இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட கம்பீர், இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் கேப்டனாக செயல்பட்ட போது நடந்த ஒரு சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார். கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெக்கல்லத்தை 2012 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் எடுக்காததற்காக அவரிடம் அணியின் வீரர்கள் அனைவர் முன்பும் மன்னிப்புக்கேட்டேன் எனக் கூறியுள்ளார்.
அதில் “அணியில் உங்களை எடுக்காததற்குக் காரணம் உங்களின் பெர்ஃபாமன்ஸ் இல்லை. நமது அணியின் ஓப்பனிங் காம்பினேஷன்தான் காரணம் எனக் கூறினேன். அனைவர் முன்பும் மன்னிப்புக் கேட்கும் தைரியம் எனக்கு இருந்தது. நான் மன்னிப்புக் கேட்காமல் இருந்திருந்தால் இப்போது எனக்கு குற்ற உணர்ச்சி இருந்திருக்கும். தலைமைத்துவம் என்பது பாராட்டுவது மட்டுமில்லை. மன்னிப்புக் கேட்பதும்தான்” எனக் கூறியுள்ளார்.