Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட சுவாரஸ்ய வரலாறு

China
, திங்கள், 27 மார்ச் 2023 (21:51 IST)
மாவோ சேதுங் முதன்முறையாக சோவியத் யூனியனுக்கு சென்றபோது, ஜோசப் ஸ்டாலின் அவரைச் சந்திப்பதற்கு முன் மாஸ்கோவின் புறநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் பல வாரங்கள் காத்திருக்கச் செய்தார்.
 
ஆனால் இந்த வாரம் ஷி ஜின்பிங் ரஷ்யா சென்றபோது, நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது.
 
1950இல் மாவோவும் ஸ்டாலினும் சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான நட்பு, கூட்டணி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 73 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங், விளாதிமிர் புதின் இருவரும் இரு நாடுகளுக்கும் இடையில் ‘முன்னெப்போதும் இல்லாத நட்பை’ உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
 
ஆனால் இரு நாடுகளும் சித்தாந்த வேறுபாடுகள், பிரிவினைகள், நல்லிணக்கம், ஆயுத மோதல்கள் என நீண்ட தூரம் கடந்து இங்கு வந்துள்ளன.
 
இந்த இரண்டு அண்டை நாடுகளின் வரலாறு நீண்டது மற்றும் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நிறைந்தது. பல தசாப்தங்களாக, சோவியத் யூனியனும் சீனாவும் கம்யூனிசத்தின் இரண்டு பெரிய துருவங்களாக இருந்தன. கொள்கைகள் மற்றும் அவற்றின் உலகளாவிய செல்வாக்கு குறித்துப் பலமுறை மோதல்களும் ஏற்பட்டன.
 
ஆனால் 1950களின் ஆரம்ப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இருந்தது.
 
சீன உள்நாட்டுப் போர், 1927 முதல் 1936 வரை நீடித்தது. 1945இல் மீண்டும் தொடங்கி, 1949 வரை தொடர்ந்தது. தேசியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தப் போராடினர்.
 
பனிப்போரின் பின்னணியில், சீன உள்நாட்டுப் போரில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் எடுத்த சார்பு நிலையில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
 
சியாங் காயீ-ஷேக்கின் அரசியல் கட்சியான குவோமிதாங், அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி மற்றும் ஆயுதங்களைப் பெற்றது. சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க அமெரிக்கா தனது 50,000 வீரர்களை அனுப்பியது. அதே நேரத்தில், மாவோ சேதுங்கின் சீன கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றது.
 
கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திகள் வலிமையானவையாக உருவெடுத்து, தேசியவாதிகளை தைவான் தீவிற்குத் தள்ள முடிந்தது. 1949ஆம் ஆண்டு சீனக் குடியரசு பிறந்ததாக மாவோ அறிவித்தார்.
 
ஸ்டாலினை பொறுத்தவரை, அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், ஆசியாவில் சோசலிச கூட்டணியை விரிவுபடுத்தவும் கம்யூனிஸ்ட் சீனா சரியான பங்காளியாக இருந்தது.
 
ஜப்பானியர்களுடன் (1937-1945) பல ஆண்டுகளாகப் போராடி உள்நாட்டுப் போரால் சீரழிந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய மாவோவுக்கு சோவியத் உதவி தேவைப்பட்டது.
 
சீனாவை விட்டு வெளியேறாத மாவோ, நிதி உதவி கேட்க முதல் முறையாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். அவர் தனது வாழ்நாளில், இரண்டு முறை மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்றார். இரண்டாவது பயணமும் மாஸ்கோவிற்குத் தான் செய்தார்.
 
ஆனால் ஸ்டாலின் அதை எளிமையானதாக இருக்கவிடவில்லை.
 
சீன அரசியல் குறித்து பேராசிரியரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவிசார் அரசியல் மையத்தின் துணை இயக்குநருமான வில்லியம் ஹர்ஸ்ட் பிபிசியிடம், "மாவோ, ஸ்டாலினின் அணுகுமுறையால் அதிருப்தி அடைந்தார், அவரைக் காத்திருக்கவும் வைத்து, சீனாவுக்குத் தேவையானதைக் கொடுக்கவுமில்லை," என்றார்.
 
