இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா விரைவில் பந்துவீச்சுக்கு திரும்புவேன் எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்திய அணி வீரர்களின் பவுலிங் மிக மோசமாக இருந்ததால் 374 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் விரைவாக அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணியில் இடம்பெற்ற ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தோல்விக்குக் காரணமாக அணியில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லாததே காரணம் என கோலி சொல்லியுள்ள நிலையில் ஹர்திக் பாண்ட்யா அதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசியுள்ளார். அதில் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். பந்துவீச்சில் சர்வதேச தரத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறேன். நீண்டகால திட்ட அடிப்படையில் டி20 உலககோப்பை உள்ளிட்ட தொடர்களில் என்னுடைய பந்து வீச்சு கூட முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.