Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வி.கே. சசிகலா விடுதலை: ஜெயலலிதா வளர்ப்பு மகன் என்ற வி.என்.சுதாகரன் இன்னும் சிறையில்

வி.கே. சசிகலா விடுதலை: ஜெயலலிதா வளர்ப்பு மகன் என்ற வி.என்.சுதாகரன் இன்னும் சிறையில்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (13:17 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாக அறியப்பட்டவர் வி.என்.சுதாகரன். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகிவிட்டாலும் வி.என்.சுதாகரன் இன்னமும் சிறையில் இருக்கிறார்.

அவருக்கான ரூ.10 கோடி அபராதத் தொகையை செலுத்தவும் அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை. என்ன காரணம்?

பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமையன்று தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் அவரது வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடியே சென்றது.

அன்புக்கு நான் அடிமை; தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை' என சசிகலா தெரிவித்ததாகக் கூறி அறிக்கை ஒன்றையும் தினகரன் தரப்பினர் வெளியிட்டனர். அதேநேரம், சசிகலாவை வரவேற்கச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து கட்டம் கட்டும் வேலைகளும் தொடங்கிவிட்டன.

சசிகலா வருகை குறித்த செய்திகளே ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்தாலும், இவர்களோடு சிறைக்குச் சென்ற வி.என்.சுதாகரனைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சிக்காலம் அதிகம் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் வி.என்.சுதாகரனின் திருமணம் மிக முக்கியமானது.
அதிலும், `நான் செய்த மிகப்பெரிய தவறு' என இந்தத் திருமணம் குறித்து ஒரு நேர்காணலில் ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டார். உலகளவில் பேசப்பட்ட இந்தத் திருமணம், அ.தி.மு.க ஆட்சிக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைக் கொடுத்தது.

இதன் காரணமாக, 1996 சட்டமன்றத் தேர்தலில் பர்கூரில் தி.மு.க வேட்பாளரான இ.ஜி.சுகவனத்திடம் ஜெயலலிதா தோற்றுப் போனார். `யானையின் காதில் புகுந்த எறும்பு' என இந்தத் தேர்தல் வெற்றியை வர்ணித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதன்பிறகு 2001-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன், அதே வளர்ப்பு மகன் மீது போதை வழக்குகளும் கைத்துப்பாக்கி வைத்திருந்த வழக்குகளும் பாய்ந்தன.

போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தைப் பொறுத்தவரையில் ஒரேநாளில் ஒருவர் சீவி சிங்காரிக்கப்படுவதும் அடுத்த சில நாள்களில் அந்த நபர் கீழே தள்ளிவிடப்படுவதும் ஜெயலலிதா இருந்த வரையில் அடிக்கடி அரங்கேறிய நிகழ்வுகள்.

சுதாகரனின் பின்னணி

வி.கே.சசிகலாவுக்கு சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் உள்ளிட்டோர் உடன்பிறந்தவர்கள். இவர்களில் வனிதாமணிக்குப் பிறந்தவர்கள் டி.டி.வி.தினகரன், வி.என்.சுதாகரன், பாஸ்கரன் உள்ளிட்டோர்.
webdunia

இவர்களில் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்தார். ஆனால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி சுதாகரன் தத்தெடுக்கப்படவில்லை. காரணம், இந்தச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள்தான். சுதாகரன் தத்தெடுக்கப்பட்ட நேரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் வீட்டில் பெண் கேட்டனர். இந்தத் திருமணத்தில் சிவாஜிக்கு உடன்பாடில்லை எனவும் அப்போது பேசப்பட்டது.

இருப்பினும், சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமியுடன் சுதாகரனுக்குத் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்து வந்த காட்சிகள், பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தின.

காரணம், அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஜெயலலிதா ஊதியம் பெற்று வந்தார். இதன் காரணமாக, அடுத்து வந்த காலகட்டங்களில் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது சிவாஜி குடும்பமே பெரும்பாலான திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டதாகவும் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சின்ன எம்.ஜி.ஆர்

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு இந்தத் திருமணம் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியதால் சுதாகரன் ஓரம்கட்டப்பட்டார். இதன்பிறகு `விவேக சுதாகரன்' என்ற பெயரில் நற்பணி மன்றங்களைத் திறந்தார். தன்னை `சின்ன எம்.ஜி.ஆர்' என அழைத்துக் கொண்டார்.

வேதா இல்லத்துடனான உறவு முறிந்துவிட்டாலும் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரையில் சொத்துக்குவிப்பு வழக்கு என்ற பெயரில் தொடர்ந்து பயணித்து வந்தார் சுதாகரன். ஒருகட்டத்தில் சுதாகரனின் செயல்பாடுகளைப் பிடிக்காமல் குடும்பத்தினரும் அவரைவிட்டு விலகிவிட்டனர்.

