ஆசியாவில் இதுவரை இல்லாத பொருளாதார மந்தநிலை: எப்போது மாறும் இந்த நிலை?
வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு மோசமான பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட ஆசிய பசிபிக் பகுதி அதிலிருந்து மீண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சி -1.6 சதவீதத்திலிருந்து -2.2 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டாலும், அடுத்த வருடம் 7 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெறும் என்ற செய்தி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த சமீபத்திய தகவல்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து அந்த நாடு மீண்டு வருகிறது என்பதை தெரிவிப்பதால், இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியில் அடுத்த வருடம் சீனா முக்கிய பங்கை வகிக்கும்.
இருப்பினும் இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருப்பதால் வளர்ச்சிக்கான இந்த செய்தி குறித்து முழுமையான நம்பிக்கை பெற இயலாது.
குறைந்த முதலீடுகள் குறித்துத் தெரிவித்துள்ள நிதியம் அதனால், "ஏற்பட்டுள்ள தழும்புகள் மிக ஆழமானது," எனவும் அதன் விளைவு இந்த தசாப்தத்தின் இடைப்பகுதியில் தெரியும் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சீன பதற்றம்
இந்த பிராந்தியத்தில் பெருந்தொற்றினால் மட்டும் இந்த மந்தநிலை ஏற்படவில்லை. அது அமெரிக்க சீன வர்த்தக போரும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது, இரு வலுவான பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் இங்குப் பிரதிபலிக்கிறது என நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் செயல் தலைவர் ஜோனத்தன் ஆஸ்ட்ரி இதுகுறித்து பிபிசி ஆசிய வர்த்தக அறிக்கை நிகழ்ச்சிக்காக பேசுகையில், "பெரிதும் ஏற்றுமதிகளை நம்பி இருக்கும் நாடுகளுக்கு இது பலத்த அடியாக இருக்கும்." எனத் தெரிவித்தார்.
வளரும் சீன பொருளாதாரம்
அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் சரிவில் செல்லும்போது சீனா அரிதாக நேர்மறையான வளர்ச்சி பெற்றுள்ளது என நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை பொருளாதாரத்தில் 4.9 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது சீனா.
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முதல் நாடு. ஆனால் 2020ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிலிருந்து மீண்டுவருகிறது.
இருப்பினும் இந்த வளர்ச்சி பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்ட 5.2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாகத்தான் உள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் சீன பொருளாதாரம் 6.8 சதவீத அளவு குறைந்தது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.
1992ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை சீனா பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக சீன பொருளாதாரம் அப்போதுதான் பெரும் சரிவைச் சந்திருந்தது.
மீண்டும் வளர்ச்சி பெறும்
இதற்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கும் ஒரு நல்ல செய்தி, 2021ஆம் ஆண்டிற்குள் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரம் 6.9 சதவீதமாக வளர்ச்சிபெறும் என்பதுதான். ஆனால் இது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பது உள்ளிட்ட பல காரணிகளை பொருத்தே அமையும்.
தேவைப்படும் நேரத்தில் சரியான கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளுடன் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இணைந்து செயல்பட்டால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும் எனவும் நிதியம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள பெரிய சவால், ஆசியாவின் பொருளாதாரம் ஏற்றுமதிகளை பெரிதும் சார்ந்துள்ளது ஆனால் அதிலிருந்து மாறுபட்ட பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.