Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?

Advertiesment
jai bhim movie
, சனி, 6 நவம்பர் 2021 (09:12 IST)
ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றை சேர்ந்தவரான ராசாகண்ணு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் அடித்தே கொல்லப்பட்டார். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993ல் நடந்ததாக நிரூபிக்கப்பட்ட இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தற்போது சூர்யா நடித்த ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாகண்ணு என்ற தொழிலாளி உண்மைக்கு மாறாக திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அவரும் அவரது உறவினர்களும் காவல் நிலையத்தில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு, இறுதியில் ராசாக்கண்ணு கொல்லப்படுவதாக காட்டும் ஜெய்பீம் படம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

jai bhim movie
சந்துரு என்ற வழக்குரைஞர் பாத்திரம், ராசாக்கண்ணுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதாக, வழக்காடுவதாக படம் சித்தரிக்கிறது. உண்மைக் கதையிலும், அப்போதைய வழக்குரைஞரும், பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவருமான சந்துரு இந்த வழக்கின் ஒரு கட்டத்தில் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் வாதாடியுள்ளார்.
 
விசாரணை நீதிமன்றத்தில் வெங்கட்ராமன் என்கிற சிதம்பரத்தை சேர்ந்த வழக்குரைஞர் வாதாடியுள்ளார். களத்தில் இந்த வழக்கில் தொடக்கம் முதல் இறுதி வரை நீதிகிடைக்க போராடிய பல பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
 
உண்மைக் கதையில் ராசாக்கண்ணுவின் மனைவி பெயர் பார்வதி. சம்பவம் நடந்த பின் அவர் முதலில் தொடர்புகொண்டது முதனை கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கோவிந்தன் என்பவரைத்தான்.
jai bhim movie
அவர் உடனடியாக அதை தங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜாமோகன் என்பவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். கோவிந்தன், ராஜாமோகன் இருவரும் இந்த வழக்கில் பார்வதிக்கு நீதி கிடைக்கும் வரை துணையாக நின்று போராடியுள்ளனர். அப்போது கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்தவரும் இப்போதைய மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன், தற்போதைய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கில் நீதிகிடைக்க பங்களிப்பு செய்துள்ளனர்.
 
ஜெய்பீம் கதை பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த கதைக்கு ஆதாரமாக இருந்த உண்மைக் கதையில் என்ன நடந்தது என ராஜாமோகனை பிபிசி தமிழ் சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம்.
 
1993ல் நடந்த இந்த சம்பவம் குறித்து தம் நினைவில் இருந்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
jai bhim movie
"அப்போது நான் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்தேன். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள சேப்ளானத்தம் என் சொந்த ஊர். கோபாலபுரம் என்ற ஊரில் உள்ள கதிர்வேல் என்பவர் வீட்டில் 20.03.1993 அன்று 40 பவுன் நகை திருடுபோனது. அவரது வீட்டில் ஏற்கெனவே வேலை செய்தவரும், முதனை கிராமத்தை சேர்ந்தவருமான ராசாகண்ணு மீது அவர் போலீசில் சந்தேகம் தெரிவித்தார். இதையடுத்து கம்மாபுரம் போலீசார் அன்றே முதனை சென்று ராசாக்கண்ணு மனைவி பார்வதி, அண்ணன் ரத்தினம் ஆகியோரை பிடித்துச் சென்றனர். மறுநாள் ஊர் மக்கள் ராசாக்கண்ணுவை பிடித்துத் தந்தார்கள்.
 
இதையடுத்து பார்வதி, ரத்தினம் இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். போலீஸ் காவலில் இருந்த கணவரைப் பார்க்க 22ம் தேதி சென்றார் பார்வதி. அப்போது அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவரது வேட்டியில் ரத்தக்கறை இருந்தது. அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை.
 
