சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணங்களாக பணம், உள்கட்சி மோதல் என பல விஷயங்களை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்டுள்ளனர். என்ன நடந்தது?
தமிழக சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்னதாக கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம் ஆகியவற்றில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்தினார். `வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு பெரிதும் கை கொடுக்கும்' எனவும் நம்பினார். ஆனால், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைத் தவிர வேறு எந்தத் தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு இடஒதுக்கீடு விவகாரம் கை கொடுக்கவில்லை.
கை கொடுத்த 3 தொகுதிகள்
இதில், அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்டவர்களும் தோல்வியைத் தழுவினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய தொகுதிகளில் அரக்கோணம், கே.வி.குப்பம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. இதற்கான காரணங்கள் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சி நிர்வாகிகள் விவரித்துள்ளனர்.
அதிலும், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கடைசி சுற்று வரையில் நெருக்கடி கொடுத்த அ.தி.மு.க வேட்பாளர் ராமு தொடர்பான விவகாரமே பெரிதும் பேசப்படுகிறது.
`கடைசி நேரத்தில் தி.மு.க தரப்பிடம் விலை போய் விட்டார்; சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை,' என்றெல்லாம் கட்சித் தலைமைக்கு சிலர் புகார் அனுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எடப்பாடியை நேரில் சந்தித்து ராமு புகார் தெரிவித்துள்ளார். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது.
சதி வேலைகளால் தோல்வி
`கடைசி சுற்று வரையில் துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுத்தீர்கள். தோல்விக்கு என்ன காரணம்?' என ராமுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தேன். ஆனால், நான் 100 சதவிகிதம் வெற்றி பெற வேண்டியவன். சுமார் 5,000 அல்லது 10,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். சிலரது சதி வேலைகளால் நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன்," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``2016 ஆம் ஆண்டு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தேன். எனக்கு சொந்தத் தொகுதியாக கே.வி.குப்பமும் வரும் குடியாத்தமும் வரும். ஆனால் காட்பாடி தொகுதி கிடைத்தால் நன்றாக இருக்கும் என அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தார். இந்த முறை முதல்வரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். ஒரு கட்டத்தில், துரைமுருகனை எதிர்த்து என்னை களமிறக்க இ.பி.எஸ் முடிவு செய்தார். இதற்கு அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியும் ஒப்புதல் கொடுத்தார்.
டம்மி வேட்பாளரா?
எனக்குப் போட்டியிட வாய்ப்பு வந்தது. ஆனால், `நான் ஒரு டம்மி வேட்பாளர், துரைமுருகனும் வீரமணியும் பேசி வைத்துக் கொண்டு இப்படியொரு வேட்பாளரை போட்டுள்ளனர்,' என எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே பொய்யான தகவலைப் பரப்பிவிட்டனர். அமைச்சராக இருந்த நிலோபர் கஃபீலும், `துரைமுருகனை எதிர்த்து ராமுவால் போட்டியிட முடியுமா?' என பேட்டி கொடுத்தார். ஆனாலும், வேட்பு மனு தாக்கலின்போது பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்டினேன். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், நன்றாக வேலை பார்த்து வந்த அ.தி.மு.கவின் ஆறு வட்டச் செயலாளர்களை மாற்றி விட்டனர். அவர்கள் எல்லாம் பத்து வருடங்களாக வட்டச் செயலாளர்களாக இருந்தவர்கள்.
வேட்பாளர் என்ற முறையில், `எனக்கு இந்த வட்டச் செயலாளர்கள் வேண்டாம்' என கூறியிருக்கலாம். அதையும் மீறி வெற்றி பெற வேண்டும் என உழைத்தேன். ஆனால், `தேர்தல் வேலை பார்க்க வேண்டாம், ராமுவை கண்டு கொள்ள வேண்டாம்' என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். காரணம், `நான் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிட வந்து விடக் கூடாது' என்பதால்தான். இதனால், காட்பாடி நகரத்தில் எனக்குப் பெரிதாக வாக்குகள் வரவில்லை. ஒரு வாக்குப் பெட்டியை எண்ணாமல் விட்டு விட்டனர். அதை எண்ணியிருந்தால் வாக்கு வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும். தேர்தல் அலுவலரிடம், `தபால் வாக்குகளை எண்ணுங்கள்' என தி.மு.கவினர் அழுத்தம் கொடுத்தனர். அதிகாரிகளும் நெருக்குதலுக்கு ஆளானார்கள். தபால் வாக்குகளில் எனக்கு 719 வாக்குகளும் துரைமுருகனுக்கு 1,897 வாக்குகளும் விழுந்தன.
50 கோடிக்கு விலை பேசப்பட்டதா?
`துரைமுருகனுக்கு அ.தி.மு.க வேட்பாளர் விட்டுக் கொடுத்து விட்டார் என்ற தகவல் பரவுகிறதே? என்றோம். ``அது முழுக்க முழுக்க தவறான தகவல். எண்ணப்படாமல் இருந்த இயந்திரத்தில் 516 வாக்குகள் இருந்தன. அது எனக்கே வந்திருந்தாலும் 232 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் முன்னணியில் இருப்பார் என்பதால் எண்ணவில்லை. ஒருவேளை அதை எண்ணியிருந்தால் எனக்குக் கூடுதலாக 200 வாக்குகள் கிடைத்திருக்கலாம். அந்த இடத்தில் எங்களோடு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
கடைசி நேரத்தில் பதற்றமான சூழல் நிலவியது. மறுநாள், துரைமுருகனுக்கு நான் கடும் நெருக்கடி கொடுத்ததாகத் தகவல் வெளியானது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நான் 50 கோடிக்கு விலை போனதாகத் தகவல் பரப்பினார்கள். மக்களுக்கு சேவை செய்து பேரும் புகழும் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். என் மீது நம்பிக்கை வைத்துக் கட்சித் தலைமை சீட்டைக் கொடுத்தது," என்கிறார்.
எடப்பாடியிடம் புகார்
`எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?' என்றோம்.
``சேலத்தில் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது, `ரொம்ப நன்றிண்ணே, என்னை நம்பி காட்பாடியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள். சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி விட்டேன். அதுவும் தபால் வாக்குகள் கை கொடுக்கவில்லை. உண்மையில் மக்கள் வாக்களித்த வரையில் நான்தான் வெற்றி பெற்றேன். அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளால்தான் தோற்றேன். உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்தபடி, 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். வட்டச் செயலாளர்களை மாற்றியது, என்னை டம்மி வேட்பாளர் என்றெல்லாம் பேசியது போன்றவற்றின் மூலம் என்னுடைய இமேஜை டேமேஜ் செய்து விட்டார்கள்,' என்றேன்.
அவரும், `இந்தளவுக்கு நீ கடும் போட்டியை கொடுப்பேன்னு நானே எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு போட்டி இருக்கும் எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் கேர் எடுத்து உன் தொகுதியை கவனித்திருப்பேன்' என்றார். தொடர்ந்து நான் பேசும்போது, `தேர்தல் நேரத்தில் நீங்கள் ஒரு பத்து நிமிடம் காட்பாடியில் பிரசாரம் செய்திருந்தால் எனக்கு பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கும்,' என்றேன். அவரும், `கடைசி நேரத்தில் வேட்பாளருக்கு செலவு வைக்கக் கூடாது என்பதால்தான் பல இடங்களுக்குச் செல்லவில்லை' என்றார்.
கட்சியில் உள்ள சிலரால்தான் தேர்தலில் எனக்குத் தோல்வி ஏற்பட்டது. இது குறித்து தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளேன். கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்' என்றார்.
அ.தி.மு.க வேட்பாளர் ராமு கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவிடம் பிபிசி தமிழுக்காக விளக்கம் கேட்டோம். ``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அ.தி.மு.கவை பொறுத்தவரையில் எந்தத் தொண்டனை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றுதான் கட்சிக்காரர்கள் பாடுபடுவார்கள். தேர்தல் வேலை பார்க்காமல் இருந்திருந்தால் இவ்வளவு வாக்குகளை ராமுவால் வாங்கியிருக்க முடியாது. என்ன நடந்தது என்பது தலைமைக்குத் தெரியும். இப்போது ஏன் அவர் புகார் கூறுகிறார் எனத் தெரியவில்லை," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``காட்பாடியில் வாக்குச் சாவடிக்குள் ஏதோ தவறு நடந்துள்ளது. வேலூரில் 375 செல்லாத தபால் வாக்குகள் இருந்தன. கே.வி.குப்பத்தில் 500 வாக்குகளும் அணைக்கட்டில் 500 வாக்குகளும் குடியாத்தத்தில் 300 வாக்குகளும் செல்லாதவை எனப் பதிவாகியிருந்தன. காட்பாடியில் மட்டும் 393 செல்லாத வாக்குகள் இருந்துள்ளன. ஆனால், ஜீரோ எனப் பதிவாகியுள்ளது. அந்த வாக்குகளை அப்படியே தி.மு.க பக்கம் மாற்றி விட்டனர். அதை பூத்தில் இருந்தவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.
அதேபோல், ஒரு வாக்குப் பெட்டியையும் எண்ணவில்லை. அன்று இரவு தாமதப்படுத்தியே தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பா.ம.க உள்பட கூட்டணிக் கட்சிக்காரர்கள் சிறப்பாக வேலை பார்த்தார்கள். யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக அவர் இவ்வாறு பேசுகிறார்" என்கிறார்.