Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு கிடைத்த அமோக வரவேற்பு

Love
, திங்கள், 24 ஜூலை 2023 (21:59 IST)
அடுத்த சில நாட்களில் எனக்கும் அஞ்சுவுக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளாது. 10-12 நாட்கள் கழித்து அவர் இந்தியாவுக்கு செல்வார். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள மீண்டும் பாகிஸ்தான் வருவார்.
 
இது எனக்கும், அஞ்சுவுக்குமான தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயம். இதில் யாரும் தலையிட வேண்டாம். ஊடகங்களில் இருந்தும் நாங்கள் விலகியிருக்க முயல்கிறோம்.
 
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் மான் பாலா மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதான நஸ்ருல்லா, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணுடன் சமூக ஊடக வாயிலாகத் தொடர்புகொண்டு நட்பாகப் பழகியிருக்கிறார். அது காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.
 
தொடர்ந்து இந்தக் காதல் உறவு அவர்களுக்குள் மிகவும் ஆழமான உறவாக மாறியது. இதற்கிடையே, அண்மையில் நஸ்ருல்லா உடனான தனது உறவை முறையான, சட்டப்பூர்வமான உறவாக மாற்ற அஞ்சு பாகிஸ்தானுக்கு சென்றார்.
 
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மான் பாலாவை அடைந்த அஞ்சு பிபிசியுடன் ஒரு சிறப்பு உரையாடலில் பங்கேற்றார்.
 
அப்போது அவர், "திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் தமக்கு எந்த அழுத்தமும் இல்லை," என்று கூறினார். அதேவேளையில் அவருக்கும் திருமணத்திற்காக மதம் மாறுவதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை என்பது அவரது உரையாடலில் தெரிய வந்தது.
 
 
தற்போது மான் பாலா மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லா வீட்டில் அஞ்சு வசித்து வருகிறார். மான் பாலா மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது முஷ்டாக் பிபிசியிடம் பேசியபோது அஞ்சு அங்கு இருப்பதை உறுதிப்படுத்தினார்.
 
இந்தக் காதல் கதை, அண்மையில் பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும், இந்தியாவின் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதையைப் போன்றது. அஞ்சு சட்டப்படி விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றிருந்தாலும், அவர்கள் இருவரும் விசாவுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
 
 
தனது தனிப்பட்ட வாழ்க்கையை காட்சிப்பொருளாக்க விரும்பவில்லை என்கிறார் நஸ்ருல்லா.
 
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளார். மொபைலில் பப்ஜி கேம் விளையாடியபோது சச்சின் மீனாவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அது சிறிது காலம் கழித்து காதலாக மாறியது.
 
அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "இப்போது நான் அவரை நேசிக்கிறேன். அவருக்காக எனது நாட்டைவிட்டு இங்கு வந்துள்ளேன்," என்று கூறினார்.
 
பாகிஸ்தான் மற்றும் இந்திய குடிமக்களுக்கு இடையே இதுபோன்ற காதல் கதைகள் புதிதல்ல. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலவுவதன் காரணமாக, இப்போது இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்ச விசாக்களை மட்டுமே வழங்குகின்றன.
 
பாகிஸ்தானுக்கு விசா கிடைப்பது அஞ்சுவுக்கு எளிதாக இருக்கவில்லை. குறிப்பாக பாகிஸ்தானின் தொலைதூர மாவட்டமான மான் பாலாவை அடைந்தது மிகவும் சிரமமான அனுபவமாக இருந்தது. இந்த மாவட்டத்தின் ஓர் எல்லை ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது.
 
பொதுவாக, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர குடிமக்கள் விசா வழங்கும்போது மிகக் குறைந்த நகரங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கின்றன.
 
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவின் காதல் கதை எப்படிட்ப தொடங்கியது? அஞ்சுவுக்கு பாகிஸ்தான் செல்ல விசாவும், மான் பாலா மாவட்டத்திற்கு செல்ல அனுமதியும் கிடைத்தது எப்படி?
 
 
ஃபேஸ்புக் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அஞ்சு என்பவருடன் தொடர்புகொண்டதாக நஸ்ருல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது கோரிக்கையின் பேரில், அவரது தனிப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுகின்றன.
 
அஞ்சுவிடம் பேச பிபிசி கோரியபோது, ​​இந்த நேரத்தில் அஞ்சு ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை என்று நஸ்ருல்லா கூறினார்.
 
நஸ்ருல்லா கூறுகிறார், "முதலில் இந்தத் தொடர்பு நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. அதன்பிறகு நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து பயணிக்க முடிவு செய்தோம்."
 
நஸ்ருல்லா கூறுவதன் அடிப்படையில் பார்த்தால், அவரது இந்த முடிவில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு இணக்கமாக உள்ளனர்.
 
