Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தற்கொலை ட்ரோன்கள்' மூலம் உக்கிர தாக்குதலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா -யுக்ரேனில் பற்றிய பதற்றம்

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (15:34 IST)
யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
தலைநகர் கீவ்வில் இரவு முழுவதும் வெடிசப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறும் நகர மேயர், ரஷ்யாவின் காமிகேஸ் வகை பெரிய ட்ரோன் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதலில் தெற்கு ஓடேசா பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், தங்களது சேமிப்பு கிடங்கு ஒன்றும் ரஷ்ய தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
 
கடந்த எட்டு நாட்களில் நான்காவது முறையாக திங்கள்கிழமை யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 9 ஆம் தேதி ரஷ்யாவில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் உக்கிரமான தாக்குதலை தொடங்கி உள்ளது.
 
யுக்ரேன் மக்களை இலக்காக வைத்து ரஷ்யா கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இந்த நிலையில், யுக்ரேன் எதிர்தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அதனை தடுக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாய் வான்வழித்த தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
 
நள்ளிரவில் தொடங்கிய ரஷ்யாவின் தாக்குதல் நான்கு மணி நேரம் நீடித்ததாக யுக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களை கொண்டு நாடு முழுவதும் பரவலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது என்றும் யுக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
 
மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல்
ஒரே நேரத்தில் 60 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடைபெற்றதில் இதுதான் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்றும் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்சோ கூறியுள்ளார்.
 
அத்துடன், 60 ட்ரோன்களில் 36 ட்ரோன்கள் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்தே தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜூலியானி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்திருந்த ட்ரோன் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டன என்று ராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
 
மத்திய வெஷ்சென்கில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது ட்ரோன் குப்பைகள் விழுந்ததில் குடியிருப்புவாசிகள் காயமடைந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
கருங்கடலில் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடேசாவில் எட்டு ஏவுகணைகளை கொண்டு ரஷ்ய குண்டுவீச்சாளர்கள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த கிடங்கு தீக்கிரையானது என்று யுக்ரைனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக போரால் பாதிக்கப்படுவோருக்கு தங்களால் உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கெர்சன் ,கார்கிவ் மற்றும் மைகோலைவ் பகுதிகளில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் தீவிரமாக தெரிவதாக யுக்ரேனிய ராணுவம் இன்று கூறியுள்ளது.
 
கெர்சன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தபட்சம் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஜாபோரிஜியா எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள ரஷ்ய நிர்வாக அமைப்பின் தலைவர் விளாடிமிர் ரோகோவ், சிறிய நகரமான ஓரிசிவ்வில் ஒரு கிடங்கையும், யுக்ரைனிய துருப்புகளையும் ரஷ்ய படை தாக்கியதாக கூறியுள்ளார்.
 
ரஷ்ய படையினர் தங்கள் மீது ஷெல் தாக்குதலை முடக்கிவிட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை (மே 9) வெற்றித் தின கொண்டாட்டங்களுக்குள் பாக்முட் நகரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் தாக்குதலை நடத்தி வருவதாகவும் கிழக்கு பகுதியில் முற்றுகையிடப்பட்ட நகரான பாக்முட்டில் உள்ள யுக்ரேனிய படைகளின் தளபதி கூறினார்.
 
ரஷ்ய துருப்புகள் மற்றும் அவர்களுடன் இணைந்து போரிட்டு வரும் தனியார் அமைப்பான வாக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள் பாக்முட் நகரை கைப்பற்ற பல மாதங்களாக தீவிரமாக முயன்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், போருக்கு தேவையான வெடிப்பொருட்கள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என்று மாஸ்கோ உறுதி அளித்ததையடுத்து, தங்களது போராளிகளை பாக்முட் நகரைவிட்டு வெளியேற்றும் முடிவில் இருந்து சில தினங்களுக்கு முன் பின்வாங்கியது வாக்னர் குழு நிர்வாகம்.
 
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கேற்ப மே 9 ஆம் நாள் ஐரோப்பிய தினமாக கொண்டாடப்படும் என்றும், இதற்கு கிடைக்கப்பெறும் நாடாளுமன்ற ஒப்புதல் ரஷ்யாவுக்கு ஓர் வலிமையான கண்டனமாக இருக்கும் எனவும் யுக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
 
“ரஷ்ய பாசிசம்” என்பதன் சுருக்கமான “ரஷ்யவாதத்தால்” ஐரோப்பிய ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நினைவுகூரும் விதத்தில் “ஐரோப்பிய தினம்” இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மே 8 ஆம் தேதி தான், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதற்கான அடையாள தினமாக உலகெங்கும் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜெலென்ஸ்கி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments