நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று மாலை நேர போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்களை குவித்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய மும்பை அணி 162 ரன்களுடன் தோல்வியை தழுவியது.
கடந்த பல சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை அணிக்கு வந்த ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்ட்யா திட்டமிட்டு பறித்துக் கொண்டதாக குற்றம் சாட்டி வந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே ரோஹித் சர்மா ஆதரவு vs பாண்ட்யா ஆதரவு என சிவில் வார் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்கியது. மைதானத்தில் ஃபீல்டிங்கில் நின்ற ரோகித் சர்மாவை மைதானத்தை சுற்றி பல பகுதிகளுக்கும் விரட்டி அடித்ததும், அவமானப்படுத்தும் விதமாகவும் ஹர்திக் பாண்ட்யா நடத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாண்ட்யாவை கண்டித்து வருகின்றனர்.
மேலும் ரோஹித் சர்மா பேட்டிங் வந்தபோது உற்சாகமாக ரோஹித் ரோஹித் என கத்திய ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யா வந்தபோது கண்டனம் தெரிவித்து கத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.