இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும். இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
”ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் ”பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். இதில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ”சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறும்.
இதிலிருந்து இரு அணிகள் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வரும் 18ம் தேதி ஹாங்காங் அணியுடனும் அதற்கு மறுநாளே பாகிஸ்தான் அணியுடனும் மோதுகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 19ம் தேதி மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு உள்ளது.