கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப் பட்டு வந்தது.
இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த என் சி ஏ அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து தற்போது பிசிசிஐ ரிஷப் பண்ட் 100 சதவீத உடல் தகுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பண்ட்டின் மறுவருகை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றிருந்தாலும், ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடுவது கடினம். அதனால் அவர் பழைய அதிரடி ஆட்டத்துக்கு செல்ல உடனே முடியாது. அவர் விக்கெட் கீப்பிங் பணிகளை எப்படி செய்யப் போகிறார் என ஆர்வமாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.