நேற்று நடந்த உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வீழ்த்திய நிலையில் அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சேர்ந்த வீரர்கள் பக்கம் பலரது கவனமும் திரும்பியுள்ளது.
ஐசிசி உலக கோப்பை டி20 போட்டியில் நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதிக் கொண்ட நிலையில் இரு அணிகளுமே 159 ரன்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது. அதில் அமெரிக்கா 18 ரன்களை எடுத்த நிலையில் பாகிஸ்தானை 13 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் அமெரிக்காவுக்காக விளையாடிய சவுரப் நெத்ரவால்கர் பெயர் பலருக்கும் தெரியத் தொடங்கியுள்ளது. 20 ஓவர்களுக்கு நடந்த போட்டியில் நெத்ரவால்கர் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சூப்பர் ஓவரிலும் 1 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த சவுரப் நெத்ரவால்கர் இந்தியாவை சேர்ந்தவர். கிரிக்கெட்டில் பெரும் விருப்பத்துடன் இருந்த நெத்ரவால்கர் 2010ம் ஆண்டில் நடைபெற்ற U-19 உலக கோப்பையில் விளையாடியவர். இடது கை பவுலரான நெத்ரவால்கருடன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஜெயதேவ் உனத்கட் உள்ளிட்டோரும் அந்த சமயத்தில் விளையாடினர். ஆனால் இந்திய அணியின் சீனியர் அணியில் இவர்கள் எல்லாருக்கும் இடம் கிடைத்தாலும் நெத்ரவால்கருக்கு கிடைக்கவில்லை.
இதனால் மனவிரக்தியில் கிரிக்கெட்டை உதறி தள்ளிய நெத்ரவால்கர் பொறியியல் படிப்புகளுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் கிரிக்கெட் அவரை விடுவதாக இல்லை. அங்கு படிப்பு போக மீதி நேரம் பகுதியாக கிரிக்கெட் விளையாட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அவரது சிறப்பான ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை தேசிய அணியில் இடம்பெற செய்தது. 2018ம் ஆண்டில் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணைந்த நெத்ரவால்கர் அதன் கேப்டனாகவும் சில போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.
தற்போது நெத்ரவால்கர் அமெரிக்காவுக்காக விளையாடி வரும் நிலையில் தனது சொந்த நாடான இந்தியாவின் அணியை எதிர்கொள்ள உள்ளார்.