உண்மையில், புதிதாக உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசின் தலைவரைச் சந்திக்க ஸ்டாலினுக்கு பல வாரங்கள் ஆனது. மாஸ்கோவின் புறநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் மாவோவை தங்க வைத்தார். அப்போது மாவோவின் நடமாட்டத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
அந்த நேரத்தில் சோவியத் யூனியன் ஒரு வல்லரசாக இருந்ததுடன் சீனாவை ஓர் 'அடிமை நாடாக'வும் பார்த்தது, இதுபோன்ற அவமானகரமான அணுகுமுறையையும் அவர் பொறுத்துக்கொண்டார்.
 
இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, இரு தலைவர்களும் 'சீன-சோவியத் நட்பு, கூட்டணி மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டனர். இது சீனாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கியது. இதுவொரு வகையான கம்யூனிச 'மார்ஷல் திட்டம்' ஆகும், இது மேற்கு நாடுகளின் தடைகளை முறியடிக்கச் சீனாவுக்கு உதவியது.
 
மாஸ்கோ ஒரு பெரிய சக்தியாகவும் முன்னோடியாகவும் இருந்தது. மாவோ சேதுங் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார். இது அவர்களின் அப்போதைய பிரசாரத்திலும் எதிரொலித்தது.
 
"இன்றைய சோவியத் யூனியன் நமது நாளை (எதிர்காலம்) போன்றது" என்பது அந்த ஆண்டுகளில் அடிக்கடி திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட முழக்கம்.
 
அந்த நேரத்தில் மாஸ்கோ, சீனாவிற்கு ராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கியது. மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்கியது. இதுதவிர, ஆயிரக்கணக்கான பொறியாளர்களை சீனாவுக்கு அனுப்பி, அந்நாட்டில் தொழில்துறை வலையமைப்பை உருவாக்கப் பெரிதும் உதவியது.
 
இருப்பினும், 1958க்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகத் தொடங்கின.
..
இதுகுறித்து ஹர்ஸ்ட் விளக்குகிறார், "அந்த நேரத்தில் சீனா தனது 'கிரேட் லீப் ஃபார்வேர்ட்' (முன்னோக்கிய பெரும்பாய்ச்சல்) உத்தியுடன் மிகவும் தீவிரமான பொருளாதார வளர்ச்சித் திட்டத்தைத் தொடர முடிவு செய்திருந்தது. அதே நேரத்தில் சோவியத் யூனியனின் தலைவரான க்ருஷேவ் தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்து, உறுதியான ஸ்டாலின் ஆதரவாளர்களை ஓரங்கட்டினார்."
 
ஸ்டாலின் 1953இல் உயிரிழந்தார். அதன் பிறகு ஆட்சி அதிகாரம் நிகிதா க்ருஷேவின் கைகளுக்கு வந்தது. அவர் ஒரு மிதமான சீர்திருத்தவாத தலைவராகக் கருதப்பட்டார்.
 
‘அவர் (க்ருஷேவ்) ஸ்டாலின் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களைச் சீர்திருத்தி சந்தை அடிப்படையிலான சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்ல விரும்பினார். மாவோ இதற்கு நேர்மாறாக இருந்தார்.” என்கிறார் ஹர்ஸ்ட்.
 
கிரேட் லீப் ஃபார்வேர்ட் கொள்கை பின்னர் வரலாற்றாசிரியர்களாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் மிகப்பெரிய தவறு என்று விமர்சிக்கப்பட்டது. இந்தக் கொள்கையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தக் கொள்கையானது நாட்டின் விரைவான தொழில்மயமாக்கலை முன்வைத்தாலும், நடைமுறையில் எஃகு உற்பத்தியை மட்டுமே வலியுறுத்தியது.
 
விவசாய உற்பத்தியைப் புறக்கணித்து லட்சக்கணக்கான விவசாயிகள் திரட்டப்பட்டுத் தொழில் துறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
 
அமெரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோசப் டோரிசியன் 'சீனா பவர்' பாட்காஸ்டில், "மூலோபாய மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கான ஆழமான காரணங்களைத் தேடும் பழக்கம் மாவோவுக்கு இருந்தது, எப்போதும் கருத்தியல் நோக்கங்களைத் தேடும் பழக்கம் மாவோவுக்கு இருந்தது. எனவே, க்ருஷேவின் நடத்தையைப் பார்த்து, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏதோ தவறு உள்ளது என்று கருதினார் அவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேற்கு நாடுகளுடன் "அமைதியான சகவாழ்வு" கொள்கைக்கான புதிய சோவியத் தலைவரின் விருப்பம், "ஏகாதிபத்திய லட்சியங்களின்" விளைவாக மாவோ கருதினார்.
 
ஒருவரையொருவர் வெறுத்த மாவோவுக்கும் க்ருஷேவுவுக்கும் இடையே வளரத் தொடங்கிய இடைவெளி, இறுதியில் சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான உறவில் முறிவு என்பதில் வந்து முடிந்தது.
 
இதன் விளைவாக, அந்த இரு நாடுகளும் ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேலாதிக்கத்திற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியும் அதிகரித்தது.
 
வில்லியம் ஹர்ஸ்ட் கூறுகிறார், "1960களின் பிற்பகுதியில், சீனா சோவியத் யூனியனை குறைந்தபட்சம் அமெரிக்காவை போலவே பெரிய அச்சுறுத்தலாகக் கண்டது."
 
அந்த நேரத்தில் மாஸ்கோவில்கூட சீனாவை பற்றி இதே கருத்துதான் நிலவியது.
 
1966ஆம் ஆண்டில், சீனா கலாசாரப் புரட்சியைத் தொடங்கியது. அதன் காரணமாக பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டன. இது க்ருஷெவின் வாரிசான லியோனிட் ப்ரெஷ்நேவ் -ஆல் ‘நிலையற்றது மற்றும் ஆபத்தானது" என்று கருதப்பட்டது.
 
இந்த பரஸ்பர அவநம்பிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. 1969ஆம் ஆண்டில் இந்த மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய ஆயுத மோதலில் முடிந்தது. இந்த மோதல் இரு நாடுகளின் எல்லையான ஜென்பாவ் தீவின் சிறிய ஆற்றில் நடந்தது.
 
அந்த ஆண்டு மார்ச் மாதம் சோவியத் யூனியனை சீன துருப்புகள் தாக்கியதற்குத் தெளிவான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், சில வரலாற்றாசிரியர்கள் மாவோ இந்த மோதலின் மூலம் ஒரு சமூக அணிதிரட்டலை விரும்பினார் என்று கருதுகிறார்கள்.
 
இது கலாசாரப் புரட்சியால் பல தசாப்தங்களாக ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை மீட்டெடுக்க முடியும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த மோதலில், இரு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.
 
சோவியத் யூனியன் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்குள், நாட்டின் மறுபுறம், அதாவது ஷின்ஜியாங் எல்லையில் ஒரு புதிய மோதல் எழும் என்றும் நினைக்கவில்லை.
 
"அணு ஆயுதத் தாக்குதல் நடக்கலாம் என்றும், அது சாத்தியமில்லையென்றாலும், அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் சீனர்கள் நம்புவதற்கு சோவியத் ஒன்றியம் தொடர்ச்சியான சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியது," என்கிறார் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜோசப் டோரேசியன்.
 
இதற்குப் பிறகு சீனாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
 
கேம்பிரிட்ஜ் பேராசிரியர் டோரிசியன் கூறுகிறார், "அப்போதிருந்து, சீனா ஒரு 'மூன்றாவது முன்னணி' கொள்கையைத் தொடங்கியது. அதில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் அணு ஆயுதத் தாக்குதலுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்வதும் அடக்கம். இது தவிர, அதன் தொழில் திறனை நாட்டின் தென்மேற்குப் பகுதிக்கு மாற்றுவதுடன், அனைத்து வகையான பாதுகாப்பு அமைப்புகளையும் உருவாக்குவதும் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
 
ஆனால் இந்த உத்தி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இரண்டு வல்லரசு நாடுகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது சாத்தியமில்லை என்பதை சீனா உணர்ந்துள்ளது. வில்லியம் ஹர்ஸ்ட் விளக்குவது போல், "சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்திருப்பதே பொருத்தமானது என்று சீனா கண்டறிந்தது, இது 1970கள் மற்றும் 1980களில் சோவியத் யூனியனுடனான உறவுகளில் மேலும் வீழ்ச்சியை விளைவித்தது”
 
"அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், மற்ற அமெரிக்க அரசியல்வாதிகளைப் போலல்லாமல், இதை ஒரு வாய்ப்பாகக் கருதினார்," என்று ஹர்ஸ்ட் கூறுகிறார்.
 
சோவியத் ஒன்றியத்தின் சர்வதேச செல்வாக்கைக் கட்டுப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையில் சீனக் குடியரசின் இருக்கையை - தைவானில் குவோமிதாங்கை உருவாக்கியதும், பல நாடுகள் சீன அரசாங்கமாகக் கருதும் சீனக் குடியரசின் இருக்கையை, மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
 
ஓர் ஆண்டு கழித்து, 1972இல், நிக்சன் சீனாவிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை மேற்கொண்டார், மேலும் 1979இல் இரு நாடுகளும் ராஜ்ஜீய உறவுகளை மீண்டும் நிறுவின.
 
1976ஆம் ஆண்டு மாவோவின் மரணம் நாட்டிற்கு ஒரு புதிய திசையைத் திறந்தது. டெங் ஷியோபிங்கின் தலைமையின் கீழ், சந்தை முன்பைவிட அதிகமாகத் திறக்கப்பட்டது. ஷியோபிங்க் "சீன குணாதிசயங்களுடன்" கூடிய, சோசலிசம் பற்றிய நடைமுறையில் இருந்த கருத்தை ஊக்குவித்தார்.
 
சீன-சோவியத் உறவு பிரச்னையின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் காணப்பட்டது.
 
இருப்பினும், கம்யூனிச சித்தாந்தத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு சோவியத்துகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான போரின் பெரும்பகுதி ஒரு கருத்தியல் முன்னணியில் நடத்தப்பட்டது. இரு சக்திகளும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் போர்க்குணமிக்க குழுக்கள் அல்லது உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கட்சிகளில் இருந்து தோன்றிய கொரில்லாக்கள் மீது செல்வாக்கு செலுத்த முயன்றன.
 
மெக்சிகோவின் மிச்சுவோகானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிகேல் ஏஞ்சல், தனது கட்டுரை ஒன்றில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இந்த விரிசல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதயத்தில் நுழைந்து விட்டதால், பல தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்காவுடனான "அமைதியான உறவை" நிராகரித்துள்ளன என்று எழுதுகிறார்.
 
எடுத்துக்காட்டாக, கொலம்பியாவில், கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து பிரிந்து மாவோயிசத்தின் செல்வாக்கின் கீழ் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது. இந்தக் குழு, பின்னர் தேசிய விடுதலை ராணுவம் என்ற கொரில்லா குழுவை உருவாக்கியது.
 
அர்ஜென்டினா, ஈக்வடார், சிலி, பிரேசில், வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற பிற நாடுகளில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் பிரிவிலும் இந்தப் பிளவு காணப்பட்டது. பெருவில் மாவோயிசம் செந்தெரோ லூமினோஸோ போன்ற குழுக்களை உருவாக்கியது.
 