மெடிக்கலில் மாத்திரை வாங்கித் தந்தபோது அதைக்கூட அவரால் விழுங்க முடியவில்லை. ஆனால் அவரை தொடர்ந்து காவலில் வைத்துக்கொண்ட போலீசார் பார்வதியை வீட்டுக்குப் போகச் சொல்லியுள்ளார்கள். அவர் விருத்தாசலம் சென்று அங்கிருந்து முதனை செல்வதற்கு முன்பாகவே போலீசார் வேனில் முதனை வந்து, ராசாகண்ணு தப்பிச் சென்றுவிட்டதாக கூறினர்.

jai bhim movie
இதையடுத்து அவர் அதே ஊரைச் சேர்ந்தவரான மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கோவிந்தனிடம் இது பற்றிக்கூறினார். போன் இல்லாத காலம் என்பதால், கோவிந்தன் அன்று இரவே சேப்ளானத்தம் வந்து ஒன்றியச் செயலாளரான என்னிடம் இது பற்றிக் கூறினார்.
 
மறுநாள் 23ம் தேதி காலை நான், கோவிந்தன், பார்வதி, ரத்தினம் நான்கு பேரும் கம்மாபுரம் காவல் நிலையம் சென்று விசாரித்தோம். அப்போது காவல் நிலையத்தின் லாக் அப் அறை, தரை, சுவரெல்லாம் கழுவிவிட்டு இருந்தார்கள். ஊதுவத்தி எரிந்தது. அப்போதே எனக்கு சந்தேகம். ஆனால், ராசாக்கண்ணுவை தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.
 
நாங்கள் திரும்பி வந்தபோது குமாரமங்கலம் என்ற இடத்தில் எதிரே வந்த TAF1269 என்ற எண்ணுள்ள வேனை நிறுத்தி அதில் வந்த போலீஸ்காரர்களை விசாரித்தேன். அவர்கள் ராசாக்கண்ணுவைத்தான் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார்கள். அத்துடன் 'ஸ்டேஷனுக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம்' என்றார்கள். நாங்கள் போகவில்லை.
 
எஸ்.ஐ. அந்தோனிசாமி, ஏட்டு வீராசாமி, போலீஸ்காரர் ராமசாமி ஆகியோர் இருந்தார்கள். அவர்கள்தான் ராசாக்கண்ணு உடலை சாலையில் வீசிவிட்டு திரும்பி வந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், அது பற்றி எங்களுக்கு அப்போது தெரியாது.

jai bhim movie
நாங்கள் விருத்தாசலம் சென்று எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தோம். அவர் மாநில மையத்துக்கு இந்த தகவலைத் தெரிவித்தார். அத்துடன் எங்களை கடலூர் வர சொல்லிவிட்டு அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். ஜாங்கிட்டை பார்க்க அழைத்துச் சென்றார். அப்போதே எஸ்.பி. வரை ராசாக்கண்ணு இறந்துவிட்ட செய்தி தெரிந்துள்ளது. ஆனால், அவர்கள் அப்போது அதை வெளிப்படுத்தவில்லை. ராசாக்கண்ணுவை தேடுவதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
 
கம்மாபுரம் காவல் நிலையத்தை கட்டுப்படுத்தும் விருத்தாசலம் வட்டக் காவல் ஆய்வாளராக அப்போது இருந்தவர் பெயர்தான் பாக்கியம்.
 
அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணையிலும் நடந்த விஷயங்களை, எனக்குத் தெரியவந்த விஷயங்களை தெரிவித்தேன்" என்று கூறினார் ராஜா மோகன்.
 
இது குறித்து மேலும் பேசிய அவர், "போலீஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து பார்வதியை அப்போது என் வீட்டில் தங்க வைத்திருந்தேன். அப்போது, விருத்தாசலம் எஸ்.ஐ. என்னிடம் சமாதானம் பேசினார். விட்டுக்கொடுத்துப் போகும்படியும், ஏதேனும் பணம் தந்துவிடலாம் என்றும் அவர் பேசினார். அப்போதுதான் ராசாக்கண்ணு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது.
 
மாவட்டத்தில் நியாயம் கிடைக்க எதுவும் நடக்கவில்லை என்பதால், கட்சியின் அறிவுரைப்படி சென்னைக்கு சென்றோம். அப்போது மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த ஜி.ராமகிருஷ்ணன் வழக்குரைஞர் சந்துருவை சென்று பார்க்கும்படி கடிதம் கொடுத்தார். உயர்நீதிமன்றம் அருகே உள்ள சந்துரு அலுவலகத்தில் அவரைச் சென்று பார்த்தோம்.
 
அவர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம் என்றார். கட்டணம் பற்றி கேட்டபோது, போலீசை எதிர்த்து வழக்கு நடத்தும்போது எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்று தெரியும். எனவே கட்டணம் ஏதும் வேண்டாம் என்று கூறிவிட்டார் சந்துரு. தட்டச்சு செலவுக்கு பணம் தந்தபோது அதுகூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இறுதிவரை வழக்கில் உறுதியாக நின்றால் மட்டும் போதும் என்று அவர் கூறிவிட்டார்.
 
பிறகு வழக்குக்கு தேவையான ஆவணங்களை திரட்டிக் கொடுத்தோம்.
 
இந்நிலையில், எஸ்.ஐ. உள்ளிட்ட போலீஸ்காரர்கள் சென்னை சென்று வழக்குரைஞர் சந்துருவை சந்தித்து ராஜாமோகன், கோவிந்தன் எல்லாம் சமாதானமாக போய்விட்டதாக கூறி குழப்ப முயன்றனர். இதைக் கேள்விப்பட்டு நாங்கள் மீண்டும் சென்னைக்கு மீண்டும் நேரில் சென்று சந்துருவைப் பார்த்து போலீசார் கூறியது எல்லாம் பொய் என்று விளக்கம் அளித்தோம்," என்று கூறினார் ராஜாமோகன்.
 
வழக்கில் புதிய திருப்பம்
"திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூரில் வசித்துவந்த ராஜாக்கண்ணுவின் அக்கா ஆச்சி, அவரது மகன் குள்ளன், கோவிந்தராஜ் என்கிற இன்னொருவர் ஆகியோரையும் போலீசார் இந்த வழக்கில் பிடித்துவந்து ராசாக்கண்ணு அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் வைத்து அடித்துள்ளார்கள்.
 
இது பார்வதிக்கு தெரியாது. இந்த மூவருக்கும் ராசாக்கண்ணு இறந்தது தெரியாது. இதற்கிடையில் இவர்கள் சில மாதம் கழித்து ராசாக்கண்ணு பற்றி தெரிந்துகொள்வதற்காக முதனை வந்தபோதுதான் இவர்களும் தாக்கப்பட்ட விஷயம் தெரியும். அத்துடன் மார்ச் 22 மாலை ராசாக்கண்ணு உடலை வண்டியில் ஏற்றியதை கோவிந்தராஜ் மட்டும் பார்த்துள்ளார்.
 
ஆனால், அவருக்கும் ராசாக்கண்ணு இறந்துவிட்டாரா, உயிரோடு இருந்தாரா என்று தெரியாது. ஆச்சி உள்ளிட்டோர் வந்து போனது பற்றி பார்வதி கூறியதும் நாங்கள் அவர்களை அவர்களது ஊரில் சென்று சந்தித்துப் பேசினோம். அப்போதுதான் மகன் குள்ளன் கண் எதிரிலேயே ஆச்சியை நிர்வாணப் படுத்தி போலீசார் அடித்ததாக அவர்கள் கூறினார்கள். அத்துடன் போலீஸ் அடித்ததில் குள்ளன் கை உடைந்துவிட்டதும் தெரியவந்தது.
 
இந்த விவரங்களை வழக்குரைஞர் சந்துருவுக்குத் தெரியப்படுத்தினோம்.
 
நெய்வேலியை சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன் போலீஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராசாக்கண்ணுவுக்கு சிகிச்சை அளித்ததாக சான்றிதழ் அளித்திருந்தார். இது, ராசாக்கண்ணு தப்பித்துச் சென்றார் என்ற கருத்துக்கு வலு சேர்த்தது. இந்நிலையில்தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார் சந்துரு.
 
அப்போது நீதிபதிகள், பத்மினி காவல் நிலைய வல்லுறவு வழக்கில் தமிழ்நாடு போலீசை சேர்ந்த லத்திகா சரண் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவரவில்லையா எனவே சிபிசிஐடி விசாரணையே போதாதா என்று கேட்டனர். இதையடுத்து ஐஜி பெருமாள்சாமி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்கு சந்துரு ஒப்புக்கொண்டார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த வென்குசா என்பவர்தான் மிகச் சிறப்பாக புலன்விசாரணை செய்து இந்த வழக்கில் நடந்ததை கண்டுபிடித்தார்.
 
ராசாக்கண்ணு காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதையில் இறந்துவிட்ட நிலையில், அவரது உடலை எஸ்.ஐ. அந்தோணிசாமி உள்ளிட்டோர் வண்டியில் கொண்டு சென்று மீன்சுருட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள திருவாலப்புத்தூர் - ஜெயங்கொண்டம் சாலையில் ஏறிந்துவிட்டு வந்துவிட்டனர் என்பதையும், ஆனால், அவர்கள் நினைத்தபடி அவர் உடல் மீது லாரி, பஸ் ஏதும் ஏறாததால் அடையாளம் தெரியாத சடலம் என்ற வகையில் அதைக் கைப்பற்றிய மீன்சுருட்டி காவல் நிலையத்தினர் அடக்கம் செய்ததையும் வென்குசா கண்டுபிடித்தார். அவர்கள் எடுத்த புகைப்படத்தை வைத்து பார்வதி ராசாக்கண்ணு உடலை அடையாளம் காட்டினார்.
 
இதையடுத்து எஸ்.ஐ. அந்தோணிசாமி, பொய் சான்றிதழ் தந்த மருத்துவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
 
சிறப்பு அரசு வழக்குரைஞராக சிதம்பரத்தை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் என்பவரை நியமிக்க வைத்தோம். அவர் எங்கள் மாவட்டச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணனின் தேர்வு. அவர் இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சிறப்பாக நடத்தினார். முதலில் கடலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு பிறகு விருத்தாசலம் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
 
எஸ்.ஐ. அந்தோணிசாமி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. எஸ்.ஐ. சுப்ரமணி உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைத்தது. உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் சிபிசிஐடி சிறப்பாக வழக்கை நடத்தியது. அங்கேயும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
 
பார்வதிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், ஆச்சி, குள்ளன் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு கிடைத்தது. ஹேபியஸ் கார்பஸ் மனு மீது சிறப்பாக வாதிட்டதற்காக வழக்குரைஞர் சந்துருவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது," என்றார் ராஜாமோகன்.
 
அவர்கள் இந்த வழக்கில் அனுபவித்த சிரமங்கள் பற்றி கேட்டபோது, "ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணைக்காக சென்னை சென்றிருந்தபோது மிக எளிமையான லாட்ஜ் ஒன்றில் தங்கினோம். நாங்கள் நினைத்ததைவிட கூடுதலான நாள்கள் அங்கே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோது, நாங்கள் பட்டினி கிடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. வழக்கு செலவுக்கு கோவிந்தன் தன் வீட்டு நகைகளை விற்று வழக்குக்கு செலவு செய்தார். வழக்கு முடிந்த பிறகு 39 வயதில்தான் கோவிந்தன் திருமணம் செய்துகொண்டார். எனக்கு 4,300 ரூபாய் செலவானது. இழப்பீடு வந்தபோது பார்வதி அந்தப் பணத்தை எல்லாம் தர முன்வந்தார். ஆனால், அதை ஏற்க நாங்கள் மறுத்துவிட்டோம்" என்று தெரிவித்தார் ராஜா மோகன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பு!