உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று நடந்த கடைசி சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி வங்கதேசத்தை வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 19 ஓவர்களில் 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதன் முதலாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் இறுதிகட்டத்தில் இரு அணிகளும் சம வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அப்போது மழை வருவது போல இருந்தது. மழை வந்து போட்டி தடைபட்டால் அது ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகம் என்பதால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜானதான் ட்ராட் மெதுவாக விளையாடுங்கள் என்று பெவிலியனில் இருந்து சிக்னல் கொடுத்தார்.
அதைப் பார்த்த ஆப்கான் வீரர் குல்புதீன் ஸ்லிப்பில் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டு வலிப்பது போல கீழே விழுந்து நடிக்க ஆரம்பித்தார். உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் போட்டி முடிந்த போது வெற்றி உற்சாகத்தில் மின்னல் வேகத்தில் ஓடி கொண்டாடினார். இதன் மூலம் அவர் வேண்டுமென்ற தசைப்பிடிப்பு வந்தது போல நடித்தது தெரியவந்துள்ளது. இதை இப்போது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.