Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் - காரணங்கள் என்னென்ன?

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (13:35 IST)
யுக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு மாதங்களுக்குள் ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துவிட்டது.
 
ரஷ்யா தனது டாங்கிகளை மோசமான முறைகளில் பயன்படுத்தியதும், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்களுமே இந்த இழப்புகளுக்குக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
எத்தனை டாங்கிகளை ரஷ்யா இழந்திருக்கிறது?
 
ரஷ்யா 680 க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக யுக்ரேனின் ராணுவம் கூறுகிறது. போர்க் களத்தில் இருந்து கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஓரிக்ஸ் எனப்படும் ராணுவ மற்றும் உளவுச் செய்திகளை வெளியிடும் வலைத்தளம், ரஷ்யா சுமார் 460 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் இழந்திருப்பதாகப்பதிவு செய்திருக்கிறது.
 
போர் தொடங்கிய போது, ரஷ்யாவிடம் மொத்தம் 2700 டாங்கிகள் இருந்ததாக ராண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஐஐஎஸ்எஸ் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ்) ஆகியவை தெரிவிக்கின்றன.
 
டாங்கி அழிப்பு ஆயுதங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன?
மோதலின் தொடக்கத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்கு 2,000 ஜாவெலின் என்ற டாங்கி அழிப்பு ஏவுகணைகளை வழங்கியது. சுமார் 2,000 ஏவுகணைகளையும் அனுப்பியது.
 
டாங்கிகளில் நான்கு புறத்திலும் கடினமான பொருள்களால் கவசம் உருவாக்கப்பட்டிருக்கும். பாதுகாப்பு அதிகம். ஆனால் மேற்புறம் பலவீனமாக இருக்கும். ஜாவெலின் ஏவுகணைகளை மேற்புறமாகத் தாக்குவது போல ஏவ முடியும் என்று ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் கூறுகிறது.
 
சாதாரண ஏவுகணைகள் வந்து தாக்கும்போது அதன் பாதிப்பை தாங்கும் அளவுக்கு ரஷ்ய டாங்கிகளில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஜாவெலின் ஏவுகணைகளில் இரண்டு தொகுப்பு வெடிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கவசத்தைப் பிளக்கிறது. இரண்டாவது வெடிபொருள் டாங்கியின் அடிப்பாகத்தைத் துளைக்கிறது.
 
ஜாவெலின் தவிர நவீன 3,600 இலகு ரக டாங்கி அழிப்பு ஏவுகணைகளை (NLAW) யுக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கியிருக்கிறது. இவை டாங்கிகளின் மேல் இருக்கும் திறப்புக்கு அருகே செல்லும்போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
"ஜாவெலின் மற்றும் NLAW ஆகிய ஏவுகணைகள் மிகவும் ஆற்றல் மிக்கவை" என்று கூறுகிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப் போர் ஆய்வாளராக இருக்கும் நிக் ரெனால்ட்ஸ்.
 
"இந்த முக்கியமான ஆயுத உதவி இல்லாதிருந்தால், யுக்ரேனின் நிலைமை மிகவும் மாறுபட்டு இருந்திருக்கும்." என்கிறார் அவர். அமெரிக்கா யுக்ரேனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் டாங்கி அழிப்பு ட்ரோன்களை வழங்குகிறது.
 
"காமிகேஸ்" ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் அவற்றை மிகத் தொலைவில் இருந்து இயக்கலாம். முதலில் இலக்குக்கு மேல் வட்டமிடும். பின்னர் தனது முனையில் உள்ள வெடிபொருளை டாங்கியின் மீது போட்டு அதை அழித்துவிடும்.
 
ரஷ்யாவின் போர்த் தந்திரங்களில் என்ன தவறு ஏற்பட்டது?
தற்காலத்தில் ரஷ்ய ராணுவம் பட்டாலியன் தந்திரோபாயக் குழுக்களை (BTG) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. டாங்கிகள், காலாட்படை, பீரங்கிகள் ஆகியவற்றை இந்தப் படைப் பிரிவுகள் கொண்டிருக்கும்.
 
இந்தப் படைப்பிரிவுகளின் அமைப்பு வேறுபட்டிருக்கலாம், ஆனால் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் இவற்றில் இருக்கும். காலாட்படை குறைந்த அளவிலேயே இருக்கும்.
 
"ரஷ்யாவுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அளவே படை வீரர்கள் உள்ளனர்" என்கிறார் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆய்வுகளின் பேராசிரியரான பிலிப்ஸ் ஓ'பிரையன். எனவே டாங்குகள், பீரங்கிகள் போன்றவற்றைக் கொண்ட BTG குழுவை உருவாக்குவது ஒரு எளிய வழியாகும்.
 
"அவை ஏராளமான குண்டுகளை வீசிக் கொண்டே வேகமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தகையை கவச வாகனங்களை வழிநடத்திச் செல்வதற்கும் கவசப் பகுதி தாக்குதலுக்கு உள்ளானால் பதிலடி கொடுப்பதற்கும் போதுமான காலாட்படை வீரர்கள் இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.
 
"இதனால் ரஷ்ய ராணுவம் வலதுபுறம் சிறந்து குத்துகளைவிடும் திறன் கொண்ட, அதே நேரத்தில் கண்ணாடியால் ஆன தாடையைக் கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரரைப் போல ஆகிவிடுகிறது"
 
ரஷ்ய விமானங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடாததால், யுக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய டாங்கிகள் செல்லும் வழிகளில் பதுங்கியிருந்து அவற்றின் மீது திடீர் தாக்குதல்களை நடத்துவது எளிதாகிறது.
 
ரஷ்யப் படையில் எவ்வளவு திறமையின்மை இருக்கிறது?
ஓரிக்ஸ் தளத்தின் புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யா இழந்த டாங்கிகளில் பாதி எதிரிகளால் அழிக்கப்படவில்லை. அவை பிடிபட்டிருக்கின்றன அல்லது கைவிடப்பட்டிருக்கின்றன. வல்லுநர்கள் இதற்கு ரஷ்ய துருப்புக்களின் திறமையின்மையே காரணம் என்று குறிப்பிடுகின்றனர்.
 
"யுக்ரேனிய விவசாயிகள் தங்களது டிராக்டர்களைக் கொண்டு ரஷ்ய டாங்குகளை இழுத்துச் செல்லும் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்கிறார் ஓ'பிரைன். "அந்த டாங்கிகளில் சில எரிபொருள் தீர்ந்துவிட்டதால் கைவிடப்பட்டவை. அது ஒரு தளவாடத் திட்டத்தின் தோல்வி. சில மழைக்காலச் சேற்றில் சிக்கிக்கொண்டன. ஏனென்றால் ஆண்டின் தவறான நேரத்தில் ரஷ்யா படையெடுத்திருக்கிறது."
 
"மோசமாக ஓட்டியதன் காரணமாகவே பல டாங்கிகளை கைவிட நேர்ந்திருக்கிறது. சில பாலங்களில் தவறி விழுந்திருக்கின்றன. மற்றவை பள்ளங்களில் கவிழ்ந்திருக்கின்றன. " என்கிறார் நிக் ரெனால்ட்ஸ். "பெரும்பாலான வீரர்களுக்கு போரிடுவதில் விருப்பமே இல்லை. இதனால்தங்கள் வாகனங்களை வெறுமனே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்." என்கிறார் அவர்.
 
கைவிடப்பட்ட ராணுவ வாகனங்களை மக்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி யுக்ரேனிய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற "போர் வெற்றிக் கோப்பைகள்" கிடைத்தால் அவற்றை வருமான வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments