ஹுண்டாய் பாகிஸ்தான் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்ட இடுகையில், காஷ்மீரின் 'விடுதலை'க்கு அழைப்பு விடுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றதால், மிகப்பெரிய உலகளாவிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
@hyundaiPakistanOfficial என்ற அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பாகிஸ்தானின் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை ஆதரித்து, "சுதந்திரத்திற்கான போராட்டம்" என்று அழைக்கும் இடுகை பகிரப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் இடுகையில் காஷ்மீரில் கல் எறிவோரின் படத்தையும் இணைத்து, 'காஷ்மீர் ஒற்றுமை தினம் பிப்ரவரி 5' என்ற வாசகம் இருந்தது. இதையடுத்து இந்தியாவில் #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.
இந்தியாவில் இருந்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய பலரும், ஹுண்டாய் நிறுவன தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
காஷ்மீரை தவறாக சித்தரித்ததற்காகவும், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும், ஹுண்டாய் பாகிஸ்தான் விற்பனை நிறுவனமும் ஹுண்டாய் குளோபல் நிறுவனமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஊடக பயனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்த இடுகை நீக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும், ஆன்லைனில் ஹுண்டாய் புறக்கணிப்புக்கான அழைப்புகள் அதிகரித்ததால், ஹுண்டாய் மோட்டார் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், எங்களுடைய நிறுவனம் தேசியவாதத்தை மதிக்கும் அதன் நெறிமுறையில் வலுவாக நிற்கிறது, இந்திய சந்தையில் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கியா மோட்டார்ஸின் ட்வீட், 'கியா மோட்டார்ஸ் கிராஸ்ரோட்ஸ்-ஹைதராபாத்' ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவேற்றப்பட்டது.அதில், காஷ்மீரின் சுதந்திரத்திற்காக நாங்கள் ஒன்றாக நிற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 'ஹுண்டாய் பாகிஸ்தான்' ஒரு ட்வீட் செய்யப்பட்டது. அதில், "நமது காஷ்மீரி சகோதரர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம், அவர்கள் சுதந்திர போராட்டத்தைத் தொடர அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தியாவில் இந்த ட்வீட்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவே, ஹுண்டாய் பாகிஸ்தானின் ட்வீட்டை ஆதரிக்கிறீர்களா என்று பலரும் ஹுண்டாய் இந்தியாவை டேக் செய்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
மேலும் ஹுண்டாய் நிறுவனத்தை புறக்கணிக்குமாறு பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.
இருப்பினும், இந்த இரண்டு ட்விட்டர் கணக்குகளும் உண்மையிலேயே ஹுன்டாய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களா இல்லையா என்பது தெளிவாக இல்லை.
சர்ச்சை இடுகைகளுக்கு எதிர்வினையாற்றிய ஜாக் ரெட்டி என்ற பயனர், "எனது ஹுண்டாய் காரை விற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனத்துக்கு சுதந்திர காஷ்மீர் தேவைப்படுகிறது," என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தீவிரமாவதை உணர்ந்த ஹுண்டாய் இந்தியா முழு விஷயத்தையும் தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "கடந்த 25 ஆண்டுகளாக இந்திய சந்தையில் ஹுண்டாய் இந்தியா உறுதியாக உள்ளது, மேலும் வலுவான தேசியவாதத்தின் மதிப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வேண்டாத இடுகையை ஹுண்டாய் இந்தியாவுடன் இணைப்பது, மகத்தான நாட்டிற்கான எங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவையை அவமதிப்பது போல ஆகும். இந்தியா ஹுண்டாய் எங்களுக்கு இரண்டாம் தாய் வீடு போன்றது. இங்கே பொறுப்பற்ற தகவல்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கொண்டுள்ளோம். அத்தகைய அணுகுமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவுக்கான எங்கள் ஈடுபாட்டின் காரணமாக, இந்தியா மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்," என்று கூறப்பட்டுள்ளது.