பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த மிக நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி 20 மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா அணியை நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கரைதேற்றினார். அந்த இன்னிங்ஸில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பல பந்துகள் அவரின் உடலை தாக்கின.
இந்நிலையில் இப்போது அந்த இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள புஜாரா அந்த இன்னிங்ஸ் நான் விளையாடியதிலேயே மிகவும் கடினமானது. விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் நாங்களோ விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற முடிவில் ஆடினோம். அதனால் அவர்கள் மேல் அழுத்தம் கூடியது. ஆடுகளத்தின் ஒரு முனையில் பந்து வேகமாக எழும்பியது. அந்த முனையில்தான் நான் அதிகமாக அடிவாங்கினேன். இன்னும் அந்த காயங்கள் ஆறவில்லை எனக் கூறியுள்ளார்.