Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ட்விட்டரில் களமாடும் ஒன்றிய உயிரினங்கள்: பாஜக கோபம் கொள்வது ஏன்?

ட்விட்டரில் களமாடும் ஒன்றிய உயிரினங்கள்: பாஜக கோபம் கொள்வது ஏன்?
, சனி, 12 ஜூன் 2021 (11:28 IST)
கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்?
 
மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
 
ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான்.
 
இதெல்லாம் எப்படித் துவங்கியது?
 
தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு அறிக்கைகளில் மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என அழைப்பதா அல்லது தமிழகம் என அழைப்பதா என விவாதம் எழுந்தது.
 
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து "இவனுக பேசுற பேச்சைப் பார்த்தா டைனோசர்கூட தமிழில்தான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு" என்று ட்வீட் செய்யப்பட, அதற்கு, DinosaurOffcial என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து, "ஆமாடா, நான் தமிழில்தான் பேசினேன்" என்று பதில் தரப்பட்டது.
 
இதையடுத்து, ஒவ்வொருவராகத் தங்கள் ட்விட்டர் கணக்கின் அடையாளத்தை மிருகங்களின் பெயராக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர். ஜூன் 7ஆம் தேதி துவங்கிய இந்தப் போக்கு ஒரே நாளில் சூடுபிடித்தது.
 
ஆயிரக்கணக்கான ட்விட்டர்வாசிகள் தங்கள் ஐடிகளை மிருகங்களின் பெயர்களின் மாற்றிக்கொண்டனர். #ஒன்றியஉயிரினங்கள் மற்றும் #ஒன்றிய_உயிரினங்கள் என்ற ஹேஷ்டேகுடன் தங்கள் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர்.
 
இதையடுத்து ஜூன் எட்டாம் தேதி #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முன்னிலை பெற்றது. ஒன்றிய எலி, மண்புழு, புலி, கலர் கோழிக்குஞ்சு, நட்டுவாக்காலி, ஒன்றிய சிங்கம், உ.பி. மாடு என பல பெயர்களில் இவர்கள் உரையாட ஆரம்பித்தனர்.
 
இதில் பல உரையாடல்கள் ஜாலியாக அமைந்திருந்தன. பல உரையாடல்கள் தற்கால அரசியலை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தன.
 
இந்த நிலையில் ஜூன் பத்தாம் தேதியன்று, இந்த உயிரினங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்கள் காட்டை சிலர் ஆக்கிரமிப்பதாகக் கூறி #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இந்த ஹேஷ்டேகும் நாள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதற்குப் பிறகு ஒருவர் ஒன்றிய உயிரினங்களுக்கு என சங்கம் ஒன்றைத் துவங்கினார்.
 
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்பே இல்லாத பா.ஜ.க. திடீரென இதில் ஆத்திரம் அடைந்தது. பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார், "Dravidian Stock, ஒன்றிய உயிரினங்கள் என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் திமுகவின் 1962ம் ஆண்டு கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் தற்போது உள்ளதா?" என்று கேள்வியெழுப்பினார். இதையும் ஒன்றிய உயிரினங்கள் என அழைக்கப்படுபவர்கள் கேலி செய்து ட்விட்டர் பதிவில் ஈடுபட்டனர்.
 
சில ட்விட்டர்வாசிகள் மிருகங்களைப் போலப் பேசிக் கொள்வதற்கு பா.ஜ.க ஏன் ஆத்திரமடைகிறது என நிர்மல் குமாரிடம் கேட்டபோது, "ஒன்றியம்" என்ற சொல்லை பிரபலப்படுத்தவே இவர்கள் இதுபோலச் செய்கிறார்கள் என்றார்.
 
"தி.மு.க. சில ஆண்டுகளுக்கு முன்பாக, பிரிவினை பேசியதைப் போல இப்போதும் செய்ய நினைக்கிறது. மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றியம் என்ற சொல்லை ஒரே வாரத்தில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். Dravidian Stock என்ற சொல்லையும் அவர்கள் இப்படித்தான் பிரபலப்படுத்தினார்கள். இப்போது தி.மு.க. ஆதரவு சேனல்களும் ஒன்றியம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகின்றன. இவர்களுடைய அரசியலுக்காக இளைஞர்களிடம் பிரிவினை எண்ணத்தைக் கொண்டு சேர்க்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த ஒன்றிய மிருகங்கள் என்ற பிரசாரம்" என பிபிசியிடம் தெரிவித்தார் நிர்மல்குமார்.
 
யாரோ சிலர் ட்விட்டரில் மிருகங்களைப் போலப் பேசிக் கொள்வதை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா எனக் கேள்வியெழுப்பியபோது, "இது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். இதெல்லாம் டிஜிட்டல் வியூகத்தில் ஒரு பகுதி. பெரிய அளவில் பணம் செலவு செய்யாமல் இது நடந்திருக்காது. 1962க்கு முன்பு இருந்ததைப் போல பெரிய அளவில் பிரிவினை எண்ணத்தைத் தூண்ட நினைக்கிறார்கள். அதை ஆரம்பத்திலேயே தடுக்க நினைக்கிறோம்" என்கிறார் நிர்மல்குமார்.
 
ஆனால், ஒன்றிய உயிரினங்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. வழக்கம்போல அவை தங்கள் உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
 
தமிழ் ட்விட்டர் பரப்பில் இதுபோல விந்தையான ட்ரெண்டிங் நடப்பது இது முதல் முறையல்ல.
 
2019ஆம் ஆண்டு மே மாத இறுதியில் வடிவேலுவை வைத்து #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அந்தத் தருணத்தில் மீண்டும் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராகியிருந்த நிலையில் #ModiSarkar2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், #Pray_for_Nesamani ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகத் துவங்கியதும், மோதி தொடர்பான ஹேஷ்டேக் பின்தங்கியது. அப்போதும் தமிழக பா.ஜ.கவினர் இந்தப் போக்கு குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

85,000-த்திற்கு கீழ் தினசரி பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!