நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபயர் 2 முன்னேறிய நிலையில் ஆகாஷ் மத்வாலின் விக்கெட்டுகள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.
நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி மும்பை – லக்னோ இரு அணிகளுக்குமே முக்கியமானதாக அமைந்தது. இதில் வெல்லும் அணிகள் குவாலிஃபயர் 2 சென்று குஜராத் டைட்டன்ஸுடன் மோத வேண்டும்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணியில் யாருமே ஒரு அரை சதம் கூட வீழ்த்தாத நிலையில் அணியின் ஸ்கோர் 182 ஆக இருந்தது. இந்த ரன் இலக்கு லக்னோவுக்கு மிக எளிதாக இருக்கும் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே ஆரம்பத்தில் பலரும் நினைத்தார்கள்.
ஆனால் மும்பை அணி பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் காட்டிய மாஸ் பலரையும் வியக்க வைத்தது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் ஆகாஷ் மத்வாலின் செய்கை லக்னோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2வது ஓவரிலேயே மன்கட்டின் விக்கெட்டை தூக்கிய மத்வால், 10வது ஓவரில் பதோனி, பூரண் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார். அந்த 10வது ஓவரிலேயே 3 டாட் பந்துகள், 2 விக்கெட்டுகள், 1 சிங்கிள் மட்டும்தான்.
இதுதவிர தீபக் ஹூடாவை ரன் அவுட் செய்தது மத்வாலின் கொசுறு உதவி. அடுத்து 15வது ஓவரில் பிஷ்னோயை காலி செய்ததுடன், மொஷின் கானையும் மத்வால் கதை முடித்தார்.
மொத்தம் 3.3 ஓவரே வீசியிருந்த ஆகாஷ் மத்வால் மொத்தம் கொடுத்ததே 5 ரன்கள் மட்டும்தான். 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை அசால்ட்டாக தூக்கிய மத்வாலை கண்டு மற்ற அணிகளுமே மிரண்டிருந்தால் ஆச்சர்யமில்லை. இவ்வளவு குறைவான ஓவர்களில் குறைவான ரன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் மத்வால். நேற்றைய ஆட்டத்தின் நாயகனாக மாறியுள்ள மத்வால் அடுத்தடுத்த போட்டிகளிலும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.