எகிப்திய தலைநகரான கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாப் அல்-ஷரியாவில் உள்ள தனது மருந்துக்கடையில், மூலிகை மருந்துகள் பற்றிய ஞானம் உள்ளவரான அல்-ஹபாஷி தனது மந்திர கலவை என்ன என்பதை விளக்குகிறார்.
ஹபாஷி எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பாலுணர்வை அதிகரிக்கச்செய்யும் இயற்கை மருந்துகளை விற்கும் கடைக்காரராக பெயர் பெற்றுள்ளார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக, தன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் அவர் மாற்றத்தைக் காண்கிறார்.
"பெரும்பாலான ஆண்கள் இப்போது மேற்கத்திய நிறுவனங்களில் இருந்து வரும் நீல மாத்திரைகளை வாங்கிச்செல்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார். பல ஆய்வுகளின்படி அரபு நாடுகளில் உள்ள இளைஞர்கள் சில்டெனாபில் (வயாக்ரா என அழைக்கப்பகிறது), வர்தனாபில் (லெவிட்ரா, ஸ்டாக்சின்) மற்றும் தடாலாஃபில் (சியாலிஸ்) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
விறைப்புத் தன்மை பிரச்னை காரணமாக இதை எடுத்துக்கொள்கிறீர்களா என்று எகிப்து மற்றும் பஹ்ரைன் தெருக்களில் சில இளைஞர்களிடம் பிபிசி கேட்டது. ஆனால் ஆதாரங்கள் இருந்தபோதிலும், ஆச்சரியப்படும் விதமாக பெரும்பாலான இளைஞர்கள் அதை மறுத்தனர். இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் திட்டவட்டமாகக்கூறினர்.
இதை சமூகத்தின் ஒழுக்கத்திற்கு எதிரானதாகக் கருதும் சிலர் இந்த விஷயம் பற்றி பேசக்கூட மறுத்துவிட்டனர்.
பட்டியலில் முதலிடத்தில் செளதி அரேபியா
2012 ஆய்வின்படி, அரபு நாடுகளில் தனிநபர் ஆண்மைக்குறைவு தடுப்பு மருந்துகளின் மிகப்பெரிய நுகர்வோர் எகிப்து ஆகும். இந்த பட்டியலில் தற்போது செளதி அரேபியாவும் முன்னணியில் உள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட செளதி செய்தித்தாள் அல்-ரியாத், செளதி அரேபியா ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர்களை பாலியல் ஆசையை தூண்டும் மாத்திரைகளுக்காக செலவிடுவதாக மதிப்பிட்டுள்ளது.
செளதி அரேபியாவில் அதன் நுகர்வு ரஷ்யாவை விட 10 மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால் ரஷ்யாவின் மக்கள் தொகை செளதியை விட ஐந்து மடங்கு அதிகம்.
தனது ஆய்வில் பங்கேற்ற செளதி இளைஞர்களில் 40 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் வயாகரா போன்ற மருந்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அரேபிய யூரோலஜி இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
எகிப்து தற்போதும் முதலிடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களின்படி, ஆண்மை குறைவு தடுப்பு மருந்துகளின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 127 மில்லியன் டாலர்கள் ஆகும். இது முழு எகிப்திய மருந்து சந்தையில் 2.8% க்கு சமம்.
நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரும் சிலர்
ஆண்மைக்குறைவு நோயுடன் தொடர்புடைய அல்-ஃபன்கௌஷ் என்ற மருந்து 2014 இல் எகிப்திய மளிகைக் கடைகளில் சாக்லேட் பார் வடிவில் காணப்பட்டது. அல்-ஃபன்கெளஷின் விலை ஒரு எகிப்திய பவுண்டுக்கு சமமாக இருந்தது.
இது சந்தையில் நுழைந்த சில நாட்களுக்குப் பிறகு, அது குழந்தைகளுக்கு விற்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபோது அதன் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
ஆண்மைக்குறைவு தடுப்பு மருந்துகளின் பயன்பாடு, இளைஞர்களை விட பெரியவர்களிடையே அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இது பொதுவாக 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று ஏமனின் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2015 இல் ஹூதி இயக்கத்தின் கிளர்ச்சியாளர்களுக்கும் செளதி ஆதரவு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து, பார்ட்டிகளின்போது வயாக்ரா மற்றும் சியாலிஸ் பயன்பாடு இளைஞர்களிடையே பரவலாகிவிட்டது என்று உள்ளூர் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
துனீஷியாவை சேர்ந்த, சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சைப்பிரிவு பேராசிரியர் மொஹமத் சஃபாக்ஸி, பிபிசிக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற மருந்துகள் பாலுணர்வை தூண்டுபவை அல்ல என்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை வயதானவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் வலியுறுத்தினார்.
அதே நேரம், தற்போதைய கலாசாரத்தினால் அரபு இளைஞர்கள் இந்த மருந்துகளை பயன்படுத்துவதாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலுறவு தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எகிப்திய-இங்கிலாந்து பத்திரிகையாளரும், செக்ஸ் அண்ட் தி சிட்டாடல்: இன்டிமேட் லைஃப் இன் எ சேஞ்சிங் அரேப் வேர்ல்ட்' புத்தகத்தை எழுதியவருமான ஷரின் அல் ஃபெக்கி, "இதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கலாம்."என்று கூறுகிறார்.
2017 ஆம் ஆண்டில் மத்திய-கிழக்கு நாடுகளில் பாலின சமன்பாடு குறித்த ஐ.நா-ஆதரவு பெற்ற முக்கியமான ஆய்வின் முடிவுகளுக்கு பதிலளித்த அல்-ஃபெக்கி, "இந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் அனைவருமே எதிர்காலத்தைப் பற்றி பயந்தார்கள். ஒரு ஆணாக இருப்பதில் உள்ள அழுத்தம் பற்றி அவர்கள் சொன்னார்கள். இன்றைய ஆண்களிடையே ஆண்மை குறைவதாக, பல பெண்கள் தெரிவித்தனர்,"என்று குறிப்பிட்டார்.
உடலுறவின் போது அனைவருமே செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்று அவர் கூறுகிறார்.
வரலாற்று கோட்பாடுகள்
பாலியல் தேவைகளுக்காக ஊக்க மருந்துகளை பயன்படுத்துவது அரபு சமுதாயத்தில் ஒரு புதிய நவீன நிகழ்வாகக் கருதப்படலாம். ஆனால் பாலுணர்வை தூண்டும் பொருட்கள் பயன்பாடு, அரபு வரலாறு முழுவதும் பிரபலமான கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
14 ஆம் நூற்றாண்டின் நன்கு அறியப்பட்ட முஸ்லிம் அறிஞரும் எழுத்தாளருமான இப்னு கய்யூம் அல்-ஜௌஸியா, பாலியல் ஆசையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மூலிகை சமையல் குறிப்புகளின் தொகுப்பான ப்ரொவிஷன்ஸ் ஃபார் தி ஹியர் ஆஃப்டர் என்ற தனது தொடரில் இதைப் பற்றி எழுதினார்.
அரேபிய மற்றும் இஸ்லாமிய பாரம்பரியம், "ஆண்களை விட பெண்கள் , அதிகமான மற்றும் வலுவான பாலியல் ஆசைகளைக் கொண்டிருப்பதாக கருதுகின்றன" என்று ஷரின் அல்-ஃபெக்கி கூறுகிறார். அதே நேரத்தில் ஆண்கள் தங்கள் பாலியல் செயல்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள்.
இந்தக் கருத்து ஒட்டோமான் பேரரசின் போது எழுதப்பட்ட புத்தகத்தில் காணப்படுகிறது. 1512 முதல் 1520 வரை ஆட்சி செய்த சுல்தான் முதலாவது செலிம் இன் வேண்டுகோளின் பேரில் அகமது பின் சுலைமான் தனது 'ஷேக் ரிட்டர்ன் டு யூத்' என்ற புத்தகத்தில் இதை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் பாலியல் நோய்களுக்கான சிகிச்சையின் விரிவான அகராதியாக இருந்தது. அதே போல் இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் ஆசைகளை தூண்டுவது தொடர்பாகவும் எழுதப்பட்டது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அரேபிய இளைஞர்கள் சிகிச்சையின் பக்கம் திரும்புகிறார்கள். மருந்து சந்தை அவர்களுக்காக துடிப்புடன் உள்ளது.