Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு பேர் தேர்வு: திடமான மனநிலை தேவை என விளம்பரம்

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு பேர் தேர்வு: திடமான மனநிலை தேவை என விளம்பரம்
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (18:44 IST)
இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி சிறிசேன அறிவித்துள்ள நிலையில், தூக்குலிடும் பணியை செய்ய இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரை தூக்கிலுடப்போவதாக சிறிசேன அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இலங்கையில் 1976ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
இந்த பணிக்கு "திடமான குணாதிசயம்" கொண்டவர்கள் தேவையென பிப்ரவரி மாதம் விளம்பரம் செய்யப்படவுடன், சுமார் 100க்கு அதிகமானோர் அதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
 
அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வயது 18-45க்குள் "வலுவான மனநிலையுடன்" இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த பணிக்கு இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் இரண்டு பெண்களும் விண்ணப்பித்திருந்தனர் என்கிறது அரசு ஊடகமான `டெய்லி நியூஸ்`.
 
 
சிறைத் துறையின் செய்தி தொடர்பாளர், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இருவரும் இரண்டு வாரம் நடைபெறக் கூடிய பயற்சியில் பங்கெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
 
ஐந்து வருடத்துக்கு முன்பு தூக்கிலிடும் பணியில் இருந்தவர் தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பணியை ராஜிநாமா செய்துவிட்டார்.
 
கடந்த வருடம் அந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர் பணியில் சேரவே இல்லை.
 
 
இலங்கையில், பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 1976ஆம் ஆண்டிருந்து யாரையும் தூக்கிலிடவில்லை.
 
இலங்கையில் நடைபெற்று வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்கவே அங்கு மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்படுகிறது என சிறினே தெரிவித்துள்ளார்.
 
இந்த முயற்சி, இந்த வருடத்தின் கடைசியில் நடைபெறவுள்ள தேர்தலில் சிறிசேனவுக்கு நல்ல புகழை பெற்றுத்தரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கும் ஆணையில் நான் கையெழுத்திட்டுள்ளேன்," என சிறிசேன தெரிவித்தார்.
 
"தூக்கிலிடப்பட்டவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தவில்லை. நாங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் அது சிறையில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும்," என அவர் தெரிவித்தார்.
 
மரண தண்டனை நிறைவேற்றும் சிறிசேனவின் முடிவுக்கு எதிராக போராட்டம்
 
"நாட்டில் 2 லட்சம் பேர் போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளனர் என்றும், சிறையில் இருக்கும் 60 சதவீத கைதிகள் போதைப் பொருள் தொடர்பான குற்றத்தில் சிறைக்கு வந்தவர்கள்," என அவர் மேலும் தெரிவித்தார்.
 
இலங்கையில் போராட்டம்
 
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் பல போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
 
கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை முதலாவது போராட்டம் தொடங்கியது.
 
வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட சமூக செயற்பாட்டாளர்கள், மரண தண்டனை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.
 
மரண தண்டனை வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடைபெற்றது.
 
என்ன சொல்கின்றன வெளிநாடுகள்?
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நார்வேயுடன் இணைந்து இலங்கையின் இந்தமுடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
"மரண தண்டனை என்பது மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற இழிவான ஒரு தண்டனை எந்த ஒரு சூழலிலும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்க்கும்." என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், "போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை குறைக்க வேண்டும் என இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கிறது இலங்கை. ஆனால் இம்மாதிரியான தண்டனைகள் குற்றங்களை குறைக்காது," என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
 
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் உள்ளது என்றும், போதைப் பொருள் குற்றத்துக்கு மரண தண்டை என்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது ஏனென்றால் அது சர்வதேச கொலை போன்ற தீவிரமான குற்றச்செயல் இல்லை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
 
இது சர்வதேச அளவில் நாட்டின் பெயரை கெடுக்கும் என்றும் இந்த முடிவு குறித்து சிறிசேன மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக அம்னெஸ்டியின் தெற்காசிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை செய்ய இருந்த 'ஆணின் உயிரைக் காப்பாற்றிய' ஃபேஸ்புக் குழு