ராஜஸ்தான் மாநில தேர்தலில் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் விளம்பரம் செய்த கட்சியினரை சேவாக் தனது டிவிட்டர் மூலம் சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் எந்த அளவுக்கு கலகலப்பானவரோ அதே அளவுக்குக் கோபமானவரும் கூட. தற்போது தனது கோபத்தைக் கிளறிய ஒரு செயலுக்குக் காட்டமாக எதிர் வினையாற்றியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் போது சேவாக்கின் அனுமதி இல்லாமல் அம்மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி தங்களது கட்சி விளம்பரங்களில் சேவாக் பெயரை உபயோகப்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் டி 10 போட்டியில் ஒரு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சேவாக் இந்த விஷயத்தை நண்பர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதையடுத்து இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ள விளம்பரங்களை டிவிட்டரில் பதிந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘ தற்போது நான் துபாயில் இருக்கிறேன். எந்தவிதமான கட்சியுடனும் நான் எந்தத் தொடர்பிலும் இல்லை. இந்த பொய்யர்களுக்கு ஒரு எச்சரிககை. இவர்கள் சிறிதுகூட வெட்கம் இல்லாமல், எனது பெயரைப் பயன்படுத்தி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். மக்களை ஏமாற்ற என் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். ஆட்சிக்கு வருவதற்காக மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள். ’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.