அஞ்சு பாகிஸ்தானுக்கு வருவதாகவும், இங்கு வந்து என் குடும்பத்தாரை சந்திப்பதாகவும், அதன் பின்னர் பாகிஸ்தானில் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என்றும், தொடர்ந்து வரும் நாட்களில் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால் இந்தப் பயணத்தை சாத்தியமாக்குவது இருவருக்கும் எளிதாக இருக்கவில்லை. எல்லைப் பகுதி பிரச்னைகளைத் தவிர, கடந்த ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதட்டமான உறவுகளும் ஒரு பெரும் தடையாக இருந்தது.
 
பாகிஸ்தானுக்கு விசா கிடைப்பது அஞ்சுவுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக நஸ்ருல்லா கூறுகிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், "எங்கள் நோக்கங்கள் தெளிவாக இருந்தன. இதனால் நாங்கள் இருவரும் தைரியத்தை இழக்கவில்லை," என்கிறார்.
 
 
ஒருபுறம், அஞ்சு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு நடையாய் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் நஸ்ருல்லா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அலுவலகங்களுக்குச் சென்று அஞ்சுவுக்கு விசா கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
 
"அஞ்சு அங்குள்ள அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிப்பது, அவர்களுக்கு விளக்குவது உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
 
விசா பெறுவது அஞ்சுவின் உரிமை என்றும், நாங்கள் இருவரும் சந்திக்க விரும்பினால், எங்களுக்கு அதற்கான அனுமதியை அளிக்கவேண்டும் என்றும் நான் இங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி கேட்டு, அதைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்," என்கிறார் நஸ்ருல்லா.
 
இறுதியில், இருவரின் முயற்சியும் வெற்றிபெற்றது. ஆனால் அதிகாரிகளைச் சமாதானம் செய்வதற்கு மட்டுமே இரண்டு ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு அஞ்சு பாகிஸ்தானுக்கு செல்ல விசா கிடைத்ததுடன், மான் பாலாவுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டார்.
 
அஞ்சு பாகிஸ்தானை அடைவதற்கும், மான் பாலாவிற்கும் செல்வதற்கும் அனைத்து சட்டத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ததாக நஸ்ருல்லா கூறுகிறார்.
 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நானும் அஞ்சுவும் விசா பெற பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்துள்ளோம். இப்போது விசா நடைமுறையில் இருப்பதால், இனி எந்த பிரச்னையும் இருக்காது," என்றார்.
 
நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், அவரைத் திருமணம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தார்.
 
உறவில் மதம் சம்பந்தப்படவில்லை
இந்தியாவில் பணியாற்றி வந்த தனது நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு அஞ்சு பாகிஸ்தானுக்கு வந்திருப்பதாகவும், விரைவில் இந்தியாவுக்கு திரும்பி அவரது வேலையைத் தொடரப் போவதாகவும் நஸ்ருல்லா கூறுகிறார்.
 
பாகிஸ்தானில் அஞ்சு மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது தொடர்பாக அவர் கூறுகையில், "அஞ்சு தற்போது எனது வீட்டில் வசித்து வருகிறார். இங்கு அவர் முற்றிலும் நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ்கிறார். ஆனால் இந்தச் செய்தி எல்லோருக்கும் தெரிந்துவிட்ட பிறகு ஊடகங்களின் முன் அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை," என்றார்.
 
"இங்கே ஏராளமான மீடியாக்களும் மக்களும் கூடிவிடுகிறார்கள். தேவையென்றால் மீடியாக்களிடம் நானே பேசுவேன் என்று எல்லோரிடமும் சொல்கிறேன். எங்கள் உறவை பிரச்னையாகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.
 
எங்கள் உறவில் மதம் சம்பந்தப்படவில்லை. அஞ்சு மதம் மாறினாலும் மாறாவிட்டாலும் அது அவரது முடிவு. என்னுடைய முடிவை அவர் மதிப்பது போல நானும் அவருடைய முடிவை மதிக்கிறேன்."
 
அஞ்சுவின் குடும்பத்திலும், அஞ்சுவின் முடிவுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும், அவர்களது உறவில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் நஸ்ருல்லா கூறுகிறார்.
 
"அதனால்தான் நான் சொல்கிறேன், எங்கள் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும், எங்கள் உறவையும், எங்களையும் ஒரு காட்சிப் பொருளாக யாரும் மாற்றக்கூடாது. நாங்கள் அதை விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு எங்களது வாழ்க்கை குறித்து நன்றாக யோசித்து முடிவெடுப்போம்."
 
 
நஸ்ருல்லா உடனான அஞ்சுவின் நட்பு, அவர் பாகிஸ்தானுக்கு வந்ததில் தொடங்கி, திருமண நிச்சயதார்த்தம், மணமுடிக்கும் திட்டங்கள் குறித்து அஞ்சுவிடம் பிபிசி கேள்விகளை எழுப்பியது. அந்தக் கேள்விகளுக்கு அவர் நேர்மையாக பதிலளித்தார்.
 
 
 
 
நஸ்ருல்லாவுடனான தன் உறவு இன்று வரை சிறப்பாக உள்ளதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் என்னுடன் அன்பாக இருக்கிறார்கள் என்றும் அஞ்சு கூறுகிறார்
 
நிச்சயதார்த்தம், திருமணத்தைப் பொறுத்தவரை அதுகுறித்து என் கணவரிடம் எதையும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அவரிடம் அதிகம் பேசுவதில்லை. நான் நாடு திரும்பினால் அது எனது குழந்தைகளுக்காகத்தான் இருக்கும் என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளேன். எனக்கு இன்னும் ஒரு மாதம் விசா உள்ளது.
அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்தியா திரும்புவேன். எல்லா விஷயங்களையும் பார்த்து, கேட்டறிந்த பிறகுதான் திருமண நிச்சயதார்த்தம் குறித்து முடிவு செய்வேன். எல்லாம் நல்லபடியாக அமைந்தால், இந்தியா திரும்புவதற்கு ஒரு நாளைக்கு முன் நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன். அதன் பிறகு இந்தியா வந்து, திருமண நிச்சயதார்த்திற்குப் பிந்தைய நடைமுறைகளை முடிப்பேன்.
நஸ்ருல்லாவுடனான என் உறவு இன்று வரை சிறப்பாக உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களும் என்னுடன் அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை. அத்துடன் எனக்கு ஏற்கெனவே மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று அஞ்சு பிபிசியிடம் கூறியுள்ளார்.
 
அஞ்சுவுக்கு போலீஸ் முழு பாதுகாப்பு கொடுப்பதோடு, அவரது தனியுரிமையையும் முழுவதுமாகக் கவனித்துக் கொள்வதாக மான் பாலா மாவட்ட காவல் அலுவலர் முகமது முஷ்டாக் தெரிவித்தார்.
 
கைபர் பக்துன்க்வாவில் இந்திய பெண் ஒருவர் இருப்பது குறித்து அந்தப் பகுதி மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அவரை வரவேற்கும் ஏற்பாடுகளுக்கு வானிலையும் தற்போதைய சூழ்நிலையும் தடையாக உள்ளன.
 
நஸ்ருல்லாவின் உள்ளூர் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகரான ஃபரிதுல்லா, பிபிசியிடம் பேசுகையில், "அஞ்சு வெள்ளிக்கிழமை காலையில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது இங்கு வந்தார்.
 
அவருக்காக இப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சனிக்கிழமை பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்பகுதியில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அதனால் இந்த வரவேற்பு நிகழ்ச்சி தடைபட்டது. ஆனால் பின்னர் இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
 
ஃபரிதுல்லா தொடர்ந்து பேசுகையில், "அஞ்சு எங்களின் விருந்தாளி என்பதுடன் அவர் எங்கள் மருமகள். அவர் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கே தங்கியிருக்கலாம். அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. அவருக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்வோம். அவருக்கு எல்லா வசதிகளும் இங்கே உள்ளன," என்றார்.
 
மேலும், "எங்கள் பகுதியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. எங்கள் வீட்டுப் பெண்கள் தொடர்ந்து அஞ்சுவை சந்தித்து பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று எல்லா பெண்களும் உறுதியளித்துள்ளார்கள். அஞ்சுவை மிக மகிழ்ச்சியாக அனைவரும் வரவேற்று உபசரிக்கின்றனர்," என்றார் ஃபரிதுல்லா.
 
 
மான் பாலா மாவட்ட காவல் அலுவலர் முகமது முஷ்டாக், கூறுகையில், இங்கு வந்த அஞ்சுவின் விசா பேப்பர்கள், மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் போலீசார் சோதனை செய்து, அவை அனைத்தும் ஒழுங்காக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் என்று கூறினார்.
 
மேலும், அஞ்சுவுக்கு ஒரு மாத காலத்திற்கு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நேரத்தில் அவர் மான் பாலாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் காவல் நிலையத்திற்கு நஸ்ருல்லாவையும், அஞ்சுவையும் வரவழைத்து போலீசார் முறையான விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
 
முகமது முஷ்டாக் தொடர்ந்து பேசுகையில், "இந்த சட்டப்பூர்வமான உரையாடல், பாகிஸ்தானுக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களுடனும் நடத்தப்படுகிறது. அவர்களுடன் பேசி, நேர்காணல் செய்த பிறகு, அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்," என்றார்.
 
அஞ்சுவுக்கு போலீஸ் முழு பாதுகாப்பு கொடுப்பதோடு, அவரது தனியுரிமையையும் முழுவதுமாகக் கவனித்துக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாத்தா, பாட்டிகளுக்கு பேரன் செய்யும் கடமை இது!- அமைச்சர் உதயநிதி