63 வயதாகும் ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.
அசாமிலுள்ள திப்ருகார் பகுதியில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ரஞ்சன் பிறந்தார். ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் நபராக ரஞ்சன் இருப்பார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்த ரஞ்சன், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.
1978ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவுசெய்த ரஞ்சன், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2001ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளார்.
ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2011ஆம் ஆண்டு பதவியேற்ற ரஞ்சன், அடுத்த ஆண்டே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் அரசாங்கத்திற்கெதிரான வழக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வருமானம் பற்றிய வழக்கு, பல்லாண்டுகளாக அசாமில் வாழ்ந்து வரும் வங்கதேச குடியேறிகள் சார்ந்த வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ரஞ்சன் சிறப்பான தீர்ப்பை வழங்கியவராக அறியப்படுகிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கெசாப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர் ஒருவர், உங்களது மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்று கேட்டார். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞர் என்றும், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கெசாப் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சனும் மற்ற சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளும் மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை.
ரஞ்சன் தலித் உரிமைகள், ஜனநாயகம், சமத்துவம், கம்யூனிசம், சிறுபான்மையினர் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் அறிவிக்கப்பட்டார்.