சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரும் பிசிசிஐயின் ஒப்பந்த அணியில் சேர்க்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த இரண்டு போட்டிகளிலும் இளம் கிரிக்கெட் வீரர்களான ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இரண்டாவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 68 ரன்களும், ஷிவம் துபே 63 ரன்களும் குவித்தனர்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரையும் பிசிசிஐ தனது மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. பிசிசிஐயின் மத்திய பிரிவில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ.7 கோடியாகும். ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.