2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசியோடு சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். பரப்பன அக்ரஹாரா ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, மனைவி சத்தியலட்சுமி உட்பட அவரின் பிள்ளைகளும் வந்து பார்க்கவில்லை. இதன் காரணமாக, உளவியல் ரீதியாக அவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து சுதாகரனுக்கு நெருக்கமானவர்கள் அவரின் மனைவியிடம் தெரிவித்தனர். இதன்பிறகே அவர் சுதாகரனை வந்து பார்த்தார்.

முன்கூட்டியே விடுதலை

அதேநேரம், சசிகலாவுக்கு முன்னரே விடுதலையாக வேண்டிய சுதாகரன், இன்னமும் சிறைச்சாலையை விட்டு வெளியே வரவில்லை. `தனக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்க வேண்டும்' எனக் கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வி.என்.சுதாகரன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், `1996ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 92 நாள்கள் வரையில் சிறையில் இருந்துள்ளேன். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் இந்த 92 நாள்களைக் கழித்து, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஷிவராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, `சுதாகரன் இன்னும் இவ்வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தவில்லை. அவர் அபராதம் செலுத்திய பின், இவ்வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருந்த நாள்களைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே விடுவிக்க அனுமதி வழங்கப்படுகிறது' என உத்தரவிட்டார். ஆனாலும், சுதாகரனுக்காகப் பணம் செலுத்த அவரின் குடும்பத்தினர் முன்வரவில்லை. சிவாஜி குடும்பத்தினரும் ஆர்வம் காட்டவில்லை.

தெய்வ பக்தியும் 2 சப்பாத்தியும்

`சுதாகரனை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்ட அன்று உடனிருந்தவர். ``2017 பிப்ரவரி மாதம் சசிகலாவையும் இளவரசியையும் நீதிமன்றத்தில் சரண்டர் செய்த அன்று ஒன்றரை மணிநேரம் தாமதமாக சுதாகரன் வந்து சேர்ந்தார். இதனை எதிர்பார்க்காத நீதிபதி, `பெண்களே வந்துவிட்டார்கள். இவருக்கு என்ன?' எனக் கேட்டார். `தனது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக சுதாகரன் சென்றார்' என்றோம். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறைக்குள் சென்ற சுதாகரன் நாளடைவில் தெய்வபக்தி மிகுந்தவராகவே மாறிவிட்டார். தினமும் குளித்து முடித்துவிட்டு திருநீரு பூசிக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார்" என்றார்.

தொடர்ந்து விவரிக்கையில், ``சிறையில் கொடுத்த உணவுகூட சுதாகரனுக்குப் பிடிக்கவில்லை. `2 சப்பாத்தி கிடைத்தால்கூட நான் காலத்தைக் கடத்திவிடுவேன்' என அவர் வேதனையோடு பேசியதை என்னால் மறக்க முடியாது. சசிகலா, இளவரசி ஆகியோரது தண்டனைக் காலம் முடிந்து அபராதத் தொகையை செலுத்திவிட்டு வெளியில் வந்துவிட்டனர். அந்த ஒருவரை மட்டும் வெளியே வராமல் வைத்திருப்பது மனிதாபிமானமான செயல் கிடையாது. இத்தனைக்கும் அவர்களுக்குக் கணக்கிட முடியாத அளவுக்கு சொத்துகள் உள்ளன. தினகரனுக்கும் பாஸ்கரனுக்கும் பணமில்லாமல் இருக்கிறதா என்ன? சொல்லப்போனால் சசிகலா, இளவரசி ஆகியோர் வருவதற்கு முன்னரே சுதாகரன் விடுதலையாகியிருக்க வேண்டும்" என்றவர்,

``பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே ஒருமுறை மட்டுமே அவரது மனைவி வந்து பார்த்தார். அப்போது வழக்கறிஞர் முன்னிலையில் கணவன், மனைவி இருவரும் கதறியழுதது வேதனையைக் கொடுத்தது. சுதாகரனுக்காக ஏன் அபராதத் தொகையை செலுத்த மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர் இன்னும் சில மாதங்கள் சிறையில் இருந்தால் அபராதத் தொகை மிச்சம் என நினைக்கிறார்களா எனவும் தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.

சுதாகரனே அபராதம் செலுத்துவார்

``சுதாகரன் சிறையில் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என திவாகரனின் மகன் ஜெய் ஆனந்திடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான ஏற்பாடுகளை அவர் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறார். குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை என்ற வாதம் சரியானதல்ல. அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான பணிகளை அவரே செய்து வருகிறார்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தஞ்சையிலும் சுதாகரன், இளவரசி சொத்துகள் அரசுடைமை! – ஆட்சியர் உத்தரவு!