ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சிங் இந்திய அணியில் இணைவதற்கான வழி திறந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து ஆகாஷ் தனது அறிமுக தொப்பியை வாங்கினார். சிவந்த கண்களுடன் அன்னையின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். ஆகாஷ் அறிமுகமான முதல் ஒரு மணி நேரத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஆகாஷ் தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் விளையாடிய 313வது வீரர் ஆவார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை 'கிளீன் பவுல்' செய்து கிரிக்கெட் கனவுக்கான தூரத்தை குறைத்தார் ஆகாஷ். ஆகாஷ் பீகாரில் உள்ள சசரம் கிராமத்தில் பிறந்தார். ஆகாஷுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் இருந்தது. ஆனால் கிரிக்கெட் விளையாடினால் மகனின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று ஆகாஷின் தந்தை நினைத்தார். அதனால் ஆகாஷின் கிரிக்கெட் ஆர்வத்தை அவரது தந்தை ராம்ஜி சிங் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார்.
ஆகாஷ் வேலை தேடி துர்காபூர் நகருக்கு வந்து தனது மாமாவின் உதவியுடன் ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அப்போது ஆகாஷின் வேகப்பந்து வீச்சு அதிகம் கவனிக்கப்பட்டது. ஆனால் அவரது தந்தை மாரடைப்பால் இறந்த பிறகு, ஆகாஷ் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தார். தொடர்ந்து அவரது மூத்த சகோதரர் திடீரென இறந்தது ஆகாஷுக்கு இரட்டை அடியாக இருந்தது.
தந்தை மற்றும் மூத்த சகோதரர் இறந்ததால், வீட்டின் பொறுப்பு ஆகாஷின் தலையில் விழுந்தது. ஆகாஷுக்கு அம்மாவை கவனித்துக் கொள்ள் வேறு வேலை கிடைத்தது. மூன்று வருடங்கள் கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வு எடுத்தார். அப்போதும் ஆகாஷ் தீப் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை. வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் கிரிக்கெட் பயிற்சிக்குத் திரும்பினார். கொல்கத்தா நகருக்குச் சென்று தனது உறவினர் வழி சகோதரனுடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கிரிக்கெட் முயற்சிகளை மேற்கொண்டார். 2019 ஆம் ஆண்டில், பெங்கால் U-23 அணியில் அறிமுகமானபோது ஆகாஷின் திறமைகளை வெளியே தெரியவந்தது. 2022 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகாஷை வாங்கியது. RCB அடிப்படை விலையான 20 லட்சத்தை செலவழித்து ஆகாஷை தங்கள் கோட்டைக்கு அழைத்து வந்தது.
இப்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஆகாஷ் தீப் அசாதாரணமான ஆட்டத்தால் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக அவர் உயர வாய்ப்புகள் உள்ளது.