ஒன்றிய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக, பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11 மற்றும் மை சர்க்கிள் 11 ஆகிய ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தங்களது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமடையக் காரணமே இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான்.
அவர்கள் தொடர்ந்து இந்த செயலிகளைப் ப்ரமோட் செய்து விளம்பரங்களில் நடித்தனர். மேலும் பிசிசிஐ உடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்தனர். இந்நிலையில் இந்த செயலிகளின் தடையால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த செயலிகள் மூலம் பெற்றுவந்த வருவாயை இழக்க உள்ளனர். இது ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.