பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். அவசியமின்றி மக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என்று காவல் துறையினர் வலியுறுத்தினாலும் மக்கள் பலர் அதை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் போலீஸார் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்வது, சிறிய அளவிலான தண்டனைகள் அளிப்பது உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஒரு பகுதியில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை கேள்வி கேட்டதால் காவலர் ஒருவரை இளைஞர்கள் இருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் தன் குடும்பங்களை விட்டுவிட்டு தங்கள் உயிரை பணயம் வைத்து நமக்காக காவல் பணியில் இருக்கும் காவலர்களை தாக்குவது மோசமான காரியம். தயவு செய்து வீடுகளில் அமைதியாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
போலீஸை மக்கள் தாக்கியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலீஸ் மட்டும் பொதுமக்களை தாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.