Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தேர்தல் வரலாறு: ராஜீவ் கொலை நடந்தது எப்போது? ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?

தேர்தல் வரலாறு: ராஜீவ் கொலை நடந்தது எப்போது? ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?
, திங்கள், 15 மார்ச் 2021 (08:56 IST)
(தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்த வரலாறு, அவற்றுக்கு முன்பும், பின்பும் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வகையில் தற்போது 1991 தேர்தல் நடந்த வரலாறு இது)
 
13 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான தி.மு.க. ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டு, மீண்டும் நடந்த தேர்தலில் ஜெயலலிதா முதல் அமைச்சரானார். 1991ஆம் ஆண்டு தேர்தலில் நடந்த திருப்பு முனை சம்பவங்கள் என்ன?
 
13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்த தி.மு.க. விறுவிறுப்பாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தியது. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தது.
 
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், காவிரிப் பிரச்சனைக்காக நடுவர் மன்றம் அமைத்தது, இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு தனியாக 20 சதவீதம் உள்ஒதுக்கீடு, முதல் பட்டதாரிகளுக்கு இலவச பட்டப்படிப்பு, அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு, சத்துணவில் முட்டை ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தார் கருணாநிதி.
 
எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மதுவிலக்குத் தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் தனியாருக்கே சென்றுகொண்டிருந்தது. அதனை சீர்செய்து, வருவாய் அரசுக்கு வரும்படி ஒழுங்குமுறை செய்தது தி.மு.க. அரசு. மேலும் சில்லறை விற்பனைக் கடைகளை மது தயாரிப்பாளர்களே பினாமி பெயரில் நடத்திவந்தனர். ஆகவே கடைகளை ஏலம் எடுத்து நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியது தி.மு.க. ஆனால், மதுக் கடைகளில் உயர்ந்த ரக மது மட்டுமே கிடைத்ததால் கள்ளச்சாராயத்தை அருந்துவோர் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர்.
 
மலிவு விலை மது சர்ச்சை
இந்தப் பின்னணியில் தி.மு.க. அரசு எடுத்த ஒரு முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், குறைந்த வருமானமுடையவர்கள் கள்ளச்சாராயத்தை அருந்துகிறார்கள் என்று கூறிய தமிழக அரசு, அவர்களுக்காக மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
 
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், சாமானியர்கள் பலருக்கு வீடுதேடி வேலை வாய்ப்பு ஆணை சென்றது. அதற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டு பலரும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
 
இதற்கு மத்தியில், இலங்கையில் ஈழப்போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்ததால் அதன் எதிரொலி தொடர்ந்து தமிழ்நாட்டில் கேட்டுக்கொண்டிருந்தது.
 
ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இலங்கை - இந்திய அமைதி ஒப்பந்தத்தையடுத்து அங்கு சென்ற இந்திய அமைதி காக்கும்படை அங்கு அத்துமீறல்களில் ஈடுபட்டது என்று கூறி, அதனைத் திரும்பப் பெற வேண்டுமென்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், அது செவிமடுக்கப்படவில்லை.
 
அந்த நேரத்தில், காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 1989ம் ஆண்டு பதவியேற்றது. அந்தக் கூட்டணியிலும், அரசிலும் திமுக பங்கேற்றிருந்தது.
 
இந்நிலையில், இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெறவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு செவிமடுத்தது.
 
ஜூலை 29ஆம் தேதியிலிருந்து படையினர் திரும்பப்பெறப்படுவார்கள் என இந்தியாவும் இலங்கையும் கூட்டாக அறிவித்தன. இந்தியப் படையின் ஒரு பிரிவினர் சென்னைக்குத் திரும்பியபோது, அவர்களை வரவேற்பதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி செல்ல மறுத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்டம் தர்கா வலசை கிராமத்தில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் தி.மு.க. அரசு இடம் கொடுப்பதால், அதனைக் கலைக்க வேண்டுமென அ.தி.மு.கவும் காங்கிரசும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.
 
இந்த நிலையில், 1990ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எஃப்) சேர்ந்த பத்மநாபாவும் அவருடைய கூட்டாளிகள் 12 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் என சந்தேகிக்கப்படுவோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இதில் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தி.மு.கவுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிவந்த அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை வலுவாகப் பிடித்துக்கொண்டன.
 
அரசியல் களத்தை அதிரவைத்த நிகழ்வுகள்
முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பலரும் சமாதானம் பேசியும் அவர், தனது முடிவில் உறுதியாக இருந்துவிட்டார். இதையடுத்து அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இரட்டை இலையும் அக்கட்சிக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
 
இதற்கிடையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா எழுதியிருந்தார். அந்தக் கடிதம் குறித்த விவரங்கள் 1989 மார்ச் மாதம் 19ஆம் தேதி வெளியாயின. இதற்கு முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம் என ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
 
இதற்குப் பிறகு மார்ச் 25ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. கருணாநிதி நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்தார். அவர் அறிக்கையைப் படிக்க எழுந்தபோது. அவர் அந்த உரையைப் படிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கூச்சலிட்டார். அதற்குப் பிறகு அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. முதலமைச்சர் தாக்கப்பட்டு, அவரது கண்ணாடி உடைந்தது. பட்ஜெட் புத்தகம் கிழிந்தது. இந்த களேபரத்திற்கிடையில் அவையிலிருந்து வெளியில் வந்த ஜெயலலிதா சட்டசபையில் தான் தாக்கப்பட்டதாகவும் இனி சட்டசபைக்குப் போகப்போவதில்லையென்றும் அறிவித்தார்.
 
தேசிய அளவில் ஏற்பட்ட அதிர்வுகள் தமிழ்நாட்டிலும் பிரதிபலித்தன
பிரதமராக இருந்த வி.பி. சிங் 1990 ஆகஸ்ட் 7ம் தேதி மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி கற்கவும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். இது வட மாநிலங்களில் பெரும் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை புறப்பட்டிருந்தார். இந்த ரத யாத்திரை பிஹாரில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளை அடுத்து வி.பி. சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு சந்திரசேகர் பதவியேற்றார்.
 
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக ஏற்கனவே அ.தி.மு.கவும் காங்கிரசும் கூறிவந்த நிலையில் தி.மு.க.அரசை 1991 ஜனவரி 30ஆம் தேதி கலைத்தார் சந்திரசேகர். ஆட்சிக்கலைப்புக்கு உள்ளாவது தி.மு.கவுக்கு இது இரண்டாவது முறையாகும்.
 
ஆட்சிக் கலைப்பு; மீண்டும் தேர்தல்
இதற்குப் பிறகு சந்திரசேகர் அரசும் கவிழ்ந்துவிட, நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் ஒன்றாகத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1991ஆம் ஆண்டு மே 26ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டது.
 
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி அமைத்திருந்தன. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க. 168 இடங்களிலும் காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
 
தி.மு.க. ஒரு விரிவான ஒரு கூட்டணியை அமைத்திருந்தது. அந்த அணியில் இடதுசாரிக் கட்சிகள், ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக், தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி, எஸ். திருநாவுக்கரசு தலைமையிலான அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. பிரதானமாக தி.மு.க. 176 இடங்களிலும் சி.பி.எம். 22 இடங்களிலும் சி.பி.ஐ. 10 இடங்களிலும் ஜனதா தளம் 15 இடங்களிலும் திருநாவுக்கரசரின் கட்சி 9 இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4 இடங்களிலும் போட்டியிட, ஃபார்வர்ட் பிளாக், தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி, பி.எச். பாண்டியன் தலைமையிலான கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
 
1987ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி மிகப் பெரிய தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாட்டை அதிர வைத்திருந்த டாக்டர் ராமதாஸ், பிறகு வந்த திமுக ஆட்சியில் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில், உற்சாகம் பெற்று பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். இந்தத் தேர்தலில் வேறு பல சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு களமிறங்கியது பா.ம.க. இந்தக் கூட்டணியில் பா.ம.க. 194 இடங்களிலும் முஸ்லீம் லீக் (சமது பிரிவு) 19 இடங்களிலும், பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசுக் கட்சி 5 இடங்களிலும் நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
 
இந்தக் கூட்டணிகள் தவிர, பாரதீய ஜனதா கட்சியும் 99 இடங்களில் போட்டியிட்டது.
 
கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி
 
ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையும் இரண்டாண்டு ஆட்சியில் செய்திருந்த சாதனைகளும் தங்களுக்கு உதவும் எனக் கருதியது தி.மு.க. மலிவு விலை மது பிரச்சனையையும் தமிழ்நாட்டில் தீவிரவாதச் செயல்பாடுகள் அதிகரித்துவிட்டதாகவும்கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்தார் ஜெயலலிதா. ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் ராஜீவ் காந்தியும் ஒன்றாகப் பங்கேற்றனர்.
 
ஆனால், இந்தத் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில்தான் இந்தியாவையே புரட்டிப்போடக்கூடிய துயர நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தது.
 
மே 21ஆம் தேதியன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல்கள் ஜூன் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டன.
 
ராஜீவ் காந்தி கொலையால் ஏற்பட்ட அனுதாப அலையால் காற்று அ.தி.மு.க. - காங்கிரஸ் கட்சி பக்கம் வீச ஆரம்பித்தது. தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களால் வாக்குக்கேட்டுக்கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆகவே, பிரச்சாரத்தின்போதே அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தது.
 
எழும்பூர், முசிறி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணமடைந்ததால் அங்கு வாக்குப் பதிவு நடைபெறவில்லை. 232 தொகுதிகளுக்கு ஜூன் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜீவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் தெளிவாக எதிரொலித்தது.
 
அ.இ.அ.தி.மு.க. 164 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 இடங்களைப் பிடித்தது. தி.மு.க படுதோல்வியடைந்திருந்தது. அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி மட்டும் துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த அபுதமுகவின் எஸ். திருநாவுக்கரசரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் வெற்றிபெற்றிருந்தனர். சி.பி.ஐ., சி.பி.எம்., ஜனதா தளம் ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றிருந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றிபெற்றிருந்தார். ஒரே ஒரு சுயேச்சை வெற்றிபெற்றிருந்தார். அவர், திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தாமரைக்கனி.
 
இந்தத் தேர்தலில் காங்கேயம், பர்கூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார் ஜெயலலிதா. இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றிருந்தார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த க. சுப்புவைவிட 890 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.
 
இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த ஜெயலலிதா காங்கேயம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, "தி.மு.கழகத்தின் தோல்வி என் தோல்வி. எனவே எம்.எல்.ஏ. பதவியைவிட்டு விலகுகிறேன்" என்று அறிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
ஜூன் 26ஆம் தேதி ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஜெயலலிதா, நெடுஞ்செழியன், எஸ்.டி. சோமசுந்தரம், ஆர்.எம். வீரப்பன், கே.ஏ. செங்கோட்டையன், டி. ஜெயக்குமார் உட்பட 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி எம்.ஜி.ஆர். வாழ்த்துத் தெரிவித்தார்.
 
தனது முதல் உத்தரவாக மலிவு விலை மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா. ஜூலை 16ஆம் தேதியுடன் மலிவுவிலை மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்வுசெய்யப்பட்டார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2001 சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை