முதல் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
நேற்றைய முதல் நாள் முடிவில் 364 ரன்களை சேர்த்திருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் பிருத்வி ஷா 132 ரன்களும், கேப்டன் கோலி 139 ரன்களும் ஜடேஜா 100* ரன்களும் சேர்த்து அணி அதிக ரன் குவிக்க உதவினர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து பேட் செய்த மே.இ.தீ. அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ரோஸ்டன் ச்சேஸ்(27) மற்றும் கீமோ பால்(13) அதிகபட்ச ரன்களை சேர்த்து களத்தில் உள்ளனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
இந்திய அணி சார்பில் ஷமி 2 விக்கெட்டையும் அஷ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.