Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி

Ukraine war
, வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:33 IST)
யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது.


யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந்த தாக்குதலில் இறந்தவர்களுள் ஒரு 11 வயது சிறுவனும் அடக்கம்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு நடுவே இந்த தாக்குதலைப் பற்றி அறிவித்தார் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி. 50 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இது பற்றி இதுவரை ரஷ்யா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

குடிமக்கள் தொடர்புடைய கட்டுமானங்களை குறிவைத்துத் தாக்குவது குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துவருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் பற்றி தமக்குத் தெரியவந்ததாகவும், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு ரஷ்யா இப்படித்தான் தயாராகியுள்ளது என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.

இந்த தாக்குதலில் 4 பயணிகள் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் மாதம் மற்றொரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

புதன்கிழமை தங்கள் நாட்டின் விடுதலை நாளை யுக்ரேன் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தை கெடுக்க ரஷ்யா கொடூரமாக எதையாவது செய்யும் என்று முன்கூட்டியே கூறியிருந்தார் ஸெலன்ஸ்கி.

ஸாப்போரீஷியா அணு உலையை போர்ப் பிராந்தியமாக ரஷ்யா மாற்றிவிட்டதாகவும் இதன் மூலம் ஐரோப்பாவின் மக்களையும், தாவரங்களையும் அது ஆபத்துக்கு உள்ளாக்கிவிட்டதாகவும், உலகை கதிர்வீச்சுப் பேரழிவின் முனையில் நிறுத்திவிட்டதாகவும் முன்னர் கூறியிருந்தார் ஸெலன்ஸ்கி.

உணர்ச்சியற்ற இந்தப் போர், யுக்ரேனிலும், யுக்ரேனுக்கு வெளியேயும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.

யுக்ரேன் விடுதலை நாளை ஒட்டி பல நாடுகளில் மக்கள் தெருக்களில் கூடி அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உலகத் தலைவர்களும் இந்த சந்தர்ப்பத்தில் யுக்ரேனுக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டனர்.

முன்கூட்டி அறிவிப்பு இல்லாமல் தலைநகர் கீயவ் சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனுக்கு 6.35 கோடி டாலர் ராணுவ உதவி அளிப்பதாக அறிவித்தார். ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டுக்கு 300 கோடி டாலர் கூடுதலாக உதவி அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபின்லாந்து, போலந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் அறிவித்துள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னோட டார்கெட் சைக்கிள் மட்டும்தான்! – சென்னையில் பிரபல சைக்கிள் திருடன் கைது!