பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது.
பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா பகுதிகளாக இன்று அழைக்கப்படும் இடங்களில் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஏவாள் வாழ்ந்திருப்பார் என்று அறியப்படுகிறது.
அவர் மனிதகுல வரலாற்றில் முதல் பெண் அல்ல. அவரது சகாப்தத்தின் ஒரேயொரு பெண் கூட அல்ல. ஆனால், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இதுவரை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, அவரது காலத்திற்கு பிந்தைய ஒவ்வொரு தலைமுறை மனிதர்களிலும் அந்தப் பெண்ணுடைய மரபணுவின் (டிஎன்ஏ) ஒரு சிறு கூறு இருக்கத்தான் செய்கிறது.
பைபிளின் கூற்றுக்கு மாறான, அறிவியலின் இந்தக் கூற்றை புரிந்து கொள்ள மனித உடல் செல்களுக்குள் உள்ள செல்களின் ஆற்றல் சாலை என அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாவை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.
மனித உடலின் அனைத்துச் செல்களும் மைட்டோகாண்ட்ரியா என்ற கட்டமைப்பை கொண்டுள்ளன. “இதை செல்களின் ஆற்றல் உற்பத்தி சாலைகள்” என்று சுருக்கமாக வரையறுக்கிறார் ரியோ கிராண்டே டூ சுல் பெடரல் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் கேப்ரியேலா சைபிஸ்.
இதையே வேறுவிதமாக வரையறுக்க வேண்டுமானால், நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான பொதுவான ஆற்றலை அளிக்கும் ஏடிபி மூலக்கூறுகள் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரையில் இருந்து கிடைக்கின்றன. உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஏடிபி மூலக்கூறுகளாக மாற்றும் முக்கியமான பணியை மைட்டோகாண்ட்ரியாக்கள் மேற்கொள்கின்றன.
இந்த வகையில் உடலின் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படும் இவை தனித்துவமான அம்சங்களையும், தங்களின் சொந்த மரபணுக்களையும் (டிஎன்ஏ) கொண்டுள்ளன.
சுமார் 20 ஆயிரம் வெவ்வேறு மரபணுக்களால் ஆனதும், மனிதனின் குணாதிசயங்கள் மற்றும் நோய்களுக்கான காரணங்கள் பெரும்பாலானவற்றை தீர்மானிக்க கூடியதுமான மைட்டோகாண்ட்ரியா செல்களின் உட்கருவில் பொதிந்துள்ளது.
மைட்டோகாண்ட்ரியா பொதுவாக செல்களின் உட்புறம் இருக்கும் என்றாலும், ஒரு செல்லின் உட்கருவுக்கு வெளியே அது 37 மரபணுக்களை கொண்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ அல்லது எம்டீடிஎன்ஏ என்று அழைக்கின்றனர்.
இந்த எம்டீடிஎன்ஏவை நம் தாய்மார்கள் இடமிருந்து நாம் மட்டுமே பெறுகிறோம். அதாவது கருவுறுதலின்போது பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவும் சேர்ந்து கருவுறுதல் நிகழும்போது, இரு உயிரணுக்களுக்கு இடையேயான இணைவு நிகழ்வில், ஆண் பாலணுவில் உள்ள மைட்டோகாண்ட்ரியா மறைந்துவிடும். எனவே, கரு எப்போதும் தாய்வழி மைட்டோகாண்ட்ரியாவின் மூலம் உருவாகிறது என்று மரபியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் இந்தக் கூற்று, எம்டீடிஎன்ஏ மூலம் துல்லியமாக இணைக்கப்பட்ட பல தலைமுறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு பரம்பரை இருப்பதை நிறுவ அனுமதிக்கிறது.
இவற்றுக்கு மேலாக, ஒவ்வொரு மகளுக்கும் ஒரு தாய் இருக்கிறார். ஆனால் எல்லா தாய்மார்களுக்கும் ஒரு மகள் இருப்பதில்லை. அதாவது ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை மட்டுமே இருந்தாலோ அல்லது அவர் சந்ததியை உருவாக்கவில்லை என்றாலோ, அவருடைய மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ எதிர்கால பேரக்குழந்தைகளுக்கு கடத்தப்படுவதில்லை.
எனவே, “மரபணுவின் அடிப்படையில் ஒரு தாயின் தாய்.. அவரது பாட்டி… அவரின் கொள்ளு பாட்டி யார் என்பதைக் கண்டறிய முடியும்” என்கிறார் பேராசிரியர் சைபிஸ்.