தென்கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கும் சோவியத்துக்கும் இடையே கருத்தியல் மோதல்கள் காணப்பட்டன. பேராசிரியர் டோரிசியன், "சோவியத் யூனியன் மிகவும் ஆபத்தானதாகக் கருதிய கம்போடியாவில் அத்தகைய குழுவிற்கு அந்த நேரத்தில் சீனா ஆதரவாக இருந்தது." என்கிறார்.
 
"1980 களில் சோவியத் யூனியன் சீனாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அது அமெரிக்கா-ஜப்பானுடன் நெருக்கமாக ஒத்துழைக்க சீனாவை ஊக்கப்படுத்தியது," என்று ஹர்ஸ்ட் கூறுகிறார்.
 
ஆனால் 1991இல், சோவியத் யூனியன் சிதைந்து சர்வதேச அளவில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பு ஏற்பட்டது.
 
ரஷ்யாவின் புதிய அதிபரான போரிஸ் யெல்ட்சின் சீனாவில் நம்பிக்கை கொள்ளவில்லை, அவருடைய தலைமையின் கீழ் பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடந்து பெரும் சக்தி வாய்ந்த வர்க்கத்தின் கைகளுக்கு அதிக அதிகாரம் வந்தது. ரஷ்யா முழு முதலாளித்துவத்திற்குள் நுழைந்தது.
 
ஆனால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உருவான கூட்டணி அப்போது அர்த்தமற்றதானது.
 
2001இல், ரஷ்யாவும் சீனாவும் நல்ல அண்டை நாடு மற்றும் நட்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 
வில்லியம் ஹர்ஸ்ட், "அப்போதிருந்து, பல்வேறு சக்திகளுக்கு இடையில் சமநிலையைக் கண்டறியவும், அந்த இடத்தை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மட்டுமின்றி இந்தியா அல்லது ஐரோப்பாவிற்கும்கூட தர சீனா தொடர்ந்து முயன்று வருகிறது," என்று கூறுகிறார்.
 
கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான சீனாவின் உறவுகள் தொடர்ந்து பலவீனமடைந்து, கடந்த பத்தாண்டுகளில் அவை மோசமடைந்து வருகின்றன.
 
"இதனால், சீனா ரஷ்யாவின் நட்பு நாடாக இல்லாவிட்டாலும், ரஷ்யாவுடன் நேர்மறையான உறவைப் பேணுவது முக்கியமானது. சீனாவுக்கு உலகில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வக் கூட்டணி நாடுதான் உள்ளது. அது வட கொரியா,” என்று கூறுகிறார் ஹர்ஸ்ட்.
 
இருப்பினும், கூட்டாளியாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் "ரஷ்யா சீனாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது," என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
 
ரஷ்யா தற்போது சீனாவின் முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, விமானத் துறையை மேம்படுத்த பல முக்கிய தொழில்நுட்பங்களை சீனாவுக்கு வழங்கி வருகிறது ரஷ்யா.
 
எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் இருந்து பெறப்படும் தடையில்லா எரிசக்தியால், சீனா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்தான் சீனா தனது இறக்குமதியைப் பல்வகைப்படுத்தவும் சமநிலைப்படுத்தவும் முடிகிறது.
 
சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் நெருக்கமாகிவிட்டன, ஆனால் இப்போது ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது. சீனா நுகர்வோர் பொருட்களின் முக்கிய சப்ளையர் மற்றும் தற்போது ரஷ்யாவின் வர்த்தக பங்காளியாகவும் உள்ளது. யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை முறியடிப்பதில் சீனா முக்கியப் பங்காற்றுகிறது.
 
மாவோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்ய பயணத்திற்கு எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளின் நிலைகளும் இன்று தலைகீழாக மாறியுள்ளன.
 
ஷி ஜின்பிங் ரஷ்யா சென்றார். ஆனால் இப்போது விருந்தினர் மாளிகையில் நீண்ட காத்திருப்பு இல்லை. புன்னகையும் சிவப்புக் கம்பள வரவேற்பும் மட்டுமே இருந்தன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''12 மணி நேரம் மின்வெட்டு''...பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்