமூலத்தில், வினீத்தை ஆறு ஆண்டுகளாகக் காதலித்து, பிறகு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். வினித்தை காதலித்ததால் தனது பெற்றோர் குஜராத் அழைத்து சென்று மைத்ரிக் என்பவருடன் திருமணம் செய்து வைத்ததாகவும், அங்கிருந்து வந்த பிறகு மீண்டும் வினீத்துடன் பழக்கத்தைத் தொடர்ந்ததாகவும் பிறகு ஒரு வழக்கறிஞர் உதவியுடன் டிசம்பர் மாதத்தில் வினீத்தைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கிருத்திகா கூறியிருந்தார்.
 
மேலும், வினீத்தின் விட்டிற்குச் சென்ற பிறகுதான் அவர்களது வீட்டின் பழக்க வழக்கம் பிடிக்காமல் பெற்றோருடனும் மைத்ரிக் உடனும் சென்றுவிட்டதாகவும் கிருத்திகா கூறியுள்ளார். அகமதாபாதில் மைத்ரிக் உடன் திருமணம் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய வினீத், "நான் காசு கேட்பதாக அவர்கள் பேச வைத்திருக்கிறார்கள். அவர்கள் கிருத்திகாவை கடத்திக்கொண்டு போனதை எல்லோரும் பார்த்தார்கள். ஐம்பது பேருக்கு மேல் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கதறினார். கதறக் கதற அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள். இப்போது என் மனைவியை பிணைக் கைதி போல வைத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது அவரது உயிருக்கே அச்சுறுத்தல் இருக்குமெனத் தோன்றுகிறது. என்னை இந்த வழக்கை வாபஸ் வாங்க வைக்க முயல்கிறார்கள்" என்றார்.
 
இந்த வழக்கின் விசாரணை தற்போது பிப்ரவரி இருபதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கிருத்திகாவை அரசு காப்பகத்தில் வைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால், இந்த விவகாரத்தில் பல கேள்விகள் இருக்கின்றன. கிருத்திகா படேல் கடத்தப்படும் காட்சியின் சிசிடிவி வீடியோ இருக்கிறது. இந்த நிலையில் தாமாகவே விரும்பி பெற்றோருடன் சென்றதாக கிருத்திகா கூறியிருப்பது முரண்பாடாக உள்ளது. மேலும், அவர் கடத்தப்பட்ட பிறகு, முதலில் கேரளாவுக்குச் சென்று பிறகு, அங்கிருந்து பல கார்கள் மாறி குஜராத் சென்றதை காவல்துறை கண்டறிந்துள்ளது. கிருத்திகா தாமாகச் சென்றிருந்தால், இப்படி பல கார்கள் மாறிச் செல்ல வேண்டியதில்லை. அதேபோல, வினீத்தைத் திருமணம் செய்துவிட்டு, மைத்ரிக் என்பவரையும் திருமணம் செய்ததாக அவர் கூறியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதற்கிடையில் வழக்கு முடியும்வரை கிருத்திகாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அவரது தாத்தாவும் பாட்டியும் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments