ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா எனும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் கோவிஷீல்டு எனும் பெயரில் இந்த தடுப்பூசி இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் பயன்பாட்டு அனுமதிக்கு இந்திய அரசிடம் சில நாட்களுக்கு முன்புதான் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா விண்ணப்பித்துள்ளது என இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கான ஒப்புதலை இந்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிட்டனில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்கள் செலுத்த வேண்டிய முறையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களுக்கு பிரிட்டன் அரசு ஆர்டர் செய்துள்ளது. இது ஐந்து கோடி பேருக்கு செலுத்த போதுமானதாக இருக்கும்.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உருவாக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் மாதம் முதல் முறையாக தன்னார்வலர்கள் உடலில் இது செலுத்தப்பட்டது.
பின்பு பல்லாயிரம் தன்னார்வலர்கள் உடல்களில் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஏற்கனவே பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மலிவானது மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் எளியது என்பதால் பிரிட்டனில் மேலும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.
ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிதீவிர உறை நிலையில் இருப்பு வைக்கவேண்டும். ஆனால் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதனப் பெட்டியிலேயே இருப்பு வைக்க முடியும்.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, வைரஸ் தொற்றும் வாய்ப்பை 70 சதவீதம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கின்றன இந்த மருந்தை வைத்து செய்யப்பட்ட சோதனைகளின் தரவுகள்.
சிம்பன்சி வகை மனிதக் குரங்குகளுக்கு சளி பிடிக்கக் காரணமான வைரஸ் (common cold virus) நுண்மியை செயலிழக்கச் செய்து அதில் இருந்து இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்மி மனித உடலில் நுழைந்ததும் தொற்றாக மாறி பல்கிப் பெருகாத வகையில் அதன் தன்மை மாற்றப்பட்டு தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.