இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக இப்போது ஈஸ்ட் ஸோனின் தலைவர் ஷிவ சுந்தர் தாஸ் இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அப்போதைய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அது பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியதால் அவர் பின்னர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இதனால் இப்போது இடைக்கால குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக நார்த் ஸோனில் இருந்து சேவாக் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்காக சேவாக் விண்ணப்பிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியின் படி சேவாக் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லையாம்.
அதற்குக் காரணம் தேர்வுக்குழு தலைவருக்கு வழங்கப்படும் குறைவான சம்பளம்தானாம். அந்த பதவிக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை சேவாக் மிக குறைவானது என நினைப்பதாக சொல்லப்படுகிறது.