Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா ஏன் அருணாசலப்பிரதேசத்தை கிழக்கு திபெத் என்று சொல்கிறது?

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (14:11 IST)
கிழக்கு லடாக் பகுதியில் எல்ஏசி அதாவது உண்மையான கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் நிலவும் ராணுவ பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு பரஸ்பரம் குற்றசாட்டுக்களை சுமத்தின.

ராணுவ பதற்றத்தைக் குறைப்பதற்காகவும், எல்லையில் அதே சீரான நிலையை மீட்டெடுப்பதற்காகவும், மூத்த ராணுவ தளபதி மட்டத்திலான 13 வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள், இந்த பரஸ்பர குற்றம் சுமத்தல்களுடன் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு அருணாச்சலப் பிரதேசத்திற்கு மேற்கொண்ட பயணத்திற்கு சீனா புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது. எல்லைப் பிரச்சனையை அதிகரிக்கும் இதுபோன்ற எதையும் இந்தியா செய்யக்கூடாது என்று சீனா கூறியது.

சீனாவின் இந்த ஆட்சேபத்திற்கு, சில மணி நேரங்களுக்குள் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சகம், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதை பிரிக்க முடியாது என்றும் வலியுறுத்திக்கூறியது. அருணாச்சலபிரதேசத்திற்கு இந்தியத் தலைவர்கள் செல்வதை ஆட்சேபிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று இந்தியா கூறியது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல் பிரதேசத்திற்கு சென்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. 2020ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அருணாச்சல் பயணத்திற்கும் சீனா ஆட்சேபம் தெரிவித்தது.

ஒவ்வொரு முறையும் சீனாவின் ஆட்சேபனையை இந்தியா நிராகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோமீட்டர் நிலம் மீது சீனா உரிமை கோருகிறது. அதே நேரத்தில் மேற்கில் அக்சாய் சின்னின் 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது.

வெங்கைய நாயுடுவின் பயணம் குறித்த சீனாவின் எதிர்ப்பு பற்றிக்கருத்துத்தெரிவித்த இந்தியாவின் பிரபல செயல்திட்ட நிபுணர் பிரம்ம செலானி, "சீன அதிபர் ஷி ஜின்பிங் திபெத்துக்கு சென்றபோது, இந்தியா எதுவும் சொல்லவில்லை. ஷி ஜின்பிங் இந்திய எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மக்கள் விடுதலை ராணுவத்தின் தளத்தில் ஓர் இரவு தங்கினார். இது சீனாவின் போர் ஆயத்தமாக பார்க்கப்பட்டது. வெங்கைய நாயுடுவின் அருணாச்சலப் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை," என்று ட்வீட் செய்துள்ளார்.

சீனாவின் வரலாறு குறித்து புத்தகம் எழுதியுள்ள மைக்கேல் ஷுமான், அருணாச்சல பிரதேசத்தில் இந்தியத் தலைவர்கள் செல்வதற்கு சீனா தெரிவிக்கும் ஆட்சேபனை பற்றிக்குறிப்பிடுகையில், "சீனா இந்தியாவுடனான உறவை மிகவும் மோசமாக கையாள்கிறது. இது சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் பெரும் தோல்வியாக இருக்கலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி அரசில் வெளியுறவு செயலராக இருந்த கன்வல் சிபல், சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா அளித்த பதிலை மறு ட்வீட் செய்து, "சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சவாலான மொழியில் உள்ளது. நமது பதில் மிகவும் மென்மையாக உள்ளது. சர்ச்சையில் சிக்காமல் இருக்க நல்ல காரணங்கள் இருக்கலாம். எனவே நாம் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்னும் வலுவாக பதிலளிக்க முடியும்," என்று கூறியுள்ளார்.

தெற்கு திபெத்

அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா விவரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே 3,500 கிமீ (2,174 மைல்) நீள எல்லை உள்ளது. திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 1,912 வரை தெளிவான எல்லைக் கோடு வரையப்படவில்லை.

முகலாயர்களுக்கோ அல்லது ஆங்கிலேயர்களுக்கோ இந்தப் பகுதிகளின் மீது கட்டுப்பாடு இருக்கவில்லை. இந்தியா மற்றும் திபெத் மக்களுக்கும் தெளிவான எல்லைக் கோடு பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. தவாங்கில் புத்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டபோது, எல்லைக் கோட்டின் ஆய்வு தொடங்கியது. 1914 ஆம் ஆண்டில், திபெத், சீனா மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரதிநிதிகள் சிம்லாவில் சந்தித்து எல்லைக் கோடு பற்றி தீர்மானித்தனர்.

திபெத்தை ஒரு சுதந்திர நாடாக சீனா ஒருபோதும் கருதவில்லை. 1914 சிம்லா ஒப்பந்தத்தில் கூட அதை ஏற்கவில்லை. 1950 இல், சீனா திபெத்தை முழுமையாகக் கைப்பற்றியது. திபெத்திய பொளத்தர்களுக்கு மிக முக்கியமான தவாங் , தன்னுடைய பகுதியாக இருக்க வேண்டும் என்று சீனா விரும்பியது.

சீனா மற்றும் திபெத்

1949 ல், மாவோ சேதுங் சீன மக்கள் குடியரசை நிறுவினார். 1950 ஏப்ரல் 1 அன்று இந்தியா அதை அங்கீகரித்து தூதாண்மை உறவுகளை ஏற்படுத்தியது. சீனாவுக்கு அங்கீகாரம் அளித்த முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடு இந்தியாதான்.

1954 ல் இந்தியா, திபெத்தின் மீதான சீன இறையாண்மையை ஏற்றுக்கொண்டது. அதாவது திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது. 'இந்தி-சீனி, பாய்-பாய்' (இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.

1914 ஆம் ஆண்டில், சிம்லா ஒப்பந்தத்தின் கீழ், மக்மோஹன் கோடு சர்வதேச எல்லையாகக் கருதப்பட்டது. ஆனால் 1954 இல் நேரு ஓர் ஒப்பந்தத்தின் கீழ் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார்.

1954 ஜூன் மற்றும் 1957 ஜனவரிக்கு இடையில், சீனாவின் முதல் பிரதமர் சூ என் லாய் நான்கு முறை இந்தியாவிற்கு வந்தார். 1954 அக்டோபரில் நேருவும் சீனா சென்றார்.

1950 ல், சீனா திபெத்தை தாக்கத் தொடங்கியது மற்றும் அதை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. திபெத் மீதான சீனத் தாக்குதல், முழு பிராந்தியத்தின் புவிசார் அரசியலையும் மாற்றியது.

சீன தாக்குதலுக்கு முன்பு திபெத், சீனாவை விட இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, திபெத்தின் இறையாண்மை பறிபோனது. 1950 களின் மத்தியில் இந்தியப் பகுதிகளிலும் சீனா அத்துமீறலைத் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டில், சீனா அக்சாய் சின் வழியாக மேற்கு நோக்கி 179 கிமீ நீள சாலை அமைத்தது.

இரு நாட்டு வீரர்களுக்கும் இடையிலான முதல் எல்லைமோதல் 1959 , ஆகஸ்ட் 25 அன்று எல்லையில் நடந்தது. லாங்ஜுவில் உள்ள NEFA எல்லையை சீன ரோந்து படையினர் தாக்கினர். அதே ஆண்டு அக்டோபர் 21 அன்று, லடாக்கின் கோங்காவில் குண்டுவீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா அதை தற்காப்புக்காக எடுத்த நடவடிக்கை என்று கூறியது. அதே நேரம் இந்தியா 'தனது வீரர்கள் திடீரென தாக்கப்பட்டனர்' என்று குறிப்பிட்டது.

LAC ஆனது LOC யாக ?

2017 ஜூன் 2 அன்று, பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார மன்றத்தின் ஒரு குழு விவாதத்தில், "சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில், இரு நாடுகளின் எல்லையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை. " என்று கூறினார். பிரதமர் மோதியின் இந்த அறிக்கையை சீனாவும் வரவேற்றது.

ஆனால் இந்தியா இப்போது அதைச் சொல்லும் நிலையில் இல்லை. 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியாவின் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவின் நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவித்தன.

திபெத் மீது சீனா தாக்குதல் தொடுத்தபோது, திபெத்தின் பொளத்த மதத் தலைவர் தலாய் லாமா அங்கிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது. தலாய் லாமா 1959, மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவிற்குள் நுழைந்தார். மார்ச் 17 அன்று, அவர் திபெத்தின் தலைநகரான லாசாவிலிருந்து கால்நடையாக புறப்பட்டு இமயமலைத் தொடர்களைக் கடந்து 15 நாட்களுக்குப் பிறகு இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

2017 ஆம் ஆண்டில் தலாய் லாமா அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றபோது, இந்தியா அதை அனுமதிக்கக் கூடாது, இந்தியாவிற்கு இது எந்தவகையிலும் பயனளிக்காது என்றும் கூறி சீனா அதை கடுமையாக எதிர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments