ஐ.பி.எல். தொடரில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீறுநடை தொடர்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அசுர வெற்றி பெற்று சென்னை அணி முதலிடத்திற்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. போட்டி நடந்தது சென்னையிலா அல்லது கொல்கத்தாவிலா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ஈடன் கார்டன் மைதானமே மஞ்சள்மயமாக காட்சியளித்தது.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாகிவிட்ட தோனியை வரவேற்க, சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து பெரும்பாலான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திவிட்டது என்றே சொல்லலாம்.
சென்னை அணி பேட்டிங் செய்த போது, தொடக்கம் முதல் இறுதி வரை இடையில் எந்தவொரு ஓவரிலும் தொய்வில்லாமல் ரன்மழை பொழிந்து கொண்டே இருந்தது. இதன் மூலம் இமாலய இலக்கை நிர்ணயித்த சென்னை அணி, பவுலிங்கின் போதும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கி முற்றிலுமாக கொல்கத்தா அணியை முடக்கிப் போட்டுவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய துருப்புச் சீட்டாக உருவெடுத்துள்ள ரஹானே தொடர்ச்சியாக தனது மெகா அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுவதால் இம்பாக்ட் பிளேயர் விதி மூலம் தற்காலிகமாக வாய்ப்பு பெற்ற ரஹானே, அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ரஹானே 2.0 விஸ்வரூபத்தைப் பார்த்து ரசிகர்களே மெய்சிலிர்த்துப் போயுள்ளனர்.
ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் பல வீரர்கள் இடம்பிடித்த முன்னுதாரணம் இருப்பதால், எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு நான்காவது வரிசை பேட்ஸ்மேனாக ரஹானே தேர்வானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு அவரது ஆட்டத்தில் உள்ள நேர்த்தியும், கிரிக்கெட் நுட்பமும், கிளாசிக் ஷாட்களை ஆடும் ஸ்டைலும் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வல்லுநர்களையுமே மாய்ந்துமாய்ந்து ரசிக்க வைத்துள்ளது.
இமாலய இலக்கால் கொல்கத்தாவுக்கு அழுத்தம், நெருக்கடி
ஐ.பி.எல். வரலாற்றில் எந்த அணியும் இந்த இலக்கை சேஸிங் செய்தது இல்லை என்பதால், 235 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தபோதே வெற்றி என்பது ஏறக்குறைய 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள 10 சதவீதம் சிஎஸ்கே அணியின் திட்டமிடலுக்கும், செயல்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
அதுமட்டுமல்லாமல் 235 ரன்களை எதிரணி அடித்துவிட்டாலே, சேஸிங் செய்யும் அணிக்கு மனதீரியான அழுத்தம் ஏற்பட்டுவிடும். அதற்கு கொல்கத்தா அணியும் விதிவிலக்கு அல்ல. கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், ஆந்த்ரே ரஸல், வெங்கடேஷ், ராணா, சுனில் நரேன் ஆகியோரிடம் இருந்து மிகப்பெரிய ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. இதுபோன்ற பெரிய ஸ்கோரை துரத்தும்போது, சேஸிங்கில் உள்ள அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சேர்ந்து “ஃபயரானால்” மட்டுமே வெற்றியை நெருங்க முடியும்.
ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை
ஈடன் கார்டனில் நேற்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கொடுத்த காசுக்கு நல்ல வாண வேடிக்கையை பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக சிஎஸ்கே அணி 18 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளை பறக்கவிட்டது.
ஐபிஎல் தொடரில் ஒரே ஆட்டத்தில் 21 சிக்ஸர்களை விளாசிய ஆர்சிபி அணி 2013, ஏப்ரல் 23ம் தேதியில்தான் அந்த சாதனையை நிகழ்த்தியது. 2022, ஏப்ரல் 23ம் தேதி(நேற்று) அந்த சாதனையை ஈடு செய்ய சிஎஸ்கே அணிக்கு 3 சிக்ஸர்கள் மட்டுமே குறைவாக இருந்தது.
கொல்கத்தா அணி சார்பிலும் 12 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் விளாசப்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டத்தில் 30 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமைந்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் தோனியைத் தவிர களம்கண்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிக்ஸரை விளாசினர். தோனிக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால், சிக்ஸர் பறக்கவிட்டிருப்பார் ஆனால் கடைசி 3 பந்துகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது துரதிர்ஷ்டம்.
ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள்மயம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று 60ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். எங்கு பார்த்தாலும், மஞ்சள் மயம். ரசிகர்கள் சிஎஸ்கே அணியை வரவேற்கும் விதத்திலும், குறிப்பாக “கிங் ஆஃப் ஈஸ்ட்” மகேந்திர சிங் தோனியை வரவேற்கவே ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு இருக்கும் ரசிகர்களைவிட சிஎஸ்கேவுக்குதான் ஆதரவு அதிகமாக இருந்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 4 போட்டிகளில் 3 ஆட்டங்கள் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. அது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.
காயமடைந்தவர்களால் ஏதும் செய்ய முடியாது. ஆதலால் அந்த நேரத்தில் எந்த வீரர் சிறப்பாக தயாராகிருக்கிறார்களோ, அந்த இளம் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது, அவர்களை ஊக்கப்படுத்துகிறேன். இது தொடரும் என நம்புகிறேன். ஒருவரிடம் திறமை இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அவரை அவரின் ஸ்டைலில் விளையாட அனுமதிக்க வேண்டும். உங்கள் பலம்தான் உங்களை முன்னோக்கி நகர்த்தும், அதை அனுபவித்து செய்ய வேண்டும். அதுபோன்ற வீரர்களை சரியான இடத்தில் களமிறக்கி ரன் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
சி.எஸ்.கே.வின் துருப்புச்சீட்டு கான்வே
வெளிநாட்டு வீரரான டெவோன் கான்வே இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் அநாயசமாக எதிர்கொண்டு விளையாடி வருகிறார்.
இந்த ஐபிஎல் சீசனில் கான்வே தொடர்ந்து 4வது அரைசதத்தை(50, 83,77, 56) பதிவு செய்தார். இதற்கு முன் சிஎஸ்கேயில் இருந்த டுப்ளெஸ்ஸி மட்டுமே தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்திருந்த நிலையில் தற்போது கான்வேயும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
அடுத்துவரும் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக கான்வே இருக்கப் போகிறார்.
ரஹானே ராஜ்ஜியம் - மிரளும் எதிரணிகள்
இந்த ஐபிஎல் சீசனில் ரஹானேவின் விஸ்வரூபத்தை குறிப்பிட்டே தீர வேண்டும். இது ரஹானேவா என்று கேட்கும் அளவுக்கு அவரின் அதிரடி ஆட்டம், சிக்ஸர்களை பார்க்கும் ரசிகர்களை மிரள வைக்கிறது.
ரஹானே களத்துக்கு வந்து மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கி, பின்னர் அவரின் பேட்டிங்கும், ஷாட்களும் டாப் கியரில் சென்றது. கேகேஆர் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்து, வெளுத்து வாங்கிய ரஹானே 24 பந்துகளில் அரைசதம்அடித்தார். இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதையும் ரஹானே வென்றார்.
உமேஷ் வீசிய 15வது ஓவரில் இருந்து ரஹானே ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். உமேஷ் ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை ரஹானே விளாசினார்.
ரஸல் ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்த ரஹானே இந்த சீசனில் 2-வது அரைசதம் அடித்தார். வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ரஹானே விஸ்வரூபமெடுத்தார். இந்த ஐபிஎல் சீசனில் ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் 199, சராசரி 52.55 என்பது மிரட்டலானது.
ஆட்டநாயகன் விருது வென்ற ரஹானே கூறுகையில் “ தெளிவான மனநிலையில் விளையாடினேன், வேறேதும் இல்லை. சரியாக இருந்தால், எதையும் செய்யலாம், என் மனதை தெளிவாக வைத்திருக்கிறேன். இந்த சீசனுக்காக நான் நன்றாகத் தயாராகி இருந்தேன். இந்த சீசனில் எனது ஆட்டத்தை ரசிக்கிறேன். தோனியின் கீழ் விளையாடும்போது அதிகமான விஷயங்களைக் கற்கிறேன், சிஎஸ்கேவுக்காக முதல்முறையாக ஆடுகிறேன். தோனி என்ன சொன்னாலும் கவனித்தால் போதும்” எனத் தெரிவித்தார்.
சிக்சர் மன்னன் ஷிவம் துபே
ஷிவம் துபேவும் சளைக்காமல் ரஹானேவுக்கு ஈடாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருவரும் களத்தில் இருக்கும்போது ரசிகர்கள் வானத்தை நோக்கியே இருக்கும் அளவுக்கு சிக்ஸர்கள் பறந்தன. துபே 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இருவரும் சேர்ந்து 32 பந்துகளில் 85 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தநிலையில் 7-வது முதல் 15 ஓவர் வரை மட்டும் 102 ரன்கள் சேர்த்தது. இதுதான் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும்.
ஷிவம் துபே கூறுகையில் “ இந்த முறை ரசித்து சிக்ஸர் அடித்தேன், அனைத்தும் நன்றாக முடிந்தது. அணியின் ரன்ரேட்டை உயர்த்த எனக்கு பணி கொடுக்கப்பட்டிருந்தது, அதை அனுபவித்துச் செய்தேன். கடந்த காலத்தில் கேகேஆர் சுழற்பந்துவீச்சாளர்களிடம் திணறியிருக்கிறேன், அதை மனதில் வைத்து இன்று விளையாடினேன். ரஹானே எனக்கு ஸ்ட்ரைக்கை மாற்றி அமைத்து எனக்கு உதவினார்” எனத் தெரிவித்தார்.
இமாலய இலக்கால் மலைத்துப்போன கொல்கத்தா
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை 235 ரன்கள் என்ற இமாலய இலக்கு பேட்ஸ்மேன்களுக்கு மலைப்பை ஏற்படுத்தி இருக்கும். அதிலும் தொடக்கத்திலேயே சுனில் நரேன், ஜெகதீசன் விக்கெட்டுகளை இழந்தபோதே, கொல்கத்தா பக்கம் நெருக்கடி தொற்றிக்கொண்டது.
சுனில் நரேன் கைதேர்ந்த பேட்ஸ்மேன் கிடையாது. ஏதாவது ஒரு போட்டியில் ஒரு கேமியோ ஆடுவார் என்பதற்காக அவரை இன்னும் கேகேஆர் அணி பேட்ஸ்மேன் பட்டியலில் வைத்திருப்பதும், தொடக்கவீரராக களமிறக்குவதும் வேடிக்கையாக இருக்கிறது.
ஜேஸன் ராய் தந்த நம்பிக்கை
காயத்தால் அவதிப்பட்டிருந்த ஜேஸன் ராய் நடுவரிசையில் களமிறங்கி தனக்கே உரிய கேமியோவை ஆடினார். பெரிதாக ரன்களை ஓடி எடுக்காமல் க்ரீஸில் இருந்தபடியே சிக்ஸர், பவுண்டரிகளை ஜேஸன் ராய் விளாசித் தள்ளினார். குறிப்பாக மொயின் அலி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை ராய் அடித்து நொறுக்கினார். 21 பந்துகளில் ஜேஸன் ராய் அரைசதம் அடித்தார்.
ஜேஸன் ராய் களத்தில் இருந்தவரை கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்ந்தது. ஜேஸன் ராய்க்கு துணையாக ரிங்கு சிங்கும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார்.
ரிங்கு சிங் போராட்டம்
தீக்சனா பந்துவீச்சில் ஜேசன் ராய் 61 ரன்னில் போல்டாகி வெளியேறினார். கேப்டன் ராணா 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசியாக களமிறங்கிய ரஸல்(9), டேவிட் வீஸ்(1) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ரிங்கு சிங் 53 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் 235 ரன்கள் சேஸிங் என்பது எளிதானது இல்லை. ரஹானேவுக்கு பாராட்டுகள். பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் தவறுகளைச் செய்தால் பின்நோக்கிதான் செல்ல வேண்டியதிருக்கும். பெரிய ஸ்கோரை துரத்தும்போது, பவர் ப்ளேயில் நல்ல தொடக்கம் தேவை அது கிடைக்கவில்லை. அதனால்தான் போட்டியில் தோற்றோம்” எனத் தெரிவித்தார்.
சென்னை அணி முதலிடம் - புதிய சாதனை
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 வெற்றிகள் கிடைத்தாலே போதுமானது.
சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணி நேற்று விளாசிய 235 ரன்கள் என்பது இந்த ஐ.பி.எல். சீசனில் அதிகபட்ச ஸ்கோராகும். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிதான் அதிகமுறை, அதாவது 26 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே.