Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனையிலேயே பிரச்சனையா?

கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனையிலேயே பிரச்சனையா?
, சனி, 15 பிப்ரவரி 2020 (16:02 IST)
கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் உண்மையிலேயே சரியான முடிவுகளை வழங்குகிறதா என்ற ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. சில நாடுகளில், கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று ஆறு முறை பரிசோதிக்கப்பட்டு இல்லை என்று முடிவுகள் வந்தவர்களுக்கு, ஏழாவது முறை பரிசோதனை செய்த பிறகே கொரோனா தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் மையாக விளங்கும் சீனாவின் ஹூபே மாகாணத்தின் அதிகாரிகள், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மூலம் உறுதிசெய்வதற்கு பதிலாக, வெறும் அறிகுறிகளை வைத்தே முடிவுக்கு வருகின்றனர். இதன்  விளைவாக, ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 15,000 பேர் இணைந்தனர்.
 
எப்படி செய்யப்படுகிறது இந்த பரிசோதனை?
பரிசோதனைகளின் மூலம் ஒருவரது உடலில் கொரோனா வைரஸின் மரபணு குறியீடு உள்ளதா என்பதை மருத்துவ பணியாளர்கள்  ஆராய்கின்றனர்.
 
அதாவது, நோயாளியிடமிருந்து பெறப்படும் மாதிரியில் கொரோனா வைரஸின் மரபணு குறியீடு உள்ளதா என்பது ஆய்வகத்தில் பலகட்ட  சோதனைக்கு பிறகு கண்டறியப்படும்.
 
'கொரோனா வைரஸை கண்டறிய திறன்பேசி போதும்' - எப்படி சாத்தியம்?
கொரோனா குறித்து காணொளி: மாயமான சீன செய்தியாளர்கள் - நடந்தது என்ன?
"ஆர்.டி-பி.சி.ஆர்" எனும் இந்த பரிசோதனை முறைதான் எச்.ஐ.வி, குளிர் காய்ச்சல் உள்ளிட்ட மற்ற வகை வைரஸ் தாக்குதல்களை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நம்பகத்தன்மை மிக்க பரிசோதனை முறையாக கருதப்படுகிறது.
webdunia
"இந்த வகை பரிசோதனைகள் மிகவும் துல்லியமானவை" என்று கூறுகிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் நத்தலி  மெக்டெர்மொட்.
 
என்னதான் பிரச்சனை?
 
இதுதொடர்பாக, ரேடியோலோஜி எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொண்ட 167 பேரில் ஐந்து பேருக்கு நுரையீரல் குறைபாடு உள்ள நிலையிலும், அவர்கள் இந்த வைரஸால்  பாதிக்கப்படவில்லை என்று முடிவுகள் வந்தன. ஆனால், மறுபரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் பரிசோதனை குறித்து இதுபோன்ற ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பை முதன்முதலில் வெளிப்படுத்தியதாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவர் லீ வெண்லியாங், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்று பலமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக கூறிய நிலையில், பிறகு அவர் இதே கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், சீனாவை சேர்ந்த சில பத்திரிகையாளர்கள், ஆறுமுறை கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தாக்கம் இல்லை என்று  கூறப்பட்டவர்கள், ஏழாவது முறையாக செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டதை  அம்பலப்படுத்தியுள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரிசோதனை முறை குறித்த இதுபோன்ற கவலைகள் சீனா மட்டுமின்றி, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும்  நிலவுகின்றன.
 
இதற்கிடையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் டாக்டர் நான்சி மெஸ்ஸோனியர், தங்களது சில சோதனைகள் "தெளிவற்ற" முடிவுகளைத் தருகின்றன என்று கூறுகிறார்.
 
பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் குறிப்பிட்ட நோயாளிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்ற  கருத்து பொதுவாக நிலவுகிறது.
 
அதாவது, சீனாவின் தற்போதைய காலநிலைப்படி, இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படுவது இயல்பானது என்றும், அதை கொரோனா  வைரஸின் தாக்கமாக இருக்குமோ என்று மக்கள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
 
"கொரோனா வைரஸின் தொடக்க கால அறிகுறிகள், சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை விளைவிக்கும் மற்ற வைரஸ்களை ஒத்து காணப்படும்" என்று கூறுகிறார் மருத்துவர் மெக்டெர்மொட்.
 
"ஒருவேளை அவர்கள் முதல்முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கக் கூடும். அடுத்த  முறை பரிசோதனை மேற்கொள்வதற்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவின் பரவல் ஏற்பட்டு பிறகு அது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதற்கு  வாய்ப்புள்ளது."
 
ஒருவேளை முதல் முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட நபருக்கு கொரோனாவின் தாக்கம் தொடக்க நிலையில் இருந்திருந்தால் அது பரிசோதனையில் வெளிப்படாமல் போயிருக்கவும் வாய்ப்புள்ளது.
 
"இபோலா பாதிப்பை உறுதிசெய்வதற்கு பரிசோதனை மேற்கொண்டதிலிருந்து சுமார் 72 மணிநேரங்கள் காத்திருந்தோம்" என்று கூறுகிறார்  மருத்துவர் மெக்டெர்மொட்.
 
இந்நிலையில், பரிசோதனை மேற்கொள்ளும் விதத்திலும் பிரச்சனைகள் இருக்கக் கூடும். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரிடமிருந்து பரிசோதனைக்கு தேவையான மாதிரியை பெறுவதிலோ, அதை கையாள்வதிலோ சரியான வழிமுறைகள்  கடைபிடிக்காவிட்டாலும் முடிவுகள் தெளிவுற இருக்காது.
 
அதே போன்று, தீவிர நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் ஆரம்ப நிலையை சில மருத்துவர்கள் மற்ற அறிகுறிகளுடன்  ஒப்பிட்டு தவறான முடிவை எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலுக்கு எதிர்ப்பு... காதலர் தினத்தில் தற்கொலைசெய்து கொண்ட காதல் ஜோடி !