உடல் பருமன் பிரச்சனை: சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும்.
உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் பருகமாட்டார்கள். திரவ உணவுகளை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நொறுக்குத் தீனிகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக வெறுமனே பழ ஜூஸ் மட்டும் கொடுக்கக்கூடாது. தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்ற பிற திரவ உணவுகளை சாப்பிட வைக்கலாம். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடல் எடையை நிர்வகிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க முடியும்.
காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வைக்கலாம். இது குடல் இயக்கம் சீராக நடைபெறவும், எடை மேலாண்மையை பராமரிக்கவும் உதவும். நொறுக்குத் தீனிக்கு மாற்றாக பழ சாலட் கொடுப்பது முக்கியமானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். தினமும் இரண்டு வகைப் பழங்களைச் சாப்பிடலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி நட்ஸ் உட்கொள்ளலாம். இவை அதிக ஊட்டச்சத்து மிக்கவை. ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவை. எனவே இதனை தவிர்க்கக்கூடாது. தினமும் முந்திரி அல்லது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது.