கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது. 240 ரன்கள் என்ற நியுசிலாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை மளமளவென இழந்து 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து போராடியது.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தோனியும் ஜடேஜாவும் 7 ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து அசத்தினர். ஆனால் கடைசி நேரத்தில் ஜடேஜாவும் தோனியும் அவுட் ஆனதும் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த போட்டியில் 72 பந்துகளில் 50 ரன்களை சேர்த்த தோனி , கெடுவாய்ப்பாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டிக்கு பின் ஒரு ஆண்டு எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடாத தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.