நாட்டிங்காமில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். போட்டியின் 19-வது ஓவரில் ஜேசன் ராய் 82 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார்.
இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் பேர்ஸ்டோவ் 139 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்கன் மைதானத்தில் வான வேடிக்கை நடத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் எடுத்தது. ஒருநாள் போட்டியில் ஒரு அணி அடித்த அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது, இதனையடுத்து, அந்த அணி 30 ஒவர்களில் 239 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.