தமிழக சட்டமன்றத் தேர்தல், தனிச் சின்னத்தில் போட்டி, பா.ம.கவுடன் கூட்டணி சாத்தியமா என்பது குறித்து எல்லாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.
கே. தி.மு.க. கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி வரக்கூடும் என்ற பேச்சுகள் தற்போது அடிபடுகின்றன. அப்படியான சூழலில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ப. பாட்டாளி மக்கள் கட்சி எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும். இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள். நாங்களும் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்திருக்கிறோம். ஒரு முறை அண்ணா தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில், அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இந்தத் தருணங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான விஷயங்கள் குறித்து விமர்சனங்களை வைத்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது கிடையாது.
பா.ம.கவும் தி.மு.கவும் கூட்டணி வைக்கும் நிலைப்பாட்டை எடுக்கின்றன என்றால், அவரவர் கட்சி நலன் சார்ந்து அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. வி.சி.கவை உடன் வைத்துக்கொள்வதால் கிடைக்கும் ஆதாயத்தைவிட, வெற்றி வாய்ப்பைவிட பா.ம.கவை வைத்துக்கொள்வதால் கூடுதலான ஆதாயம் கிடைக்கும் என்றால் அதைத்தான் அவர்கள் தேர்வுசெய்வார்கள்.
பா.ம.க. வந்தால், வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தாலும்கூட, அக்கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று தி.மு.க. சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நோக்கத்தோடு தேர்தலை சந்திக்கிறார்கள். காய்களை நகர்த்துகிறார்கள். வி.சி.க. இப்போது அந்த இடத்தில் இல்லை.
ஆகவே, நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். அதாவது, சாதீய, மதவாத சக்திகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். இருபது ஆண்டுகளாக நாங்கள் பேசிவரும் அரசியல்தான் இது. 2011க்கு முன்பு பா.ஜ.கவுடன் மட்டும்தான் கூட்டணி இல்லை எனக் கூறிவந்தோம். ஆனால், அதற்குப் பிறகு பா.ம.கவுடனும் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்தோம். அவர்கள் இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறுவதில்லை என முடிவெடுத்தோம்.
பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமென்றால், அவர்களுடன் சேரக்கூடாது, அவர்களைச் சேர்க்கக்கூடாது என நான் சொல்ல முடியாது. சேர வேண்டுமா என்பதை பா.ம.கவும் சேர்க்க வேண்டுமா என்பதை தி.மு.கவும்தான் முடிவுசெய்யும். இதில் நாங்கள் கருத்துச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் முடிவுசெய்ய முடியும். பாஜக, பாமக ஆகிய இரு கட்சிகளும் இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு.