நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ராஜஸ்தான் அணி பட்டப்பாடு இருக்கே.. அந்த வீடியோவை நீங்களே பாருங்க!
ஞாயிற்றுக்கிழமை என்றால் சும்மாவே ஐபிஎல் ஆட்டங்கள் சூடு பிடிக்கும். நேற்று குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாக முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி வைத்த 178 என்ற டார்கெட்டை அடைவதற்குள் பல போராட்டங்களை சந்தித்த ராஜஸ்தான் அணி ஒரு ரன் கூடவே சேர்த்து 179ஆக வெற்றிக் கணக்கை எழுதிக் கொண்டது.
இந்த போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹாவை தூக்கினால் குஜராத்தின் நம்பிக்கையை அசைத்து பார்க்கலாம் என நினைத்த ராஜஸ்தான் அதற்கான முயற்சிகளில் இறங்கியது. ட்ரெண்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஒரு பவுண்டரியை பறக்கவிட்ட சாஹா ஒரு அசாத்திய தைரியத்தில் அடுத்த பந்தை சிக்ஸுக்கு தூக்கினார்.
ஆனால் பந்து தூரம் போகாமல் உயரம் மட்டும் சென்றதால் மீண்டும் மைதானத்துக்குள் வந்து கொண்டிருந்தது. அதை எப்படியாவது கேட்ச் பிடித்துவிட வேண்டும் என பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஓடி வர, அதேசமயம் அந்த பந்தை பிடிக்க ஒரு பக்கத்திலிருந்து ஹெட்மயரும், மற்றொரு பக்கத்திலிருந்தும் ஜூரெலும் ஓடி வந்தனர். சரியாக பந்து தரையை நெருங்கும்போது மூவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு தடுமாறி கீழே விழுந்தனர். ஆனாலும் பக்கத்தில் நின்ற பந்துவீச்சாளர் ட்ரெண்ட் பவுல்ட் சூதானமாக செயல்பட்டு பந்தை கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.
ஒரு பந்தை பிடிக்க மூன்று பேரும் வந்து முட்டி மோதி கடைசியில் பந்தையும் பிடிக்கவில்லை. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதை பலரும் ஷேர் செய்து நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.